? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: உபாகமம் 5:1-33

நமது தேவனாகிய கர்த்தர்

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த படியே செய்யச் சாவதானமாயிருங்கள். வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்பீர்களாக. உபாகமம் 5:32

மோட்ச பிரயாணத்தைத் தொடர்ந்த கிறிஸ்தியான், சிலுவையடியில் தன் பாரங்கள் கழன்றோடிய உன்னத அனுபவத்தைப் பெற்றிருந்தும் சரியான பாதையைத் தெரிவு செய்வதில் ஏற்பட்ட தடுமாற்றத்தை அழகாகச் சித்தரித்தரிக்கின்றது. குறுகிய பாதை, விசாலமான பக்கவழி, பெரும்பாதை, நேர்பாதை என கிறிஸ்தியானைத் தடுமாற, தீர்மானங்களை எடுத்தும் பல சிரமத்திற்கு ஆளாக்கின.

சீனாய் மலையிலே கர்த்தரிடமிருந்து கற்பனைகளை மோசே பெற்றுக்கொண்டாலும், அதில் தவறிய சந்ததியினர் வனாந்தரத்திலேயே மாண்டுபோனார்கள். அந்தத் தவறை அடுத்து வரும் சந்ததியினர் செய்யக்கூடாது என்ற ஆதங்கத்தில், “வலது இடதுபுறம் சாய்ந்துவிடவேண்டாம்” என்கிறார் மோசே. அதற்கு மோசே மூன்று விடயங்களை கூறுகிறார். ஒன்று, கேளுங்கள்; இரண்டு, கற்றுக்கொள்ளுங்கள்; மூன்றாவது அவைகளின்படியே நடவுங்கள் என முதல் வசனத்தில் கூறுகின்றார். கிறிஸ்துவின் மூலமாகப் புதிய உடன்படிக்கை தந்து, தமது ஜீவனையே கொடுத்த நமது கர்த்தர் இதனையே எதிர்பார்க்கிறார். முதலாவது, தேவனைக்குறித்தும் தேவ வார்த்தைகளைக் குறித்தும் நாம் உள்வாங்கி அதை ஏற்றுக்கொள்வதே “கேட்பது” ஆகும். இரண்டாவதாக, வார்த்தையின் அர்த்தத்தையும், கர்த்தர் நம்மிடம் எதிர்பார்ப்பதையும் புரிந்துகொள்வதே “கற்றுக்கொள்வது” ஆகும். மூன்றாவதாக, கேட்டுப் புரிந்து கொண்டதை நம் வாழ்வில் செயற்படுத்துவதே அதன்படி “நடப்பது” ஆகும்

இதுதான ; கர்த்தருடைய வழி, இதுவே நேர்வழி. “நானே வழி” என்று தெளிவாகக் கூறினார் இயேசு. அது சிலுவை சுமக்கும் வழிதான்; அது உபத்திரவத்தின் வழிதான். ஆனால் அதுதான் வழி. இஸ்ரவேலுடன் கர்த்தர் வழிநடந்தும் அவர்கள் அடிக்கடி கர்த்தருடைய வழியைவிட்டு விலகினார்கள்; அதன் பலனை அனுபவித்தார்கள். இன்று இயேசுவைப் பின்பற்றி அவர் வழியில் நடக்க அழைக்கப்பட்ட நாம் எவ்வழியில் நடந்து கொண்டிருக்கிறோம்? நம்மைத் திசைதிருப்ப, இச்சைகளைத் தூண்டிவிட, இலேசான வழியைக் காட்டி ஏமாற்ற சத்துரு நமது பாதையில் ஒளிந்து காத்திருக்கிறான். “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்” (எரே.10:23) என்று கூறி, நம்மைத் தேவகரத்தில் ஒப்புவிப்போம். அப்போது, “நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும் போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும், வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்” (ஏசா.30:21) என்ற வார்த்தையின் உண்மைத்துவத்தை நாம் நிச்சயம் உணருவோம். என்ன இடர் நேரிடினும் தேவவார்த்தையைப் பற்றிடத் தேவஉதவியை நாடுவோமா!

? இன்றைய சிந்தனைக்கு:

இன்று நான் சென்றுகொண்டிருக்கிற வழியை உண்மைத்து வத்துடன் ஆராய்வேனாக. 2கொரி.6:3-10ஐ வாசித்து, இன்று என் நிலை என்னவென்பதை உணர்ந்து, மனந்திரும்புவேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin