? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 7:17-8:1

தேவன் நினைந்தருளினார்

தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைந்தருளினார். ஆதியாகமம் 8:1

வாழ்க்கையிலே எதிர்பாராத சூழ்நிலைகளை எதிர்நோக்குகிறபோது, அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கிறபோது தேவன் நம்மை மறந்துவிட்டாரோ, அல்லது கைவிட்டுவிட்டாரோ என்று சிந்திக்கத் தோன்றும். அந்நேரத்தில் நாம் சோர்வு அடைவதுண்டு. மனஉளைச்சலுக்குள் தள்ளப்படுவதுமுண்டு. அந்நேரத்தில் தேவன் மீது நாம் கொண்டுள்ள விசுவாசம் தடுமாறவும் ஆரம்பிக்கும்.

நோவாவையும், மிருக ஜீவன்களையும் பேழைக்குள் வைத்துக் கதவை அடைத்த தேவன், அவர்களை மறந்துவிடவில்லை. ஜலம் பூமியின்மீது நூற்றைம்பது நாட்களாகப் பிரவாகித்துக்கொண்டிருந்தது. இப்போது, தேவன் நோவாவை நினைந்தருளினார்.

எமது கணக்குப்படி கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் என்று சொல்லலாம். ஐந்து மாதம் நோவாவும் அவனது குடும்பமும் பேழைக்குள் முடங்கி தனித்திருந்தார்கள். இப்போ தேவன் மழையை நிறுத்தினார். தண்ணீர் வடிய ஆரம்பித்தது. பேழை அரராத் மலையில் போய் தங்கியது. தேவன் நோவாவையும் அவன் குடும்பத்தையும் பாசத்தோடு நினைந்தருளினார். இந்த தேவனே நமது தேவன், அவர் நம்மை நினையாமற் போவாரோ? “தாய் தன் பாலகனை மறப்பாளோ, அவள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை” என்பது அவரது வாக்கு. வாக்குக்கொடுத்த அவர் உண்மையுள்ளவர். அவர் எம்மை ஒரு இடத்தில் நிற்கச்சொன்னால் நாம் பொறுமையோடு நிற்கவேண்டும், அடம்பிடித்து ஓடக்கூடாது. வேண்டாம் என்றால் சரியென்று சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளவேண்டும். பிடிவாதம் பிடிக்கக்கூடாது. அவரது விருப்பத்துக்கு நாம் அடங்கியிருக்கும்போது அவர் நம்மை எப்போதும் நினைந்தருளுவார்.

திடீரென கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்பட்டபோது, நாமும்தான் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். அந்நேரத்தில் நமது மனநிலை எப்படி இருந்தது? தேவனோடு நமக்குள்ள உறவில் எப்படியிருந்தோம்? தேவன் நம்மைக் கைவிடவில்லை, நம்மை நினைந்தருளுவார் என்ற நம்பிக்கை இருந்ததா? மாறாக, எப்போது இந்நிலை மாறும் என்று முறுமுறுத்தவர்களாய் ஒருவேளை இருந்திருக்க லாம். ஆனால் அன்று, நோவா, அவனுடன் இருந்த குடும்பத்தவர்கள், பேழைக்குள் தங்களை அனுப்பி, கதவையடைத்த தேவனை நம்பி அமைதியாக இருந்தார்கள்.

தேவனும் அவர்களை நினைந்தருளி, ஏற்றவேளையில் வெளியே கொண்டுவந்தார். கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார். இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம், இதை நான் விரும்பினபடியால், இங்கே வாசம்பண்ணுவேன். அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன், அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன் (சங்கீதம் 132:13-15).

? இன்றைய சிந்தனைக்கு:

விளங்காத சூழ்நிலைகளிலும் கர்த்தரை நம்பி அமர்ந்திருக்க முடியாமல் நாம் தவிப்பது ஏன்? இந்த நிலையை எப்படி மாற்றுவது?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin