28 ஏப்ரல், 2022 வியாழன்

­­ 📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : நீதிமொழிகள் 4:20-27

இருதய காவல்

எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக் கொள். அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும். நீதிமொழிகள் 4:23

“அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்” (நீதி.23:7). தேவனைத் துதிக்கும் துதியும் ஸ்தோத்திரமும் இருதயத்தின் ஆழத்திலிருந்து புறப்பட வேண்டும். அதேசமயம், அதே இதயத்திலிருந்து எழும் சிந்தனைகள் நம்மையும் தேவனையும் பிரித்துப்போடும் அளவுக்குச் சக்தி வாய்ந்தவை என்பதைக் குறித்தும் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். நமது மூளை சிந்தனை செய்தாலும், அந்த சிந்தனைகள் இருதயத்தையே ஆக்கிரமிக்கின்றன. பின்னர் அவை உருவெடுத்து, செயலாக வெளிப்படுகிறது. “உன்னைக்குறித்து நீ யாரென்று நினைக்கிறாயோ, நீ அவனல்ல; உன்னுடைய நினைவு எப்படி இருக்கிறதோ அவ்வாறே நீ இருக்கிறாய்.”

ஞானத்திலும் அறிவிலும் ஆற்றலிலும் செல்வத்திலும்கூட சிறந்து விளங்கிய சாலொ மோன் ராஜா, எல்லாம் மாயை என்றும், தேவனுக்குப் பயந்து வாழுவதே மனிதனுக்கு சிறந்தது என்றும் எழுதிவைத்தது ஏன்? அப்படியெனில், அவர் தனது வாழ்வில் எவ்வளவாய் குழம்பித் தவித்திருக்கவேண்டும்! இறுதியில் அவருக்கு ஏற்பட்ட வீழ்ச்சியும் நமக்குத் தெரியும். இத்தனைக்கும் காரணம் அவருடைய இருதயத்தின் சிந்தனை கள்தான். “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள்” என்று அவர் எழுதியதிலிருந்தே இது விளங்குகிறது. ஒன்றை நாம் சிந்தித்துப் பார்ப்போம். நாம் எதை விரும்புகிறோமோ, அதை முடிக்க, எப்படியோ நேரத்தையும், வழிகளையும் கண்டுபிடித்து, அதைச் செய்து விடுகிறோமல்லவா! ஆம், அன்பும் ஆசைகளும் ஊற்றெடுக்கும் நமது இருதயமே நமது வாழ்வுமுறையை நிர்ணயிக்கிறது.

ஒரு உண்மைக் கிறிஸ்தவன், அடிக்கடி அலைபாய்கின்ற தன் இருதய சிந்தனையைக் கட்டுப்படுத்தவேண்டியது மிக முக்கியம். தேவனுக்குப் பிரியமான வழியில் வாழுவதைக் குறித்த சிந்தனையால் நம் இருதயத்தை நிரப்புவோமானால், அதிலிருந்து ஊற்றெடுக் கும் ஊற்று நமக்கும் அநேகருக்கும் ஆரோக்கியத்தையே கொடுக்கும். வாயில் வருவதையெல்லாம் பேசாதபடி, கண் காண்கிற எல்லாவற்றுக்கும் பின்னே செல்லாத படி முதலில் நமது இருதயத்திற்கு நாமேதான் காவல் வைக்கவேண்டும். அன்புசெலுத்து வதிலும் அவதானம் வேண்டும்; நம்மைக் கவரும் காரியங்களிலும் கவனம் வேண்டும். வலதுபுறம் இடதுபுறம் சாயாமல் நமது இருதயத்தைக் காத்துக்கொள்வது கடினம் தான். ஆனாலும், அதனை நாம் செயற்படுத்தாவிட்டால், அது நம்மைப் பாவ வாழ்விற்கு இட்டுச்சென்றுவிடும். ஆகவே, எப்போதும் நமக்கு துணைநிற்கும் பரிசுத்த ஆவியான வரின் பெலத்தை நாடி, சத்திய வேதாகமத்தின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, நல்ல ஊற்றுக் கண்களாக வாழ நம்மை ஒப்புவிப்போமாக.

💫 இன்றைய சிந்தனைக்கு:

என் இருதயத்தில் இடைவிடாமல், ஜெபநேரம் உட்பட, ஏன் தூக்கத்தில்கூட சிந்தனைகள் ஓடிக்கொண்டிருப்பதை நான் உணர்ந்திருக் கிறேனா? அதற்குக் காவல் வைப்பது எப்படி?

📘 அனுதினமும் தேவனுடன்.

12 thoughts on “28 ஏப்ரல், 2022 வியாழன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin