? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 2சாமு 12:7-14 சங் 51

என்னைக் குணமாக்கும் கர்த்தாவே!

தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும். நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். சங்கீதம் 51:10

“38 வருடங்கள் தாமதிக்காமல் கர்த்தர் இரட்சித்திருந்தால், வாழ்வில் ஏற்பட்ட பல துன்பங்களைத் தவிர்த்திருக்கலாமே என்று நான் சிந்திப்பதுண்டு. ஆனால், தேவனது வேளை பிழைப்பதில்லை; 38 வருட கால தோல்விகளும் விழுகைகளும் என்னை உணரச்செய்தது. “இயேசுவே எல்லாம்” என்று சரணடைய நடத்திய உபாத்தியாயி என்று உணர்ந்தபோது, கர்த்தரைத் துதிக்காமல் இருக்க முடியவில்லை”

“தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளை யெல்லாம் அவன் செய்வான்” (அப்.13:22). இது தாவீதைக்குறித்து கர்த்தர் கூறியதாக பவுல் கூறிய வார்த்தைகள். தாவீது என்ன செய்யவேண்டும் என்று கர்த்தர் நினைத்தாலே போதும், தாவீது அதைச் செய்துவிடுவான். இப்படித்தான் தாவீது கர்த்தருடைய இருதயத்துக்கு ஏற்றவனானான். நம்மைக்குறித்து இப்படியொரு சாட்சியைக் கர்த்தர் கூறக் கூடுமோ? தாவீது, கர்த்தருக்காகப் பெரிய காரியங்களைச் செய்தவர், சமஸ்த இஸ்ர வேலையும் நீதியாய் ஆட்சிசெய்த ஒருவர். இப்படிப்பட்டவர் கண்பார்வை இச்சையினால் தூண்டப்பட்டபோதே ஏன் உணர்த்தப்படவில்லை? தாவீது ஒரே கணத்தில் பாவத்தில் விழவில்லை; படிப்படியாகவே இந்த தீயவலைக்குள் அகப்பட்டார். ஏதாவது ஒரு படியிலாவது, “உரியாவுக்கு மாத்திரமல்ல, இது கர்த்தருக்கே செய்யும் துரோகம்” என்று நினைத்திருந்தால் தாவீதில் இப்படியொரு கறை ஏற்பட்டிருக்காதே? படிப்படியாக தாவீது தன் இச்சையில் முன்னேறினார். விதவைக்கு வாழ்வளித்த வள்ளல் என்ற போர்வைக்குள் ஏறத்தாள ஒராண்டு காலமாக போலியாக வாழ்ந்தபோதும், கர்த்தரும் பொறுமையோடு அமைதியாய் இருந்தாரே, இது ஆச்சரியமாக இல்லையா?

தாவீது, சிறப்பானவன் என்றாலும், பாவத்திற்கு இணங்கிப்போகின்ற ஒரு சுபாவம் அவனுக்குள் மறைந்திருந்திருந்ததைக் கர்த்தர் கண்டார். அதைப் பிடுங்கி எடுப்பதற்கு சரியான தருணத்தைக் கர்த்தர் வைத்திருந்தாரா என்று எண்ணத்தோன்றுகிறது. ஏனெனில் தாவீது உணர்த்தப்பட்டபோது, அவன் மறுக்காமல் ஒப்புக்கொண்டான். “சுத்த இருதயத்தை இழந்தேன். என் ஆவி எனக்குள் முறிந்துவிட்டது. தேவசமுகத்தை இழந்தேன். பரிசுத்த ஆவியானவர் என்னைவிட்டு நீங்கினார். இரட்சண்யத்தின் சந்தோஷமே போய்விட்டது” என்று கதறிய அந்தக் கணமே அழுக்குப் படிந்த அவனது உள்ளான பகுதி குணமடைந்தது. ஆம், நமக்குள் உறைந்துகிடக்கின்ற பாவங்களை உணர்த்த, கர்த்தர் ஒரு வேளையை ஒரு வழியை வைத்திருப்பார். ஏனெனில், நாம் பாவத்தோடே அழிந்துபோவதை அவர் விரும்புவதில்லை. ஆகவே, கர்த்தாவே, என்னை ஆராய்ந்து என்னைச் சுத்திகரியும் என்று தினமும் நம்மை ஒப்படைப்பது ஒன்றே நாம் செய்யக்கூடிய உத்தம செயலாகும்.

? இன்றைய சிந்தனைக்கு:

“என்னைக் குணமாக்கும்” என்று என் முழு வாழ்வையும் ஒப்புவிப்பேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin