? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 8:2-17

நோவாவின் செயற்பாடு

ஒரு ஒலிவ மரத்தின் இலை அதின் வாயில் இருந்தது. அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்துபோயிற்று என்று அறிந்தான். ஆதியாகமம் 8:11

“நான் கடவுளுக்குத்தான் ஊழியஞ்செய்கிறேன், ஆதலால் அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்”, “கடவுள் தேவைகளைச் சந்திப்பார்” என்று சொல்லி, வேலை செய்யாமல் சோம்பேறித்தனமாய் முடங்கிக்கிடப்போரும், செய்யவேண்டிய பொறுப்புக் களைச் செய்யாமல் கண்மூடித்தனமாய் இருப்பவர்களும் உண்டு.

இங்கே, நோவாவையும் அவன் குடும்பத்தையும் பேழைக்குள் அனுப்பிய கர்த்தர் கதவை அடைத்துப்போட்டார். கர்த்தர் கதவைத் திறக்கும்போது பார்க்கலாம் என்று நோவா பேழைக்குள் சோம்பேறியாய் முடங்கிக் கிடக்கவில்லை. வெள்ளம் வற்றிவிட்டதா, நாம் வெளியில் போகும் நாள் சமீபித்திருக்கிறதா என்பதைக்குறித்து அறிவதில் அக்கறையுள்ளவராக எச்சரிப்புடன் இருந்தார். முதலில் காகம் ஒன்றை வெளியில் விட்டார். பின்னர் புறாவை அனுப்பினார். அது கால்வைத்து இளைப்பாற இடமில்லாது திரும்பி வந்தபோது, இன்னமும் பூமியில் தண்ணீர் வற்றவில்லை என்பதை அறிந்துகொண்டார். இரண்டாந்தரம் வெளியில் போன புறா, தனது அலகில் கொத்தி வந்த ஒலிவமர இலையைக் கண்டதும், நீர் வடிந்துவிட்டது என்பதையும் அறிந்து கொண்டார். எனினும், தேவனின் வேளைக்காக, அவரது கட்டளைக்காக காத்திருந்த நோவா, பேழையை விட்டுப் புறப்படும்படி தேவன் கூறியபின்பே, வெளியில் புறப்பட்டு வந்தார். பேழைக்குள் இருந்தாலும் தனது பொறுப்புக்களில் கரிசனையுள்ளவராக, செயற்படுபவராக இருந்தார் நோவா. அவர் அசதியாயிருக்கவில்லை. கர்த்தரில் நம்பிக்கையாயிருந்தார், அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். இதற்கும், சோம்பேறியாய் முடங்கிக் கிடப்பதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.

ஒருவருக்கும் பாரமாயிராதபடிக்கு, எப்படித் தானும் தன்னைச் சேர்ந்தவர்களும் இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டார்கள் என்பதையும், இவற்றைச் செய்வதினால் நல்லதொரு முன்மாதிரியை வைத்ததாக வும் தெசலோனிக்கேயருக்கு பவுல் எழுதுகிறார். அத்துடன், அவர் தெசலோனிக்கேய விசுவாசிகளில் சிலர் வேலைசெய்ய மனதில்லாமல், வீண் அலுவற்காரராய் திரிகின் றார்கள் என்றும் எச்சரித்து உணர்த்தவும் தவறவில்லை. “தேவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்பது உண்மைதான்.” எனினும், நாம் சோம்பேறிகளாய் வாழ அழைக்கப்படவில்லை. தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவரது கரத்துக்குள் அடங்கி, பணியாற்றவே அழைக்கப்பட்டுள்ளோம். ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோம். 2தெசலோனிக்கேயர் 3:10

? இன்றைய சிந்தனைக்கு:

இன்று என் மனநிலை என்ன? நான் வீண் அலுவற்காரனா?தேவனுக்கென்று உண்மையாய் உழைப்பவனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin