? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபேசியர் 4:30-32

கசப்புகள் கரையட்டும்!

இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்… நீதிமொழிகள் 14:10

சுய கருத்துக்கள், சுயதீர்ப்பு, கசப்புகள் என்று பலவற்றை இருதயத்திலே புதைத்து விட்டு, வெளிவாழ்விலே எவ்வளவாக நடித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை ஏற்றுக் கொள்வீர்களா? ஆனால், தேவன் நமது இருதயத்தை அறிவார், நமக்குள் புதைந்து கிடக்கின்றவற்றை ஒருநாள் வெளிப்படுத்துவார் என்பது நிச்சயம். ஆனால், அவர் வெளிப்படுத்தி நாம் வெட்கப்பட்டுப்போக முன்னதாக, “தேவனே, என்னை உணர்வடை யச்செய்து, என் இருதயத்தைச் சுத்திகரியும்” என்று ஜெபித்துப்பாருங்கள். தேவன் நம்மைத் தகுந்த சூழ்நிலைகளுக்கூடாக நடத்தி, நம் கசப்புகளை உணரவைத்து, சுத்திகரித்து, பெரிய விடுதலையைத் தருகிறார். இந்தச் சுத்திகரிப்பைத் தேவனே செய்யவேண்டும். ஏனெனில், இது நம்மாலும் முடியாது, வேறு யாராலும் முடியாது.

ஒரு குடும்ப ஆராதனையை முடித்துவிட்டு ஆலயத்தைவிட்டு வெளியேறியபோது, அக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கிருந்த பூக்களையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார். ஆலயத்திலே வைத்த பூவைத் திருப்பி எடுப்பதா என்று ஒரு சிலருக்கு மன வருத்தம். இது அந்த நபருடைய இருதயத்தை உடைத்தது. இச் சம்பவத்தைக் குறித்து அவர் சொன்னது: “பூக்களைத் திருப்பி எடுத்தபோது, மனதிலே ஒரு தயக்கம் உண்டானது உண்மை. அதையும் மீறி எடுத்துவிட்டேன். இப்போது, குற்றவாளியாகக் காணப்பட்ட நான், ஏன்தான் எடுத்தேன் என்று மனஸ்தாபப்பட்டு தேவசமுகத்தில் மண்டியிட்டு அழுதேன். அப்போது, ஆச்சரியமான விதமாக, அந்த ஆலயத்தைக் குறித்து எனக்குள்ளே புதைந்திருந்த ஒரு கசப்புணர்வைத் தேவன் உணர்த்தினார். “உனக்குள் கசப்பு இல்லை யானால் இந்தப் பூக்களை எடுத்திருப்பாயா? உன் மனதின் கசப்பை எடுத்துப்போடு” என்பதாக உள்ளத்திலே குத்தப்பட்டேன். உண்மையாகவே மனங்கசந்து அழுதேன். “என்னையும் மீறி எனக்குள் புதைந்துகிடந்த கசப்பை உணர்ந்தேன். அது நீங்கப் பெற்று, விடுதலை கிடைத்ததையும் உணர்ந்தேன்” என்றார் அவர்.

இவருக்குள் புதைந்திருந்த கசப்புணர்வுதான், பூக்களையும் எடுத்துச்செல்ல அவரைத் தூண்டியது. இது ஒரு சிறிய சம்பவம். ஆனால் பூக்களிலும்பார்க்க, இதய அழகையே தேவன் விரும்புகிறார் என்பதே காரியம். ஆம், இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும். அதனை உணராமலேயே நாம் நியாயம் பேசுவோம். கசப்புணர்வு பெரியதொரு அழிவுக்கு வழிகோலும். இரக்கமுள்ள தேவன், நாளைக்கு வாடிக் கருகிப்போகும் கொத்துப் பூக்களைக்கொண்டு ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி, இருதயத்தில் புதைந்து கிடந்த அர்த்தமற்ற மனக்கசப்பைப் பிடுங்கி எறிந்தேபோட்டார். நமது இருதயத்தில் புதைந்திருக்கின்ற, சிலசமயங்களில் நாமே அறிந்திராத கசப்புக்களையும் தேவன் அறிவார். அவற்றைச் சுத்திகரித்து நம் இருதயத்தை அழகாக்கும்படி ஜெபிப்போமாக!

? இன்றைய சிந்தனைக்கு:

 எனக்குள் கசப்பு உண்டா? யார்பேரில் அல்லது எதன்பேரில்? எனக்குள் இருப்பதே என்னவென்று தெரியாமலும் இருக்கிற எதுவானாலும் இன்றே விடுதலைக்காக ஜெபிப்பேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin