? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோவான் 8:1-11

வாழ்வளிக்கும் வார்த்தை

இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை. நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார். யோவான் 8:11

“நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே.” நான்கு சொற்கள், ஆனால், நறுக்கென்று இருதயத்தை ஊடுருவிக் குத்துகின்ற சொற்கள். மன்னிப்பளிக்கும் இயேசுவின் நல் வார்த்தைகளை நாம் கிரகித்துக்கொள்வது அவசியம். “நான் நல்லவள் அல்ல என்ற சிந்தனையினால் பாதிக்கப்பட்டிருந்தேன். நான் ஒரு விபசாரியும் அல்ல, திருடியோ, கொலையோ செய்ததுமில்லை. ஆனால், என் வாழ்க்கை சரியில்லை, நான் தகுதி அற்றவள் என்ற எண்ணம் என்னைக் குத்திக்குதறின. எல்லாரும் என்னை வெறுத்து ஒதுக்குவதுபோன்ற ஒருவித பிரமை. “உன் சிருஷ்டிகரைப் புறக்கணித்து வேறு காரியங்களுக்கு முதலிடம் கொடுத்தால் அதுவும் விபசாரத்திற்கு ஒப்பானது” என அறிந்திருந்தேன். ஒருநாள், “நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே” என்று சொன்ன இயேசுவைத் தேடி னேன். அவரது இந்த வார்த்தையை எனதாக்கினேன். அன்று நான் பெற்ற சமாதானம், விடுதலை சொல்லிடமுடியாது. விபசாரப் பெண்ணுக்கு வாழ்வளித்த அதே ஆண்டவர், அப்படிப்பட்டவர்களுக்கு விடுதலையை அறிவிக்கும் பாத்திரமாக எனக்கும் வாழ்வளித் திருக்கிறார்” என்ற சாட்சிக்காக நாமும் தேவனைத் துதிப்போமா!

விபசாரத்தில் கண்டுபிடிக்கப்படுகிறவர்கள் கல்லெறிந்து கொல்லப்படவேண்டும் என்பது நியாயப்பிரமாணம். இந்தப் பெண்ணும் பிரமாணத்தின்படி கொல்லப்படவேண்டியவள் தான். ஆனால், அவளைப் பிடித்து வந்தவர்கள் யார்? தாங்களை பரிசுத்தவான்கள் என்று பெருமைபாராட்டும் வேதபாரகரும் பரிசேயருமே, பொதுமக்களும் கூடவே இருந்தனர். இவர்களது நோக்கமே வேறு. “அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு… இயேசுவைச் சோதிக்கும்படி” இந்த திருக்கான அவர்களது தீய சிந்தனையை இயேசு அறிந்திருந்தார்! அக்கூட்டத்திலிருந்த எத்தனைபேர் அவளுடன் பாவத்தில் ஈடுபட்டிருந்தார்களோ நாமறியோம், எனினும், அவளைப் பிடித்தபோது அவளுடனிருந்த ஆண் எங்கே? என்பதை உணர்த்திய ஆண்டவர், இப்பிரச்சனைக்குஅற்புதமாய் தீர்வளித்தார். “உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்.” அங்கே வந்திருந்த அத்தனைபேரும் அந்தப் பெண்ணுடன் விபசாரம் செய்தவர்களா? இருக்கமுடியாது. ஆனால், இயேசுவின் வார்த்தையால் இருதயத்தில் குத்துண்டார்கள். தமது மனச்சாட்சியினாலேயே கடிந்துகொள்ளப்பட்டு போய்விட்டார்கள். இப்போது, கர்த்தர் அவளிடம், “நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே” என்றார்.

தேவ வார்த்தை இருதயத்தை ஊடுருவிச்செல்ல வல்லது. ஆனால், அதற்கு யார் யார் கீழ்ப்படிகின்றார்களோ அவர்கள் நிச்சம் வாழ்வு பெறுவார்கள். பாவிகளை நேசிக்கும் இயேசு பாவத்தை விரும்புவதில்லை. பாவத்தை மன்னித்து வாழ்வளிக்க ஆயத்தமாயிருக்கிறார். இயேசுவின் வார்த்தை எந்தவொரு மனிதனுடைய வாழ்வையும் மாற்றியமைக்க வல்லது. ஒருவரை நாம் நியாயந்தீர்ப்பது இலகு, ஆனால், கர்த்தரோ வாழ்வளிக்கவே வந்தார். அவரை ஏற்றுக்கொள்ளும் எந்தவொரு பாவியையும் அவர் தள்ளிவிடவேமாட்டார்.

? இன்றைய சிந்தனைக்கு:

இன்று என் மனதின் பாரம் என்ன? இயேசு என்னைமன்னித்து புதுவாழ்வு தருகிறார் என்பதை ருசிபார்ப்பேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin