📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 14:1-6
ஓய்வு நாளில் குணப்படுத்துதல்
இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஓய்வுநாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார். லூக்கா 14:3
தேவனுடைய செய்தி:
கர்த்தர் குணமாக்குபவர்.
தியானம்:
இயேசுவிடம் நீர்க்கோவை வியாதியுள்ளவன் கொண்டுவரப்பட்டபோது, பரிசேயரும் வேதபாரகரும் ஓய்வுநாளில் குணப்படுத்துவதைக் குறித்து கவனித்துக்கொண்டிருந்தார்கள். இயேசுவோ அவனைக் குணமாக்கினார். ஓய்வு நாளில் ஒரு கிணற்றில் விழுந்துவிட்டவரைக் காப்பாற்றுவதன் முக்கியத் துவத்தை உணர்த்திய இயேசு பேசியபோது அவருக்கு எதிராகப் பரிசேயர்களும் வேதபாரகர்களும் எதையும் கூற முடியவில்லை.
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
தேவன் அருளி சுகம் அவருடைய சுத்த கிருபையாக உள்ளது.
பிரயோகப்படுத்தல் :
ஓய்வு நாளில் யாருடைய வீட்டுக்கு உணவு உண்ணும்படி இயேசு சென்றார்? இன்று நமது வீடுகளில் யார் யார் அழைக்கப்படுகின்றார்கள்?
வசனம் 2ன்படி, ஜனங்கள் அவர்மேல் நோக்கமாயிருந்தது ஏன்? என்ன விடயத்திற்கு? இன்றும் ஜனங்கள் எதன்மீது நோக்கமாயிருக்கிறார்கள்?
உங்கள் மகனோ அல்லது வேலை செய்யும் மிருகமோ ஒரு கிணற்றில் விழுந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? ஏதேனுமொன்றில், பாதிக்கப்பட்ட நபர்களிடத்தில் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?
இன்று மற்றவர்கள் பெறுகின்ற நன்மை நிமித்தம் எமது மனப்பான்மை எப்படிப்பட்டதாயிருக்கிறது? அலுவலகத்தில், உறவினரிடத்தில் பிறர் பெறும் அனுகூலம், சுகம், நன்மையைக் குறித்த எனது நிலைப்பாடு என்ன?
💫 இன்றைய எனது சிந்தனைக்கு:
📘 அனுதினமும் தேவனுடன்.
