9 பெப்ரவரி, 2021 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 22:1-6

உன்னத தியாக பலி

உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு… அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். ஆதியாகமம்  22:2

‘பிறரை நேசிப்பது நம்முடைய பலவீனத்தைக் காட்டுகிறது. எதையாவது நேசியுங்கள்; உங்கள் உள்ளம் பிழியப்பட்டு, அன்பினால் உருகி உடைந்துபோகும்” என்றார் சி. எஸ். லூயி. தேவன் தமது உன்னதமான அன்பின் நிமித்தம் தமது குமாரனையே எமக்காக தியாகம் செய்தார். அந்த உன்னத அன்பை நாம் உணருகிறோமா?

ஆபிரகாமும் அப்படியே தியாக அன்பை உணர்ந்திருப்பார். ஆரானைவிட்டுத் தன் குடும்பத்தோடும் உறவினரோடும், மிருகஜீவன்கள் உடைமைகளோடும் புறப்பட்டுச் சென்ற ஆபிரகாம், விசேஷித்த மகனைப் பெற்றுக்கொள்ள 25 ஆண்டுகள் காத்திருந்தார். தேவன் வாக்குப்பண்ணிய ஆசியைப் பெறும்போது அவருக்கு வயது 100. தனது பிரியமான, உயிரான குமாரன் ஈசாக்கை மோரியா மலையில் தகனபலியாக கொடுக்கும்படி தேவன் சொன்னபோது ஆபிரகாமுக்கு எப்படி இருந்திருக்கும்? விசுவாசத்தின் உறுதியால் தேவன் இட்ட கட்டளைக்குக் கீழ்ப்படிவதாகக் கூறினாலும், ஆபிரகாமின் உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை நம்மால் உணரமுடியும். அது ஒரு உன்னதமான இறுதித் தியாகபலியாக இருந்தது.

இப்படியான இறுதித் தியாக பலியைச் செலுத்த முன்வந்தது ஆபிரகாம் மாத்திரமல்ல; தேவனோ, தம்முடைய ஒரேபேறான குமாரன் இயேசுவைச் சிலுவையில் ஏகபலியா கவே ஒப்புக்கொடுத்தார். இத்தகைய பலியைச் செலுத்துவதில், தேவன் தமது குமாரனையே விலக்கி வைக்கவில்லை என்கிறார் பவுல். நம்மெல்லாருக்காகவும் தேவன் அவரை ஒப்புக்கொடுத்தார் (ரோமர் 8:32). உன்னத பலியின் வலியை நமது ஆண்டவர் அறிந்திருக்கிறார். ஆண்டவர் உங்களிடம் எப்போதாவது இப்படி ஒரு பலியைக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறாரா? அது ஒருவேளை ஒரு குழந்தையின் மரணமாக இருக்கலாம். குடும்பத்தில் ஒருவருக்குப் புற்றுநோய் வந்திருக்கலாம். ஒருவரின் வங்கிக்கணக்கு திவாலாகிவிட்டது என்ற செய்தி வந்திருக்கலாம். அப்போது உங்கள் வாழ்க்கை சாம்பலாகிப்போனது என்று நினைத்தீர்களா? நம்பிக்கையற்று இருக்கிறீர்களா? உங்கள் கண்களை ஆண்டவரை நோக்கி உயர்த்துங்கள்.

அன்பு சகலத்தையும் தாங்கும். உங்கள் வாழ்க்கையில் பலவிதமான துன்பங்கள் வரும்போது ஆண்டவரின் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் தேவையின் நெருக்கடியில் உங்களைக் கைதூக்கிவிட அவரிடம் வேண்டுங்கள். தேவன் இதைப் புரிந்துகொள்ளுவார். அவர் உங்களை ஆறுதல்படுத்துவார். தமது குமாரனையே தியாகப் பலியாக தந்தவர் உங்கள் தேவைகளைச் சந்திக்க மாட்டாரா?

? இன்றைய சிந்தனைக்கு:

துக்கம் எவ்வளவு அதிகமாயிருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக தேவனுடைய இரக்கமும் இருக்கும். நமது வலியைத் தேவன் அறிவார்.

? அனுதினமும் தேவனுடன்.

1,905 thoughts on “9 பெப்ரவரி, 2021 செவ்வாய்