? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஏசாயா 51:1-2

தனிமையும் நன்மைதானா!

…தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 8:28

தனிமையை யாரும் விரும்புவதில்லை. ஆனால், அண்மைக்கால சமூக பாதுகாப்பின் நிமித்தம் கட்டாயமாகவே, கூடிவாழாமல், கிட்ட நெருங்காமல், தனிமையாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டோம். இதனால் அநேகர் மனச்சோர்வடைந்தனர். பலர் மனஅழுத்தத்தாலும், மனநோயினாலும்கூட பாதிக்கப்பட்டனர். எப்போது ஓய்வு கிடைக்கும், எப்போது தனிமை கிடைக்குமென ஏங்கியவர்கள்கூட, இந்த நாட்களை வெறுத்தனர். குடும்பத்தோடு இருந்தும் தனிமையை உணருகின்றோம் என்று கூறி, இனியும் இந்நிலைமை வேண்டாம் என்றனர். அறிவியலாளர்கள் உட்பட, மனித பார்வையின்படி, தனிமை என்பது ஒரு மனிதனுக்கு நன்மையானது அல்ல என்பதால் பலவித ஆலோசனை வழங்கியவர்களும் உண்டு. இருந்தாலும், எல்லாவற்றிலிருந்தும் விலகி இருப்பது மனிதனுக்குநன்மையாக அமையக்கூடும் அல்லவா!

ஆபிரகாம் தன் தகப்பன் குடும்பத்தோடு, சகல வசதிகளோடு, நிலையானதோர் இடத்தில் நிம்மதியாக வாழ்ந்துவந்தார். ஆனால், சடுதியாக தன் தகப்பன் குடும்பத்தையும், வாழ்ந்த ஊர் என்ற தேசத்தையும், நிம்மதியாக வாழ்ந்த வாழ்வையும் விட்டுப் புறப்பட்டு வரும்படி ஆபிரகாம் தேவனால் அழைப்புப்பெற்றார். எல்லாவற்றையும் விட்டு புறப்படுவது என்பது, மெய்யாகவே ஒரு தனிமையுணர்வை ஏற்படுத்தியிருக்கும். அதற்காக ஆபிரகாம் மறுப்புச் சொல்லவேயில்லை. தேவனுடைய அழைப்பைக் கீழ்ப்படிவோடு ஏற்றுக்கொண்டார். ஆபிரகாம் தனக்குரிய யாவையும் விட்டுத் தனித்து நின்றிருந்தாலும், தன்னை அழைத்த தேவனுக்கும் தனக்கும் இடையிலான உறவை அவர் நிறைவாகப் பெற்றுக்கொண்டார். அவர் சந்ததி தேவஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொண்டது.

சமூக தனிமைப்படுத்தல் பலரது வாழ்வில் மனஅழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தாலும், ஆயிரமாயிரம்பேர்கள் தேவனோடுள்ள தங்கள் உறவைப் பலப்படுத்திக்கொண்டனர். தனிமையை ஆசீர்வாதமாக்குவதும், வேதனை மிகுந்ததாக்குவதும் நம்மில்தான் தங்கி யுள்ளது. இயேசு தாம் உலகில் வாழ்ந்த காலத்தில் தாமாகவே தனிமையை நாடிச்சென்று பிதாவுடனான உறவில் பலப்பட்டார். தம்மை நோக்கிக் கூப்பிடுகிறவர்களின் வாழ்க்கை யில் தேவன் சகலத்தையும் நன்மைக்கேதுவாக மாற்றிப்போடுகிறார். ஆகவே, இக்கால கட்டத்தில் முதலாவது, தேவன் இதை நன்மைக்கு ஏதுவாகவே அனுமதித்துள்ளார். என்பதை ஏற்று, தொடர்ந்தும் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, தேவனுடனான உறவையும் ஐக்கியத்தையும் பலப்படுத்துவோம். இரண்டாவதாக, விசுவாச ஜெபத்திலும், வேத வார்த்தையிலும் உறுதியாயிருப்போம். ‘…அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன்” ஏசாயா 51:2 என்ற தேவன்தாமே, நம் வாழ்விலும் பெரிய காரியம் செய்வார்.

? இன்றைய சிந்தனைக்கு:

தனிமை வாழ்விலும், தனிமைப்படுத்தலிலும் தேவனின் அன்பை நாம் ருசித்திருந்தால், அந்த வேதனைகளுக்கூடாகக் கடந்து செல்லுகின்றவர்களுக்கு ஆறுதல் அளிக்க முன்வருவோமா!


? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin