­­ ? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மத் 16:21-23 மாற் 8:31-33

பாடுகள் அவசியந்தானா?

அதுமுதல் இயேசு… மத்தேயு 16:21

“ஆனாலும்”, “அப்;பொழுது”, “பின்பு” போன்ற சொற்கள் மிக முக்கியமானவையாகும். “பின்பு” என்று வசனம் ஆரம்பித்தால், “முன்பு” நடந்தது என்ன என்று முந்தியதைப் படிக்கும்போது தெளிவான விளக்கம் கிடைக்கும். மாற்கு 8:31ல், “அல்லாமலும்” என்று ஆரம்பிக்க, மத்தேயு 16:21ல் “அதுமுதல்” என்று ஆரம்பிப்பது அதிக விளக்கம் தருகிறது. சீஷர்கள் தம்மை யார் என்று நினைக்கிறார்கள் என்று இயேசு கேட்க, பேதுரு அவரை “ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று அறிக்கை செய்தான். பின்னர், அதுமுதல், என்று ஆரம்பிக்கிறது. ஆக, எதுமுதல்?

இயேசுவே, வரவிருந்த கிறிஸ்து என்று தெரிந்ததுமுதல், இயேசு தாம் எருசலேமுக்குப் போய், ஆகாதவன் என்று தள்ளப்பட்டு, பாடுகள்பட்டு, கொலைசெய்யப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழவேண்டும் என்று தமது சீஷருக்குப் போதிக்கத் தொடங்கினார் என்று பார்க்கிறோம். இயேசு இக் காரியங்கள்பற்றி மூன்று தடவைகளாகக் கூறியதையும் சீஷரின் பிரதிசெயல்களையும் 8ம், 9ம், 10ம் அதிகாரங்களில் மாற்கு தொடர்ச்சியாக விபரித்திருக்கிறார். இவரே கிறிஸ்து என்று தெரிந்தும், சீஷரின் பிரதிச்செயல்கள் மாறுபாடாகவே இருந்தது! தமது பாடு மரணம் உயிர்ப்பைக் குறித்து இயேசு தமது சீஷருக்குப் போதிக்க ஆரம்பித்த முதல் தடவையில் நடந்தது என்ன? இயேசுவில் மிகுந்த கரிசனைகொண்ட பேதுரு அவரைத் தனியே அழைத்து, அத்தனை கரிசனையோடு, “இது உமக்கு நேரிடக்கூடாது” என்று இயேசுவையே கடிந்துகொண்டான். சற்று முன்னர்தான், “நீ பாக்கியவான்” என்று இயேசுவிடமிருந்து வாழ்த்துப் பெற்றவன்தான் இந்தப் பேதுரு. சொற்பவேளைக்குள், “எனக்குப் பின்னாகப் போ சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்” என்று இயேசுவே பேதுருவைக் கண்டிக்கும்படிக்கு பேதுரு நடந்துகொண்டது என்ன? வனாந்தரத்திலே சாத்தான், தன்னைப் பணிந்துகொண்டால் ராஜ்யத்தைத் தருவதாகக் கூறி, இயேசுவைச் சோதித்தானே; இங்கே பேதுரு அல்ல, அவனுக்குள் இருந்து, தம்மைப் பின்னடையச்செய்வது சாத்தானே என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆகவே பேதுருவைக் கடிந்துகொண்டது மாத்திரமல்ல, தம்மைப் பின்பற்றுகிறவன் தன் சிலுவையைச் சுமக்கவேண்டிய சத்தியத்தையும் போதித்தார்.

ஒன்று, நாம் தேவனுக்கேற்றவைகளைச் சிந்திக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். அதற்கு நமது வாழ்வில் தேவசித்தத்தை உணர்ந்துகொள்வது அவசியம். இரண்டாவதாக, இயேசுதான் கிறிஸ்து என்று தெரிந்திருந்தும், அவர் பூமிக்கு வந்த நோக்கத்தை மறந்து விடக்கூடாது. இயேசுவுக்கு நடந்தது நமது வாழ்விலும் சம்பவிக்கும். இயேசுவின் பாடுகள்தான் இன்று நம்மை இரட்சித்தது. ஆகவே, இயேசுவைப்போல, தேவசித்தம் மாத்திரமே நமக்கும் பிரதானமாய் இருக்கட்டும்.

? இன்றைய சிந்தனைக்கு: :

கிறிஸ்துதானே பாடுகள்பட்டு மரித்து உயிர்த்துவிட்டார் என்றால், இனியும் நமக்கு இந்த உலகில் பாடுகள் இருப்பது எப்படி? சிந்திப்போம். அவரைச் சார்ந்திருப்போம்!

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin