? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: சங்கீதம் 136:21-26

ஆகாரம் கொடுக்கிறவர்

மாம்ச தேகமுள்ள யாவுக்கும் ஆகாரம் கொடுக்கிறவரைத் துதியுங்கள்… சங்கீதம் 136:25

கடந்த முடக்க நாட்களில், விலைவாசி உயர்வடைந்த நிலையில், ஒரு குடும்பஸ்தர், “உண்மையிலேயே வீட்டில் மிகக் கஷ்டம். பால்மா கூடக் கிடைக்கவில்லை. ஆனால், அடைக்கலான் குஞ்சுகளைக் கவனிக்கிறவர், காகங்களைக்கூடப் போஷிக்கிறவர், ஏன், எறும்புகளையே போஷிக்கிறவர் தமது பிள்ளைகள் நம்மைக் கைவிடுவாரா! எதிர்பாராத இடங்களிலிருந்து கர்த்தர் என் குடும்பத்தைப் போஷித்தார்” என சாட்சி கூறினார். பல காரணங்களால் இன்று பலர் கலங்கி நிற்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. கர்த்தருடைய பிள்ளைகள் நாம், கர்த்தரை நோக்கிக் காத்திருக்கவும், கலங்கி நிற்கிறவர்களைத் தேற்றவும், நமக்கு உள்ளபடி உதவவும் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

கர்த்தரைத் துதிக்கும்படி சங்கீதக்காரன் நம்மை தொடர்ந்து அழைக்கிறான். கர்த்தரின் கிருபையை நினைத்து துதிப்பதும், தமது பலத்த கரத்தால் சத்துருவின் கையிலிருந்து தமது பிள்ளையை மீட்டுப் பாதுகாக்கும் தேவனது புயத்தின் கிரியைகளை நினைத்து துதிப்பது மாத்திரமல்லாமல், கர்த்தர் நமது நாளாந்த வாழ்வில் இடைப்படுகின்றவர் என்பதைக் கண்டுகொண்டவனாக கர்த்தரைத் துதிக்கும்படி அழைக்கிறான். தாழ்வில் நம்மைக் கண்டவர் அவர்; பாவத்தில் மாண்டிருந்த நம்மை நினைத்தவர் அவர்; நமது அன்றாட தேவைகளில் நம்மைக் கைவிடுவாரா? சகல ஜீவராசிகளையும் நினைத்து, ஒவ்வொரு பொழுது விடியும்போதும் காலை மதியம் இரவு என மாம்ச தேகமுள்ள யாவுக்கும் ஆகாரம் அருளும் தேவனாக, அவர் இருக்கின்றார் என்பதைச் சங்கீதக்காரன் தன் அனுபவத்தில் கண்டுகொண்டான்;. கர்த்தருடைய களஞ்சியம் வெறுமையாவதில்லை என்பதை ருசிபார்த்தால் அவரை எப்படித் துதிக்காமல் இருப்பது?

இந்த தேவனுடைய கருணையை இன்று நாமும் அனுபவிக்கவில்லையா? பின்னர், ஏன் உலகத்தாரைப்போல, அன்றாட தேவைகளைக்குறித்து கவலைகொண்டு, நம்பிக்கையிழந்து வாழவேண்டும்? இனி எதுவுமில்லை, இனி நம்பிக்கையில்லை என்ற நிலையில் இறுதி நேரத்தில் கர்த்தர் நம்மைப் போஷித்த சந்தர்ப்பங்களை நினைத்துப் பார்ப்போம். வனாந்தரத்திலே பூரண உணவாகிய மன்னாவினாலே தமது பிள்ளைகளைப் போஷித்தவர்தான் நமது தேவனும்; இன்று “நானே ஜீவ அப்பம்” என்று நமக்காகத்தம்மையே கொடுத்தவர் சாதாரண உணவுத் தேவையிலும், நாளை மாறிப்போகின்ற தேவைகளிலும் நம்மைக் கைவிடுவாரா? தனது இதயத்தைத் துதியினால் நிரப்பிய சங்கீதக்காரன் நாளாந்தம் தனக்கு உணவளித்துப் போஷிக்கிறவராகவும் கர்த்தரைக் கண்டான். நமது துக்கங்களைத் தூர விலக்கி, இன்றுவரை நடத்திய தேவனைத் துதிக்கும் துதியினால் நமது இதயத்தையும் நிரப்புவோமாக. கர்த்தரின் கரத்தின் வல்லமையை நாம் நிச்சயம் அனுபவிப்போம்.

? இன்றைய சிந்தனைக்கு:  

எப்பொழுதாவது உணவுக்காக நான் ஏங்கியதுண்டா? இல்லையானால் அப்படிப்பட்ட மக்களைச் சந்தித்து, கர்த்தர் எப்படி ஆகாரம் கொடுத்தார் என்பதைத் தெரிந்துகொள்வேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin