? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2 கொரி 4:8

விலையேறப் பெற்ற கல்

இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன். அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப் பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளது… ஏசா.28:16

ஒரு அழகிய கல்லைக் கண்டெடுத்த ஒரு சிறுமி, வழியில் வந்தவரிடம் அதன் விலை என்னவென்று கேட்டாள். அதற்கு அவர், 100 ரூபாய் என்றார். அவளோ அதை ஊர் சந்தைக்குக் கொண்டுசென்று விலைபேசினாள். ஒருவர் அதற்கு 2000 ரூபாய் தருவதாக கூறினார். அவள் திரும்பிவந்து நடந்ததை அப்பாவிடம் சொல்ல, இருவரும் அந்தக் கல்லை எடுத்துக்கொண்டு ஒரு நூதனசாலைக்குச் சென்றார்கள். அந்தக் கல்லைக் கண்டு வியப்படைந்த அதிகாரி, இதற்கு இரண்டு லட்சம் ரூபாய் தருவதாகக் கூறினார். பின்னர் அவர்கள் இரத்தினங்கள் விற்பனை நிலையத்திற்குச் சென்றபோது, அங்கே அந்தக் கல்லுக்கு இரண்டு கோடி ரூபாய் மதித்தார்கள். இது ஒரு கதை. என்றாலும்கூட இதில் ஒரு உண்மையுண்டு. அந்தக் கல்லை வெறுமையாய்ப் பார்த்தவனுக்கு அதன் பெறுமதியோ, மதிப்போ, அவசியமோ புரியவில்லை. அது வெறும் கல்லுத்தான். ஆனால், அதன் பெறுமதியை உணர்ந்தவனுக்குத்தான் அதன் மேன்மை புரிந்தது.

நமக்காகச் சீயோனிலே ஒரு கல் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கல்லை வெறும் கல் என்று நினைக்கிறவனுக்கு அதன் மேன்மையோ பெறுமதியோ தெரியப்போவதில்லை. அதன் பெறுமதி சாதாரணமானதல்ல. உடைக்கப்பட்டு, பரீட்சிக்கப்பட்டு, அத்திபாரத்திற்கு உகந்தது என்று காணப்பட்ட கல் அது. இந்த அத்திபாரத்தில் கட்டப்படுகின்ற கட்டடம் என்றும் அசைக்கப்படாது. அந்தக் கல் பார்வைக்கு அலங்கோலமாகத் தெரியலாம். அழகில்லாமல் இருக்கலாம். ஆனால், அதுவே என் அத்திபாரம்,அதுவே என் வாழ்வின் மூலைக்கல் என்று அதில் விசுவாசம் வைக்கிறவன் என்றென்றும் அசைக்கப்படவே மாட்டான். பேதுரு இதை அழகாக விளக்கியுள்ளார்: “விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது, கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ …அந்தக் கல் இடறுதலுக்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிருக்கிறது (1பேது.2:7). ஆம், ஆண்டவரின் திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள் இடறிப்போவார்கள். வார்த்தையை விசுவாசித்து அதை ஏற்றுக்கொண்டு அதற்குக் கீழ்ப்படிகிறவனுக்கோ அதுவே அசையாத அத்திபாரமாயிருக்கிறது. மூலைக்கல் என்பது முக்கோண வடிவிலான மேல் மூலையில் வைக்கப்படவேண்டியது. அது வைக்கப்படுமட்டும் கட்டடம் பூர்த்தியா காது. அதற்குச் சாதாரண செங்கல்லின் வடிவம் உதவாது. அந்த மூலைக்கேற்ப கல் உடைக்கப்படவேண்டும். ஆகையால்தான் வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட கல், அதுவே ஏற்றபடி உடைக்கப்பட்டு, பிரதான மூலைக்கல்லாகிறது. இந்த அத்திபாரக் கல்லும் மூலைக்கல்லும் நமது கிறிஸ்துவே.

இன்று நாம் சீயோனில் வைக்கப்பட்ட கல்லின் மதிப்பை அறிந்திருக்கிறோமா? அல்லது அலட்சியப்படுத்துகிறோமா? வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று (சங்.118:22).

? இன்றைய சிந்தனைக்கு:

அஸ்திபாரக் கல்லாகிய கிறிஸ்துவின்மேல் என் வாழ்வைக் கட்டியெழுப்பியிருக்கிறேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin