? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: புலம்பல் 3:1-26

?  வயலின் இசைக்கருவி

கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும். ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன். புலம்பல் 3:24

வயலின் இசைக்கருவியின் நரம்புகள் இழுக்கப்பட்டுச் சரிசெய்யப்பட வேண்டும். இசைப்பவர், நரம்புகளைத் தட்டித்தட்டி, அந்தந்த நரம்பு அததற்கேற்ற ஓசையை எழுப்புமளவும் அந்த நரம்புகளுக்கு விசை கொடுத்து இழுப்பார். மாறாக, நரம்புகள் இழுக்கப்படுவதற்கு இணங்காவிட்டால், தொய்ந்த நரம்புகளால் ஒலி எழுப்பமுடியாது, அவை செத்தது. இழுக்கப்படாத நரம்புகளைக்கொண்ட வயலின் இசைக்கருவி, இசை வல்லுனருக்கு உதவாது.

பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் தேவனுடைய வார்த்தையைச் சொல்லுவது மட்டுமல்ல, செயலிலும் காட்டுவர். மிகவும் கடினமான பாதை அது. எரேமியா ஏறத்தாழ 40 ஆண்டுகளாக யூதாவுக்குத் தேவனுடைய வார்த்தையை உரைத்தும், செய்துகாட்டியும், யூதா ராஜாக்களாலும் மக்களாலும் சொல்லொண்ணா இன்னல்களுக்கும் ஆளானாரேதவிர, ஒரு யூதனும் மனந்திரும்பவில்லை. ஆனாலும் அவர் சோர்ந்துபோக வில்லை. உலகப்பார்வையில் அவர் தோற்றுப்போனவராகத் தெரியலாம்; ஆனால் அவரே வெற்றி மைந்தன். ஏன் தெரியுமா? என்னதான் நேர்ந்தாலும், தன் பணிக்காலம் முழுவதிலும் தேவனையே இறுகப் பற்றிக்கொண்டிருந்து, அவருக்குக் காத்திருந்தார்.  இன்றைய பகுதியில் தன் மனவேதனையை வெளிப்படையாகக் கொட்டின எரேமியா, கர்த்தரையே கெட்டியாகப் பிடித்திருந்ததைக் காண்கிறோம்.

எபிரெயு மொழியின் முதல் எழுத்துக்கள் 22. கவிதை நயத்துடன் எழுதப்பட்ட  புலம்பல் புத்தகமானது, அதன் 22 முதல் எழுத்துக்களுடனேயே ஆரம்பிக்கும். தேசத்தில் பயங்கர பாவம் காணப்பட்டாலும், ஒரு நம்பிக்கையின் ஒளியை எரேமியா கண்டு அதில் வடித்தார். தேவன் பாவத்தைத் தண்டிப்பார், ஆனாலும் தேவனுடைய உண்மைத்துவம், மனவுருக்கம் ஒருபோதும் ஒழியாது என்பது எரேமியாவுக்கு நன்கு தெரியும். ஆகவே, எல்லா இக்கட்டிலும் கர்த்தரையே தன் பங்காகக் கொண்டிருந்து, கர்த்தருடைய வேளைக்காகவே அவர் காத்திருந்தார்.

ஆம், கர்த்தர், தாம் சொன்னபடியே செய்வார். ஆனால் அதற்கு முன்னர் அவர் நம் நரம்புகளை இழுக்கவேண்டியிருக்கும், தமது துதியை எழுப்பத்தக்கதாக அதன் ஓசையைச் சரிசெய்யவேண்டியிருக்கும். அது கடினமான நேரம், என்றாலும் நாம் அவரையே அண்டியிருப்போமானால், மகா இசைமேதையாகிய தேவன் நம்மில் என்ன அழகான பாடல்களை உருவாக்குவார் தெரியுமா! அது எத்தனை உள்ளங்களை ஆறுதல்படுத்தும் தெரியுமா!

? இன்றைய சிந்தனைக்கு:

வயலின் நரம்புகளைச் சரிசெய்யும்போது மிகுந்த ஓசை எழுப்பும். பின்பு அதன் நாதம் இனிமையாயிருக்கும். இன்று நான் தேவ மகிழ்ச்சியைப் பெற கர்த்தருடைய நேரத்திற்காக காத்திருப்பேனா.

?♂️ எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532
Whatsapp: +94768336006


? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin