? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபேசியர் 4:27-29

கெட்ட வார்த்தை

கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்… எபேசியர் 4:29

சபை விசுவாசிகள் வெளிக்காட்டும் ஆத்திரத்தைத் தவிர, கிறிஸ்தவ விசுவாசத்திற்கு மிக மோசமான விளம்பரம் வேறெதுவும் இருக்கமுடியாது என்று வில்லியம் மெக்டொனால்ட் என்பவர் தனது புத்தகம் ஒன்றில் எழுதியது சிந்திக்கவேண்டிய ஒன்று. அந்த ஆத்திரம் கட்டுப்பாட்டை மீறி வெடித்து, வார்த்தையில் சிதறும்போது கிறிஸ்தவ சாட்சி முற்றிலும் கறைப்படுகிறது என்றால் அதுவும் மிகையல்ல. அந்தவகையில் தங்கள் பிள்ளைகளை நாயே! பிசாசே! என்று ஆத்திரத்தில் திட்டுகின்ற பழக்கமுள்ள பெற்றோர் ஜாக்கிரதையாக மனந்திரும்பவேண்டியது அவசியம். “நீ எதற்குமே லாயக்கு அற்றவன்” என்று அடுத்த வீட்டுப் பையனுடன் ஒப்பிட்டு தினமும் ஒரு தாய் பேசியதால் ஆத்திரமடைந்த மகன், அந்த அடுத்தவீட்டுப் பையனையே குத்திக் காயப்படுத்திய சம்பவமும் உண்டு. ஆம், வார்த்தைக்கு அத்தனை வல்லமை உண்டு. ஆக சிந்திக்காமல் பேசக்கூடாது.

வாயிலிருந்து புறப்படுகின்ற நல்வார்த்தைகளால் அநேகரின் வாழ்வு மேன்மையடைந் ததுமுண்டு. அதே வாயிலிருந்து புறப்படுகின்ற வார்த்தைகள் அநேக வாழ்வுகளை சீரழித்த சம்பவங்களும் உண்டு. பவுல் குறிப்பிட்டுள்ள “கெட்ட வார்த்தை” என்பது, கீழ்த்தரமானது, பேசத்தகாதது, பயனற்றது என்றும் பொருள்படும். இதனையே ஆண்டவ ரும் நமக்கு உணர்த்தியுள்ளார். “மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்.12:36) என்றார் இயேசு. ஏனெனில், அந்த வீண்வார்த்தைகள் நம்மையே குற்றவாளி என்று தீர்ப்புச்சொல்லப் போதுமானதாயிருக்கும். ஆக, நாம் பேசுகின்ற சில வார்த்தைகளே நமக்கு எதிராளியாக மாறிவிடும் அபாயமும் உண்டு என்பதைக் குறித்து நாம் ஜாக்கிரதையாக வாழவேண்டும்.

தேவபிள்ளையே, இன்னொருவரைக்குறித்து வீணான காரியங்களை யாராவது உங்க ளிடம் கூறும்போது, எப்பொழுதாவது அதைத் தடுத்ததுண்டா? அல்லது, கேட்பதற்கு ருசியான அப்பேச்சுக்களை ஆமோதித்துக் கேட்டு, அதனை அடக்கி வைக்கவும் முடியாமல், பிறருக்கும் பரப்பியதுண்டா? பிந்தியது மிகவும் ஆபத்தானது. அடுத்தவ ருக்கு நன்மை தருகின்ற, பக்திவிருத்தியை உண்டாக்குகிற, அவருடைய வாழ்வைக் கட்டியெழுப்புகின்ற காரியங்களையே பேசும்படி நாம் முதலில் விரும்பவேண்டும்; அந்த வாஞ்சையைத் தூயாவியானவர் நிச்சயம் நம்மில் நிறைவேற்றுவார். நாம் பிறருக்கு என்ன செய்கிறோமோ அதுவே நம்மிடமும் திரும்பி வரும். ஆகவே வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருப்போமாக. நல்ல வார்த்தைகளைப் பேசுவோம். பிறர் வாழ்வின் நலனுக்காக பேசுவோம்.

? இன்றைய சிந்தனைக்கு:  

இயேசு உலகிலிருந்தபோது பேசிய ஒவ்வொரு வார்த்தையும் நம்மை வாழவைக்கும்போது, அவரது பிள்ளைகளாகிய நாம், எப்படி பிறர் வாழ்வைக் கெடுக்கும்படி பேசமுடியும்?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin