? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எஸ்றா 4:15-18

எழுதிவைப்போம்.

நீங்கள் அனுப்பின மனு நமது சமுகத்தில் தீர்க்கமாய் வாசிக்கப்பட்டது. எஸ்றா 4:18

மற்றவரைக் குற்றப்படுத்தி அவரது முழு வாழ்வையுமே நாசப்படுத்திவிட எண்ணும் ஒருவர், அக்குற்றத்தை நிரூபிக்கவேண்டும் என்பதற்காக ஏதேதோ வழிமுறைகளைக் கையாளுவதுண்டு. அதில் முக்கியமானது எழுத்தில் பொறிக்கப்பட்ட நிரூபணம். அநேக வருடங்களுக்குமுன், ஒருவர் ஒரு ஸ்தாபனத்தில் பணிபுரியவேண்டுமென்று வந்தார். அவர் வந்த பின்னர் சில முக்கிய பொருட்கள் காணாமற்போயின. இவரைக் குறித்த முழு விபரமும் அறியமுடியாத பட்சத்தில் இவரை விசாரித்த புலனாய்வு பொலீஸ் அதிகாரி, இவரது தினப்பதிவேட்டை வாங்கி எடுத்தார். அதிலிருந்த சில ரசீதுகளைக்குறித்து எழுதப்பட்டிருந்த குறிப்புகளின் அடிப்படையில், பல உண்மைகள் வெளியாகின. உடனே அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

எருசலேமில் இருந்த புறவினத்தாரும், இந்த இஸ்ரவேலர் பிரச்சனைக்குரியவர்கள் என்று தாம் எழுதிய மனுவிற்கு ஆதாரம் தேடினார்கள். அதற்காக, ராஜாவின் பிதாக்களின் நடபடிகைகளை நினைவூட்டி, அவற்றைச் சோதித்துப் பார்த்து காரியங்களைக் கண்டறியலாம் என்று எழுதி அனுப்பினார்கள். “அந்தப் பட்டணம் கலகமும், ராஜாக்களுக்கும் பிரதேசங்களுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறதும், எப்பொழுதும்குழப்பம் விளைவிக்கிற பட்டணமாகவும் இருந்ததாலேயே அது பாழாக்கப்பட்டது” என்றும் புஸ்தகங்களில் காணலாம் என்று எழுதினர். அதாவது பட்டணம் கட்டப்பட்டால் ராஜாவுக்கே ஆபத்து என்று ராஜாவுக்குப் பயம் உண்டாகத்தக்கதாக எழுதினர். அவர்கள் எழுதியதில் பிழையில்லை. அந்தப் பட்டணத்திற்கும், அதன் ஜனங்களுக் கும், சுற்றியிருந்த மக்கள் பயந்திருந்தது உண்மை. ராஜ்யங்களும் ராஜாக்களும் மெய்யாகவே பயந்தார்கள். ஏன்? இவர்களுடைய தேவன் பெரியவரும் வல்லமை உள்ளவருமாய் காரியங்களை நடப்பித்தார். ஆனால் இந்த உண்மையை இந்தப் புறவினத்தார் தமக்குச் சாதகமாக்கி, ராஜாவைப் பயமுறுத்தி, வேலையைத் தடைசெய்ய முயன்றார்கள்.

எதையும் எழுத்துவடிவில் எழுதி வைப்பது நல்லது. வாய்ப்பேச்சு மாறிப்போகும் இந்நாட்களில், எழுத்திற்கு பெறுமதி அதிகம். அவை நன்மையானதாகவோ, தீமையானதாகவோ எழுதப்படலாம். ஆனால் நன்மையான காரியங்களும் சில சமயம் தீமையாக முடியலாம். தேவனின் வார்த்தையினை அடிப்படையாகக்கொண்டு நாம் எழுதிவைக்கும் எதுவும் வீண்போகாது. ஆகவே தியான வேளையிலே நம் இருதயத்திலேதேவன் பேசும் நற்காரியங்களை எழுதிவைக்கப் பழகுவோம். அது நமக்கும், நமக்குப் பின்வரும் சந்ததிக்கும் உதவும்.

? இன்றைய சிந்தனைக்கு:

எனக்கென்று ஒரு தியான குறிப்புப் புத்தகம் இருக்கிறதா? இல்லையானால் இன்றே ஒன்றை ஆயத்தம்செய்து, ஜெபநேரத்தில் வேதாகமத்துடன் அதையும் திறந்துவைப்பேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin