📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 1:28-41

தேவ ஆட்டுக்குட்டி

மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைத் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. யோவான் 1:29

சிறுபிள்ளைகளின் கிறிஸ்மஸ் நாடகம் நடந்தது. ஆட்டிடையர்களாக நடித்தவர்கள் தங்களுக்குத் தேவனால் அறிவிக்கப்பட்டதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, இயேசுவைப் பணிந்துகொள்ள ஆயத்தமாகிறார்கள். அவருக்கு எதைப் பரிசளிப்பது? தம்மிடமிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டியை அவருக்காகக் கொடுப்போம் என்று ஆலோசித்து, ஆட்டுக்குட்டி ஒன்றைத் தூக்கிக்கொண்டு இயேசு பாலகன்போல ஒரு பொம்மையைப் படுத்தி வைத்திருந்த ஒரு தொழுவத்தண்டை வருகிறார்கள். அங்கே குழந்தையைப் பணிந்து கொண்டு ஆட்டுக்குட்டியைக் கொடுக்கிறார்கள். மிக அருமையாக சிறுபிள்ளைகள் நாடகத்தில் நடித்துக் காட்டினார்கள்.

இங்கே, “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று யோவான், இயேசுவுக்கே பெயர் சூட்டுவதையே பார்க்கிறோம். பழைய ஏற்பாட்டுக் காலத்தில், பாவநிவாரணப் பலியாக ஆட்டுக்குட்டிகளைப் பலியிடுவதையும், பாவத்தை ஆட்டின்மீது சுமத்தி அதைப் போக்காடாக விடுவதையும் நாம் வாசிக்கிறோம். மனிதன் ஒவ்வொரு முறையும் பாவம் செய்துவிட்டு, பின்னர் பாவநிவாரணப் பலியாக ஒரு ஆட்டுக்கடாவைப் பலியிட்டு தனது பாவத்துக்கான பரிகாரத்தைப் பெற்றுக்கொள்வான். ஒவ்வொரு பாவத்துக்கும் எப்படிப் பலிசெலுத்தவேண்டும் என்றெல்லாம் அவர்களுக்கு நன்கு தெளிவான கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆண்டவரின் பிறப்பு இவையெல்லாவற்றிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தாற்போல் அமைந்தது. அவர் பிறந்து, இவ்வுலகில் மூன்றரை வருட ஊழியக் காலத்தை நிறைவேற்றி, உலகத்தின் பாவத்தையெல்லாம் தம்மீது சுமந்தவராய் கல்வாரிச் சிலுவையிலே தம்மை ஒப்புக்கொடுத்தார். ஆம், மெய்யாகவே அவர் நமக்காக, நமது பாவங்களுக்கான பூரணமான பலி ஆடாகத் தம்மை அர்ப்பணிக்கின்ற தேவ ஆட்டுக்குட்டியாகவே இருந்தார்.

கிறிஸ்துவைக் கண்டதுமே, “இதோ தேவ ஆட்டுக்குட்டி” என்று யோவான் தீர்க்க தரிசனமாக உரைத்தான். இப்படியாக உலகத்தின் பாவத்திற்கான கிருபாதாரபலியாக வந்த கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூருகின்ற நாம், இந்த சத்தியத்தை பிறருக்கு அறிவித்து, அவர்களையும் அந்த சந்தோஷத்துக்குள் இழுத்துக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். கிறிஸ்து ஏன் வந்து பிறந்தார் என்ற சத்தியம் அவரை அறியாதோர் மத்தியில் போய்ச்சேர நாம் வழிகளாய் அமையவேண்டும். இந்தப் பொறுப்பு சபைக்கு அதாவது நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் நாம் அதற்கு உண்மையுள்ளவர்களாக இருக்கிறோமா? இன்றைக்கே யாருக்காவது இந்த நல்ல செய்தியைக் கூறுவோமா! இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு, இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான். யோவான் 1:36

💫 இன்றைய சிந்தனைக்கு:

இயேசு பிறப்பின் அர்த்தத்தை வெளிக்கொணர நான் இந்தக் காலப்பகுதியில் என்ன செய்யப்போகிறேன்?

📘 அனுதினமும் தேவனுடன்.

Comments (1)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *