? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2நாளாகமம் 24:16

?  யார் என் ஆலோசனைக்காரர்?

ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். 2நாளாகமம் 24:2

ராஜாக்கள், நாளாகமம் புத்தகங்கள் நாம் விரும்பிப் படிக்கின்ற புத்தகங்கள் என்று சொல்ல முடியாது. ஒருசில ராஜாக்களைக்குறித்து நாம் அறிந்திருந்தாலும், இந்த இரண்டு புத்தகங்களும் நமது இன்றைய அன்றாட வாழ்வுக்கு ஆலோசனையாகவும் எச்சரிப்பாகவும் இருக்கிறதை மறுக்கமுடியாது. இந்த மாதம் முழுவதும் இஸ்ரவேலை ஆண்ட மூன்று ராஜாக்களைக் குறித்தும், அதைத் தொடர்ந்து குறிப்பாக யூதாவை ஆண்ட ராஜாக்களைக் குறித்தும் மிகச் சுருக்கமாகத் தியானித்து வருகிறோம். இப் புத்தகங்களை விருப்பத்துடனும், ஆழமாகவும் படிக்க இத் தியானங்கள் ஊக்கமளிக்க கர்த்தர் உங்களுக்கு உதவிபுரிகிறார் என நம்புகிறேன்.

யூத ராஜவம்சத்தையே அழித்துவிட்டதாக எண்ணிய அத்தாலியாள் ஆறு வருடங்கள் தன் கையிலே ஆட்சியை வைத்திருக்க, கர்த்தர் ஆயத்தம்பண்ணின யோசேபியாத், யூதாவின் வித்தைத் தப்புவித்து பாதுகாத்தாள். ஏழாம் வருஷத்தில் அவளது கணவனும் பிரதான ஆசாரியனுமாகிய யோய்தா திடன்கொண்டு, ஏழு வயதுவரை ஒளித்துவைத்து வளர்த்த யோவாஸ் என்ற சிறுவனை ராஜாவாக்கினார்கள், யோவாஸ் பெரியவனாகும்வரை யோய்தா அவனுக்கு பாதுகாப்பின் துணையாக இருந்தான். யோவாசும் கர்த்தருடைய வழியிலே நடந்து, கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்க விரும்பினான். அதற்கும் யோய்தா எல்லாவிதத்திலும் உதவியாயிருந்தான்.

நூற்றுமுப்பது வயதுவரை வாழ்ந்த யோய்தா, தேவனுக்காகவும் அவருடைய ஆலயத்திற்காகவும் இஸ்ரவேலுக்கு நன்மைசெய்து, ராஜாவையும் தேவனுடைய வழியிலே நடத்தி வந்தான். சுருங்கச் சொன்னால் யோய்தாவும் அவன் மனைவியும்தான் யோவாஸ் ராஜாவின் அப்பா அம்மாவாக நின்று, தங்கள் உயிரையும் பாராமல் அவனை வளர்த்து நடத்தினார்கள். அவனும் சொல்கேட்டு நடந்தான். ராஜ்யபாரம் நன்றாயிருந்தது.

நமக்கும் ஆலோசனை தருவதற்கு, பெற்றோர், நண்பர், அல்லது மூத்தோர் தேவை. ஆனால், அவர் எப்படிப்பட்டவர் என்பதிலேதான் வாழ்வின் ஓட்டம் தங்கியிருக்கிறது. நமது நன்மையை நாடுகிறவர்களையும், தங்கள் சுயத்தைப் பூர்த்திசெய்யும்படி நம்மை தீய வழியில் இட்டுச் செல்லுகிறவர்களையும் பகுத்தறிகின்ற கிருபையின் ஆவியை நாம் தேவனிடத்தில் கேட்டுப் பெற்றுக்கொள்ளவேண்டும். யோய்தா வாழ்ந்திருந்த நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வையில் செம்மையானவனாய் இருந்தான் என்றால், பின்னர் என்ன நடந்தது? நாளை தியானிப்போம். ‘உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி ஆலோசனையைக் கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.” நீதிமொழிகள் 19:20.

? இன்றைய சிந்தனைக்கு:

இன்று எனது ஆலோசனைக்காரன் யார்? முதலில் ஆலோசனைக் கர்த்தரை நாடுவோம்; அவர் நம்மைச் சரியான விதத்தில் வழிநடத்துவார்.

?♂️ எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin