? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 3:8-19

தேடுகின்ற வார்த்தை

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார். ஆதியாகமம் 3:9

“என்னை யாரும் தேடுவதில்லை” இது ஒரு மூதாட்டியின் ஏக்கம். “என்னையே தொடர்ந்து வருகின்ற என் பெற்றோரின் செயல்கள் எனக்கு எரிச்சல்மூட்டுகிறது” இது ஒரு வாலிப மங்கையின் கோபம். “வழிமாறி தடுமாறி நின்றேன். என் அப்பா எப்படியோ என்னைத் தேடிப் பிடித்துவிட்டார்” இது தன் சின்ன வயது அனுபவத்தைப்பற்றி ஒருவரின் சந்தோஷ நினைவு. இப்படியாக எத்தனை தேடல்கள்! சிலது மகிழ்ச்சியைத் தரும்!

ஏதேன் தோட்டத்திலும் ஒரு தேடல் சத்தம். “பகலின் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்திலே உலாவுகின்ற தேவனாகிய கர்த்தர்…” அவர் உன்னத தேவன், உன்னதங்களில் வாசம்பண்ணுகிறவர், இறங்கிவந்து தோட்டத்திலே மனிதனோடு உலாவுகின்ற தேவனாகவும் இருந்தார், அவரே இன்று நம் மத்தியிலும் உலாவருகிறவர். தேவன் நம்முடன் உலாவுகிறவர் என்பது நமக்குத் திடத்தையும் பெலத்தையும் கொடுக்கும் செய்தி! மகிழ்ச்சியை தந்த இந்த சந்திப்பு, உலா வந்த தேவனுடைய சத்தம், ஒருநாள் மனிதருக்கு மகிழ்ச்சிக்குப் பதிலாக பயத்தைக் கொடுத்தது ஏன்? தேவன் தேடும்படியாக அவர்கள் சென்றது எங்கே? தேவ சத்தத்தைக் கேட்டதும் ஓடி ஒளிந்துகொண்டதும் ஏனோ? தேவன் ஆதாமைக் கூப்பிட்டார், “நீ எங்கே இருக்கிறாய்?” என்றார். அவர்கள் ஏன் ஒளிந்துகொண்டார்கள் என்பது தேவனாகிய கர்த்தருக்குத் தெரியாதா, என்ன? அவர்கள் தமது சமுகத்தைவிட்டு விழுந்துபோனதும் அவருக்குத் தெரியாதா, என்ன? எல்லாம் தெரியும். என்றாலும், தேடியவர், அவர்களை ஒளிப்பிடத்திலிருந்து வெளியே அழைத்தார், மாறாக அப்படியே அழிந்துபோங்கள் என்று விட்டுவிடவில்லை!

இந்தத் தேடல் எப்படிப்பட்டது? பாவிகளின் நிலைமையைக் குத்திக்காட்டி வேதனைப் படுத்துவதற்கான தேடலா? இல்லை! இது அன்பின் தேடல். “என் பிள்ளைகள்” என்ற உரிமையின் தேடல். அன்று மாத்திரம் தேவன் அவர்களைத் தேடி வந்திராவிட்டால், என்னவாயிருக்கும்? மனுக்குலம் என்னவாகியிருக்கும்? என் வாழ்வில் என் தேவன் என்னை 38 ஆண்டுகளாக தேடினார். ஏன் அவரால் ஒரு நொடிப்பொழுதில் தேடிவிட முடியாதா? அப்படியல்ல, அன்று அவருக்கு ஆதாமும் ஏவாளும் எந்த விருட்சத்தின் பின்னே ஒளித்திருந்தார்கள் என்பது தெரியும். அதை அவர்களுக்கு உணர்த்துவதே அவரது நோக்கம். இன்று, “நீ எங்கே இருக்கிறாய்” என்று அவர் உன்னிடம் கேட்பாராயின் உமது பதில் என்ன? நாம் கிறிஸ்தவர்களாக இருக்கலாம், ஆனால் கிறிஸ்துவுக்குள் இருக்கிறோமா? ஆண்டவரால் நாம் இன்னமும் தேடப்பட்டுக்கொண்டிருக்கிறோமா? “நீ எங்கே இருக்கிறாய்” என்று தோட்டத்தில் ஒலித்த குரல், “இங்கே உனக்கு என்ன காரியம்” என்று எலியாவுடன் ஒலித்த குரல், “சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்” என்று பவுலுடன் ஒலித்த குரல் இன்றும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஒளிந்திருப்பது போதும். கர்த்தருடைய தேடலுக்குச் செவிகொடுத்து வெளியே வருவோம். அவர் நம் வாழ்வை நிச்சயம் சீர்செய்வார்.

? இன்றைய சிந்தனைக்கு:

நான் இன்னமும் தேடப்படுகிறவர்கள் பட்டியலில் இருக்கிறேனா? இன்று என்னைத் தேடுகின்ற ஒலிக்கு எனது பதில் என்ன?

? அனுதினமும் தேவனுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *