? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோசுவா 1:16-18

எல்லாரும் எழும்பினார்கள்!

…ஆலயத்தைக் கட்டுகிறதற்கு …எவர்கள் ஆவியைத் தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லாரும் எழும்பினார்கள். எஸ்றா 1:5

ராஜாவின் கோரிக்கை கடந்துசென்ற மாத்திரத்தில், இஸ்ரவேல் கோத்திரங்களான யூதா, பென்யமீன் வம்சங்களின் தலைவரும், ஆசாரியரும், லேவியரும் எழும்பி செயற்பட ஆரம்பித்தார்கள். இது இன்றைய திருச்சபைகளில் தலைமைத்துவங்கள், சபை வழிகாட்டிகள் என்று பலவித பொறுப்புகளை ஏற்று செயற்படுகிறவர்களுக்கு ஒரு சவாலாக அமைகிறது. பலருக்கு நியமனங்கள் பெற விருப்பமுண்டு. மற்றவர்களை உற்சாகப்படுத்தி அவர்களைக்கொண்டு வேலைசெய்விக்க விருப்பமுண்டு. ஆனால், ஒரு முன்மாதிரியாகத் தாங்களே இறங்கி வேலைசெய்வதற்கு விரும்பமாட்டார்கள்.

இங்கே இத் தலைவர்கள் ஆலயத்தைக் கட்டும் பணிக்காகவே எழும்பினார்கள். இவர்களைப்போலவே நாம் என்ன பொறுப்பு வகித்தாலும், அந்தப் பொறுப்பிலிருந்து கொண்டே கர்த்தருக்கென்று இறங்கி பணிசெய்ய முன்வரவேண்டும்.

அடுத்ததாக, இந்தத் தலைவர்களைவிட “எவர்கள் ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லாரும் எழும்பினார்கள்” என்றும் வாசிக்கிறோம். கோரேஸ் ராஜாவின் ஆவியை எழுப்பிய தேவன், இங்கே திரும்பவும் ஜனங்களின் ஆவியை ஏவினார் என்பதிலிருந்து இந்த விடயத்தில் தேவனுடைய தெளிவான வழிநடத்துத்தல் இன்னும் அதிகமாக உறுதிப்படுத்தப்படுகின்றது. உள்ளுணர்வில் தேவனால் ஏவப்படுகிற எந்த ஒரு மனுஷனாலும் எழும்பி செயற்படாமல் இருக்கவேமுடியாது. நிச்சயமாக அவர்கள் எழும்புவார்கள். தேவனுடைய வழி நடத்துதலை நாங்கள் உணர்ந்து செயற்படும் போது தேவனும் நம்மோடிருந்து அதற்கேற்றவாறு கிரியை செய்கிறார்.

கானானைச் சுதந்தரிக்கவேண்டிய விடயத்தில் யோசுவாவோடு இணைந்து செயற்பட உறுதியளித்த ஒரு கூட்டத்தை இன்றைய வேதவாசிப்புப் பகுதியில் காண்கிறோம். மாத்திரமல்ல, யோசுவா கட்டளையிடுகின்ற சகல காரியங்களிலும் சொற்கேளாமல் போகிறவன் கொலைசெய்யப்படவேண்டும் என்று ஜனங்களே அறிக்கையிடுகிறார்கள். தேவனுடைய உன்னதமான வேலைக்கு இன்றும் அதிகமதிகமாக ஆட்கள் தேவை. அவர்களுடைய ஒத்துழைப்பு தேவை. தம்மை விட்டுக்கொடுத்து, அர்ப்பணித்து இணங்கி செயற்படக்கூடிய ஒரு கூட்டத்தை இன்றும் தேவன் தேடிக்கொண்டேதான் இருக்கிறார். எவர்கள் தேவனுக்காக செயற்பட துணிகிறார்களோ, அவர்களையே தமது பாத்திரமாக அவர் பயன்படுத்துகின்றார். ஏனெனில், கர்த்தருடைய பணி என்பது கூட்டாக இணைந்து செய்யவேண்டிய பணி. ஒருவன் காணிக்கை கொடுப்பான்.

ஒருவன் வேலை செய்வான். எந்தப் பணியானாலும் அதற்கென நம்மையும் நமது வாழ்வையும் இன்றே அர்ப்பணிப்போமாக!

? இன்றைய சிந்தனைக்கு:

இன்று நான் எங்கே என்ன பொறுப்பில் இருக்கிறேனோ, அந்தப் பொறுப்பை என்ன மனநிலையோடு முன்னெடுக்கிறேன் என்பதை உண்மைத்துவத்துடன் சிந்திப்பேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin