? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 34:1-22

எக்காலமும் ஸ்தோத்திரமே! 

கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது. அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது. சங்கீதம் 34:15 

ஒரு விளையாட்டு வீரன் தன் சகாக்களின் எரிச்சல் காரணமாக  மனமடிவுக்குள்ளானான். இதனை அறிந்த தகப்பனோ, ‘மகனே, நீ பயப்படாதே. உன் திறமை என்னவோ அதை வெளிப்படுத்து. மிகுதியை நான் பார்த்துக்கொள்வேன். உன்மேல் என் கண்கள் இமை கொட்டாமல் விழித்திருக்கும்” என திடப்படுத்தினார். அவன் வெற்றிக்கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டபோது, ‘இந்தப் போட்டி மிகுந்த சவாலாகவே இருந்தது. ஆனாலும், என் அப்பா என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற நிச்சயம்தான் இந்தப் போட்டியில் எனக்கு வெற்றி தந்தது” என்றான்.

தாவீதின் சங்கீதங்கள், அவருடைய அனுபவங்களே. அதனால்தான் அவை இன்றும் நமது வாழ்வின் அனுபவங்களாக பிரதிபலிக்கின்றன. கொலைசெய்யத் துரத்திய சவுலினால், தாவீது முகங்கொடுத்த இன்னல்களுக்கு அளவேயில்லை. ஒரு தடவை, காத்தின் ராஜாவாகிய ஆகீசிடம் ஓடிப்போனான் தாவீது. அங்கு, பித்தங்கொண்டவன் போல நடித்து, அவ்விடத்திலிருந்து தப்பியபோது(1சாமு.21:10-15) தாவீது பாடியதுதான் இந்த 34ம் சங்கீதம். தேவனுடைய பிள்ளைகள் தேவனை மனதார கூப்பிடும்போது, அவர் நிச்சயம் பதிலளிப்பார் என்பதை அனுபவரீதியாகக் கண்ட தாவீது மனம்நிறைந்த நன்றியோடு இச்சங்கீதத்தை எழுதினார். கர்த்தர் தம்மைக் கூப்பிடுகிறவர்களைத் தப்பு விப்பார்; சூழ்நிலை எதுவானாலும் விடுவித்து உயர்த்துவார். இதில் நம் பங்களிப்பும் உண்டு. முதலாவது, நாம் கர்த்தரையே தேடவேண்டும்@ அவரைக் கூப்பிடும்போது அவர் பதிலளிப்பார் என்ற நம்பிக்கை வேண்டும். நாம் கர்த்தருக்குப் பயப்படுவோமாயின், நமது நாவைப் பொல்லாப்புக்கும் தவறான பேச்சுக்கும் தவிர்க்கவேண்டும். சகல தீமையையும் விட்டு விலகி நன்மைசெய்ய முந்திக்கொள்ளவேண்டும். சமாதானத்தை  விரும்பவேண்டும். ஏனெனில், எப்பொழுதும் கர்த்தருடைய கண்கள் நம்மை நோக்கிய படியே இருக்கிறது. அதற்கு எதுவுமே மறைவில்லை.

நாம் கர்த்தருக்குப் பயந்து ஜீவிக்கும்போது நிச்சயம் இந்த உலகம் நம்மை விடாது.நமக்கு அநேகம் துன்பங்கள் நேரிடும். ஆனால், கர்த்தர் நம்மேல் நோக்கமாயிருக்கி றார் என்ற ஒரே நம்பிக்கை, நாம் ஜெயிக்கப் போதுமானது. நெருக்கங்கள் வரும்போது அதைத்தானே நாம் மறந்துவிடுகிறோம். கடந்துபோகும் இந்த ஆண்டின் சம்பவங்களைச் சற்றுத் திரும்பிப்பார்ப்போம். நமக்கு நேரிட்ட தோல்விகளின் காரணங்களையும், ஜெயம் பெற்ற சமயங்களையும் ஆராய்வோம். வியாதியோ, வேதனையோ, புறக்கணிப்போ, ஏமாற்றமோ, உயிராபத்தோ நொருங்குண்ட நருங்குண்ட இருதயத்தோடு கர்த்தரை தேடுவோம். வாக்குமாறாத கர்த்தர் நிச்சயம் நம்மை இரட்சிப்பார்!

? இன்றைய சிந்தனைக்கு:

அடைக்கலான் குருவிகளில் கண்வைத்திருக்கிற தேவன் நம்மைக் காணாதிருப்பாரோ? கர்த்தர் நம்மேல் நோக்கமாயிருந்ததை அனுபவித்த சமயங்களை எண்ணிக் கர்த்தரைத் துதிப்போமாக!

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin