? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எரேமியா 17:5-8, 2நாளா14:1-7

கர்த்தரையே நம்பி ஜீவிப்போம்!

மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். சங்கீதம் 118:8

நமது வாழ்வில் தேவைகள், கஷ்டங்கள் உருவாகும்போது முதலில் யாரை நாம் நோக்கிப் பார்க்கிறோம்? கர்த்தரையா? மனுஷரையா? ஆற்றில் விழுந்து தத்தளிக்கும் ஒருவன், தான் தப்புவதற்கு ஆற்றோரத்தில் வளர்ந்து பரந்த மரத்தின் பலமுள்ள கிளையைத் தேடிப்பிடிப்பானேதவிர, பலமற்ற மெல்லிய கிளையைப் பற்றிபிடிக்கமாட்டான். கார்மேகம்போல் கஷ்டங்கள் சூழும்போது, நாசியிலே சுவாசம் தந்த நல்ல நேசரை நம்புவதைத் தவிர, நாசியிலே சுவாசமுள்ள மனிதரை அல்ல. சுயத்திலும், பிற மனிதர் மேலும் நம்பிக்கை வைத்திருப்பவர்களின் முடிவு ஏமாற்றமும் சஞ்சலமுமே. யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான் (சங்.146:5). கர்த்தர்மேல் முழு நம்பிக்கையை வைத்திருப்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் பயப்படாமலும் கலங்காமலும் இருப்பார்கள்.

ராஜாவாகிய ஆசா, கர்த்தருக்குப் பிரியமில்லாத அந்நிய தேவர்களின் பலிபீடங்களையும் மேடைகளையும் அகற்றி, சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளைத் தூரமாக்கி, கர்த்தரை நம்பி அவரையே தேடினான். அவர்களுடைய காரியங்கள் வாய்த்தது. எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம்பேர்கள் சேர்ந்த சேனையோடும் முந்நூறு இரதங்களோடும் புறப்பட்டு வந்தபோது, அவன் மனுஷரைத் தேடாமல், கர்த்தரையே முழுமையாக நம்பினான். கர்த்தரும் வெற்றியைக் கொடுத்தார். அதே ஆசா, கர்த்தரைச் சார்ந்துகொள்வதை விட்டுவிட்டான். வியாதிப்பட்டபோது, பரிகாரி களைத் தேடி கர்த்தரை விட்டுவிட்டான். அவனது ஆரம்பம் நன்றாயிருந்தாலும், முடிவு தடுமாறிவிட்டது. ‘நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; அவரை விட்டீர்களேயானால், அவர் உங்களை விட்டுவிடுவார்” (2நாளா.15:2).

‘கர்த்தரை நம்புகிறவர்களுக்கு அவர் பலத்த துருகமாய் இருந்து, தாம் சொன்னதைச் செய்யும்வரை அவர் கைவிடவேமாட்டார்.” ‘அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்” (யோபு 13:15) என்ற அசையாத நம்பிக்கையோ புவைப்போல நமக்குண்டா? நான் நம்புகிறது அவராலே வரும் (சங்.62:5) என்றார் தாவீது. நம்மால் இந்த அறிக்கையைச் செய்யமுடியுமா? காணுகின்ற மனுஷனை நம்புவதிலும், காணாத கர்த்தரை நம்புவது கடினமாகத் தெரியலாம். ஆனால் அதுதான் விசுவாசம். மனிதனை நம்பி வாழும்போது, மாம்சமான புயபெலனை நம்பி ஏமாந்து தோல்வியடைந்த நிலையே காணப்படும். மாறாத கர்த்தரை நம்புவோம், எந்த சூழ்நிலையிலும் நாம் அசைக்கப்படமாட்டோம். ‘நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமல், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரண மாய்க்கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வையுங்கள்” 1தீமோ.6:17

? இன்றைய சிந்தனைக்கு:

மனுஷரை நம்பி நேரிட்ட பாதகமான அனுபவங்களை மறந்து விடவேண்டாம். கர்த்தரையே சார்ந்து ஜீவிக்க தீர்மானம் எடுப்போம்.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin