? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: நெகேமியா 6:1-9

நாம் பெரிய அலுவற்காரர்! 

நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான்; வரக் கூடாது….மினக்கெட்டுப்போவானேன். நெகேமியா 6:3 

பல வருடங்களுக்கு முன், இரவு புகையிரதத்தில் எல்லோரும் அயர்ந்த நித்திரையில் தூங்கிவழிந்தனர். திடீரென்று முழக்கம் போன்ற சத்தம்@ எதிரே வந்த புகையிரதத்தோடு மோதியதால், புகைவண்டியிலிருந்த பலர் இறந்துவிட்டனர். தண்டவாளத்தை மாற்றும் ஒரு பணியாளரின் தவறு காரணமாக பெரும் நாசம் ஏற்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தவறுதலாக நடந்திருந்தாலும், அநேகர் மாண்டதுபோலவே, சத்துருவும் எமது பாதையை திசைதிருப்பினால் வரும் அழிவு பேரழிவாகவே இருக்கும்.

ஆண்டவர் பணியில் அற்புதமாக முன்னேறிச் செல்லும் தேவ பிள்ளைகளின் கவனத்தை சத்துரு திட்டமிட்டே திசைதிருப்புவான் என்பதை நெகேமியாவின் அனுபவம் நமக்கு உணர்த்துகிறது. அவன் திட்டம் நிறைவேறிவிட்டால், சத்துருவுக்குக் குதூகலம்தான். ஆனால் நெகேமியா அதற்கு இடமளிக்கவில்லை. நெகேமியாவுக்கு எத்தனை தடைகள்; மனதை உலுக்கத்தக்க எத்தனை சம்பவங்கள்! ஆனாலும் நெகேமியா முன்னேறிச் சென்றார். கர்த்தரின் பெரிதான கிருபையால் நெகேமியாவின் வேலை பூர்த்தி நிலைக்கு வந்திருந்தது. அலங்கம் கட்டியாயிற்று. இனி வாசல்களுக்கு கதவு போடவேண்டும், அவ்வளவுதான். இதனைக் கண்ட சன்பல்லாத்து, தொபியா, கேஷேம், இவர்களுடன் மற்ற எதிரிகளும், எப்படியாவது நெகேமியாவின் தடத்தை மாற்றிப்போட நினைத்தனர். ஒரு சந்திப்புக்காக அன்பான அழைப்பைத் தந்திரமாக அனுப்புகின்றனர். ஆனால், நெகேமியா விழிப்பாயிருந்தார். அவருடைய பதில் மிக அற்புதம்@ அழகான, ஆனால் சூடான பதில். என்றாலும், பயமுறுத்தலும் தொடர்ந்தது. அப்போது நெகேமியா ஒரு சிறிய ஜெபம் செய்தார்: ‘தேவனே, நீர் என் கைகளைத் திடப்படுத்தியருளும்.” இதுதான் நெகேமியாவின் பெலன்.

நாளாந்த வாழ்வில் சிறிய சிறிய விடயங்களே நம்மைத் தடம்புரளவைத்துவிடுகின்றன. அது ஒரு சிறிய கோபமாக, அவசியமற்ற துன்பமாக, புரிந்துகொள்ளா தன்மையாக இருக்கலாம்; ஒரு தடவை என் கவனம் சிதைந்துபோகக்கூடிய பெரிய சோதனை வந்தது. பணியைவிட்டு ஓட நினைத்தேன். ஒரேயொரு சிறிய ஜெபம்: ‘கர்த்தாவே, என்னால் முடியவில்லை” அவ்வளவும்தான்.  தடம் விலகிவிடாதபடி கர்த்தருடைய பெருங் கிருபை என்னைத் தாங்கிக்கொண்டது. சிலசமயம் நாம் தடம் தவறும்போது, பெரிய தாக்கம் ஏற்படாமலும் போகலாம்@ ஆனால், தேவனுடனான உறவிலிருந்து, அவரது பாதையிலிருந்து விலகிவிடுகிறோமா! சிறிதோ பெரிதோ, நாம் தேவனுடைய பெரிய அலுவலில் இருக்கிறவர்கள்; அற்பத்தனமான விடயங்கள் நம் ஓட்டத்தைத் தடைசெய்யாதபடி தேவகிருபைக்குள் அடங்கியிருப்போமாக. கடந்துபோகும் இவ்வாண்டில், இப்படி தடம்மாறியிருந்தால், இப்போதே சரிசெய்து, நமக்குரிய பாதையில் முன்செல்வோமாக.

? இன்றைய சிந்தனைக்கு:

நாம் இன்னமும் தேவன் நமக்கு வகுத்த வழியில்தான் இருக்கிறோமா? அல்லது, சாத்தானின் தந்திரத்தில் அகப்பட்டு, தடம்மாறி தடுமாறுகிறோமா? கர்த்தரிடம் திரும்புவோமாக.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin