📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு :  2கொரிந்தியர் 6:16 எபேசியர் 3:14-19

ஆண்டவர் என்னுள்ளே!

விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி நிலைபெற்றவர்களாகி… எபேசியர் 3:17

ஒரு குடும்பம் வாழுகின்ற வீடு, அது வெறும் கட்டிடம் அல்ல; அது ஒரு இல்லம்! ஆனால், வீட்டின் தலைவனாக, அங்கத்தவராயிருக்கிற உங்களை வீட்டிலுள்ளவர்கள் பகைத்தால், புரிந்துகொள்ளாமற்போனால், உங்களையும் உங்கள் பேச்சையும் புறக் கணித்தால் எப்படி உணருவீர்கள்? வீட்டைவிட்டுப் போய்விட எண்ணினாலும் முடியுமா? எங்கே போவது? எங்கே தலைசாய்ப்பது? நாம் வாழும் வீட்டில் வாழவும் முடியாமல், விலகிப்போகவும் முடியாமல், துன்பமோ, புறக்கணிப்போ, வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்ற நிலை எவ்வளவு துக்கரமானது! அனுபவித்திருந்தால் இந்த உணர்வு புரியும்.

லெந்து காலத்தில் என்னதான் சடங்காசாரங்களை நாம் முன்னெடுத்திருந்தாலும், நம்மை தற்பரிசோதனை செய்வது மிக அவசியம். நான் மனந்திரும்பி விட்டேனே என்று எண்ணலாம். நமது மனந்திரும்புதல் நித்தமும் புதுப்பிக்கப்படவேண்டிய ஒன்றல்லவா! நமது மரணமோ, இயேசுவின் வருகையோ எதுவானாலும் முந்திக்கொள்ளலாம் என்ற காலத்துக்குள் வந்துவிட்ட நிலையில், இந்த நாளில் நம்மை நாமே ஒரு கேள்வியைக் கேட்டுப்பார்ப்போம். நான் தேவனுடைய ஆலயம், கிறிஸ்து எனக்குள் வாசம்பண்ணுகிறார், பரிசுத்த ஆவியானவர் என்னுள் வாழுகிறார் என்றெல்லாம் கற்றறிந்திருக்கிற நமக்குள் வாசம்பண்ணுகின்ற ஆண்டவர், தமது இல்லமாகிய நமக்குள் மகிழ்ச்சியோடும் பிரியத்தோடும் வாசம்பண்ணுகிறாரா? ஆண்டவரை, அவருடைய வார்த்தையை நாம் புறக்கணித்து வாழும்போதெல்லாம் அவர் எவ்வளவாக வேதனைப்படுவார் என்பதை, நமது குடும்பத்தவர்கள் நம்மைப் புறக்கணித்துத்தான் நாம் உணரவேண்டுமெனில் அது மிகவும் கடினமாக இருக்கும்.

விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும்…” ஆம், நாம் இயேசுவைக் கிருபையாக வாழ்வின் இரட்சகராக ஏற்றுக்கொண்டபோதே அவர் நமக்குள், உள்ளான மனுஷனுக்குள் வாசம்பண்ண வந்துவிடுகிறார். இந்த விசுவாசத்தில் நாம் ஒருபோதும் தளர்ந்துவிடக்கூடாது. ஆனால், நம்மைக் கட்டியிருந்த பாவத்தின் சங்கிலியை முறித்து நமக்குள் வாசம்பண்ண வந்தவருடைய ஆளுகைக்கு, அதாவது அவருடைய வார்த்தைக்கு நம்மை ஒப்புக்கொடுத்திருக்கிறோமா என்பதே கேள்வி. இயேசுவை நமது இரட்சகராக ஏற்றிருக்கிறோம் எனினும், தனிப்பட்ட வாழ்வின் கட்டுப்பாடு முழுதாக அவருக்குள் இருக்கிறது என்பது அதன் அர்த்தமாகாது. ஆண்டவர் நமக்குள் வாழவேண்டுமென்றால், நாம் நமது சுயத்துக்கு மரித்துத்தான் ஆகவேண்டும். “இனி நான் அல்ல; கிறிஸ்துவே எனக்குள் வாழுகிறார்.” இந்த அறிக்கை நமதாகவேண்டும். என் ஆண்டவர் எனக்குள் மகிழ்ச்சியுடனும், பிரியத்துடனும் வாழுகிறாரா, அது உண்மையா என்பதை இந்த நாளில் ஆராய்ந்துபார்த்து மனந்திரும்புவேனாக.

💫 இன்றைய சிந்தனைக்கு:

ஆண்டவரைத் துக்கப்படுத்திய சந்தர்ப்பங்களுக்காக மனம் வருந்தி, இயேசு எனக்குள் வாழ்வதை நிச்சயப்படுத்துவேனாக.

📘 அனுதினமும் தேவனுடன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *