📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 5:16-47

தேவனிடமிருந்து நற்சாட்சி

தேவனாலே மாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள். யோவான் 5:44

பிறருடைய நற்செயல்களைக் கவனித்து, அவர்களைக் கனப்படுத்துகிறார்களோ இல்லையோ, தங்களைத் தாங்களே மெச்சிக்கொண்டு, தங்களைக்குறித்து தாங்களே சாட்சி சொல்லுகிறதில் முந்திக்கொள்கிறவர்கள் அநேகர் இருக்கிறார்கள். நம்மைக் குறித்து நாமே சாட்சி சொல்லுவது அல்ல; பிறர் நம்மைக்குறித்துச் சொல்லுவதே உண்மையான சாட்சியாக இருக்கும்.

இயேசுவை அன்று யூதர்கள் அநேகர் குற்றம்சாட்டினார்கள். ஓய்வுநாளை ஆசரிக்கா தது, ஒய்வுநாளில் வியாதியஸ்தரைக் குணமாக்குவது, தேவனைத் தனது சொந்தப் பிதா என்று அறிக்கைபண்ணுவது, இயேசு தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினார் என பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவரைக் கொலைசெய்வதற்குத் தருணம் தேடினார்கள். ஆனால் இயேசுவோ அவர்களின் மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படவில்லை. ஏனென்றால், தாம் இவ்வுலகிற்கு வந்ததன் நோக்கம் என்ன என்பதை அவர் அறிந்திருந்தார்; மேலும். வேளை வரும்போது தாமே பிதாவின் சித்தத்திற்குத் தம்மை ஒப்புவிக்கவும் அவர் ஆயத்தமாயிருந்தார். ஆகையால், எவருடைய குற்றச்சாட்டு களும் அவரைத் திசைதிருப்ப முடியாதிருந்தது. இது ஒன்று. அடுத்தது, அவர் மனுஷரு டைய சாட்சியை எதிர்பார்த்திருக்கவில்லை. மாறாக, “என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்து சாட்சி கொடுத்திருக்கிறார்” என்று உறுதியாக அறிக்கை பண்ணினார். அவர் மனுஷரிடம் நற்சாட்சி பெறவேண்டுமென்று தன் கிரியைகளை நடப்பிக்கவில்லை. பிதாவின் சித்தத்திற்கு மாத்திரம் அவர் தம்மை முழுமையாக ஒப்புக்கொடுத்து, மரணபரியந்தமும் பிதாவின் சித்தத்திற்குத் தம்மைத் தாழ்த்தினார். ஆகையால் பிதாவும் அவரைக்குறித்து “இவர் என்னுடைய நேசகுமாரன்” என்று சாட்சி கொடுத்தார். ஆனால் அன்று யூதரோ, தேவனால் மாத்திரம் வரும் மகிமையைத் தேடாமல், ஒருவரால் ஒருவருக்கு வரும் மகிமையையே தேடினார்கள்.

இன்று நமது காரியம் என்ன? தேவனுக்குப் பணியாற்றுகிறவர்களானால், தேவனால் நமக்கு மகிமை கிடைக்கட்டும்; நம்மைக்குறித்து தேவனே சாட்சி கொடுக்கட்டும். அதுதான் மெய்யான சாட்சி. வேதாகமத்தில் யோபுவைக்குறித்து: உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து வாழ்கிறவன் என்றும், தாவீதைக்குறித்து என் இருதயத்துக்கு ஏற்றவன் என்றும், இன்னும் பலரைக் குறித்தும் கர்த்தரே சாட்சி கொடுத்திருக்கிறார். இன்று நம்மைக்குறித்து தேவன் சாட்சி சொல்வாரேயானால் அவர் என்ன சொல்லுவார்? விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும், நீதியும், பிழையின்மையுமாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி. 1தெசலோனிக்கேயர் 2:10

💫 இன்றைய சிந்தனைக்கு:

தேவனிடமிருந்து நற்சாட்சி பெற்றுக்கொள்ளத்தக்கதாக என் வாழ்வு இருக்கிறதா? அதைப் பெற என்ன செய்யப்போகின்றேன்?

📘 அனுதினமும் தேவனுடன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *