­­ ? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1கொரி 11:23-26

கர்த்தர் வருமளவும்…

..நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். 1கொரி.11:26

“வீட்டிலே அப்பம் சாப்பிடும்போதெல்லாம் இறந்துபோன என் அம்மாதான் ஞாபகத் திற்கு வருவார்கள். ஏனென்றால் அவர் கடைசியாக எனக்குச் சமைத்துக்கொடுத்தது அப்பம்தான்” என்று ஒருவர் தன் தாயாரை நினைவுகூர்ந்து இந்த சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

இன்று, திருவிருந்து என்பது அநேகருக்கு சடங்காசாரமாக மாறிவிட்டது. கிரமமாக ஆலயம் செல்லாதவர்களும் “இன்று திருவிருந்து ஆராதனை, போகவேண்டும்” என்று தங்கள் திருப்திக்காகப் போகிறார்கள். அன்று இஸ்ரவேலர், எகிப்திலிருந்து தாம் விடுதலையானதை நினைவுகூர்ந்து வருடாவருடம் பஸ்காவை நியமப்படி ஆசரித்து வந்தார்கள். அதன்படியே இயேசுவும் பஸ்காவை ஆசரித்தார். ஆனால், இதுதான் தாம் இந்த உலகிலே தமது சீஷருடன் ஆசரிக்கிற கடைசிப் பஸ்கா என்றும், இனி பஸ்காவுக்காக ஆடு அடிக்கப்படவேண்டியதில்லை என்பதையும் அறிந்திருந்த நமது ஆண்டவர், தாமே பஸ்காப் பலியாக ஒரேதரம் மரிக்கப்போவதை இங்கே நினைவு படுத்துகிறார். இரண்டு விடயங்களை இயேசு கற்றுக்கொடுக்கிறார். ஒன்று, “இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரம்” என்றும், “இது என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கை” என்றும் சொல்லி, “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றார். இனி எகிப்தின் பஸ்கா ஆடு அவசியமில்லை. மேலும், இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் “கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தையே தெரிவிக்கிறீர்கள்” என்று இந்தப் பரிசுத்த பந்தியின் மேன்மையையும் ஆண்டவர் விளக்கினார்.

ஆக, இது, சடங்காசாரப் பந்தி அல்ல. இதில் அமரும்போதெல்லாம் இரண்டு விடயங் களை நினைந்து நாம் கர்த்தரைத் துதிக்கவேண்டும். ஒன்று, என் பாவங்களுக்காக சிதைக்கப்பட்ட என் இயேசுவின் சரீரம், என் பாவங்களுக்காக சிந்தப்பட்ட என் இயேசுவின் இரத்தம். இந்த நினைவு இந்தப் பந்திக்குப் போகும்போது நம் உள்ளத்தை உடைக்கவில்லையானால், இது வெறும் சடங்காசாரமாகவே இருக்கும். இரண்டாவது, “கர்த்தர் வருமளவும்”, அதாவது இயேசுவின் இரண்டாம் வருகையை நினைவுபடுத்துகின்ற பந்தி இது. இந்த நினைவு நமக்குள் எச்சரிப்பைத் தரவேண்டும். ஆகவே அஜாக்கிரதையாக இந்தப் பந்தியை நினைக்கவேண்டாம். திருவிருந்தில், அப்பத்தைப் புசித்து, பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள் என்று நமது ஆண்டவர் கூறிய வார்த்தையை நினைவிற்கொள்வோம்.

? இன்றைய சிந்தனைக்கு:

முதன்முதலில் திருவிருந்தில் சேர்ந்த நாளில் என் உணர்வு எப்படி இருந்தது? இரசம் குடிக்கின்ற கிளுகிளுப்பா? அல்லது இது நமது கர்த்தருடைய திருப் பந்தி என்ற உணர்வா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin