📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2இராஜாக்கள் 2:1-18

எலியாவுக்குப் பின் எலிசா

அதற்கு எலிசா, “உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன்” என்றான். 2இராஜாக்கள் 2:9

எலியா, எலிசா இருவருமே தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட ஊழியர்கள். இவர்களோடு இன்றைய ஊழியராகிய நம்மைச் சற்று நிறுத்தி நிதானித்துப்பார்ப்போம். நம்முடைய தலைமை ஊழியர், தனக்குப் பின் ஊழியப்பாரத்தைப் பொறுப்பெடுக்கின்ற நமக்குத் தம்மிடமிருந்து என்ன வேண்டும் என்று கேட்டால், நாம் எதைக் கேட்போம். இன்று அநேகர் தலைமை ஊழியரின் வீடு, கார், இவற்றிலேயே கண்ணாயிருப்பார்கள். இது வெட்கத்துக்குரிய விடயமல்லவா! இன்று யார்தான் வல்லமையையும், வரத்தையும், அபிஷேகத்தையும் கேட்கிறோம்? எலிசா, எலியாவை விடாமல் பின்பற்றினான். இறுதியில், “நான் போகமுன்பு உனக்கு என்ன வேண்டும் என்று கேள்” என்று எலியா சொன்னபோது, எலியாவிடமிருக்கும் வரம் தனக்கு இரட்டிப்பாக வேண்டும் என்றே எலிசா கேட்டான். அதற்கு எலியா, “நீ கடினமான காரியத்தைக் கேட்டாய், எனினும் நான் எடுத்துக்கொள்ளப்படும்போது நீ என்னைக் கண்டால் நீ கேட்டது உனக்குக் கிடைக்கும்” என்று உறுதியளித்தார். எலிசாவும், எலியாவை விடாமல் பற்றிக்கொண்டும் பார்த்துக்கொண்டும் இருந்தான். எலியா எடுத்துக் கொள்ளப்பட்டபோது, எலிசா புலம்பிக்கொண்டு ஓடினான். எலியாவின் சால்வை அவன் மீது விழுந்தது, அதை எலிசா எடுத்துக்கொண்டான். அவன் திரும்பிவந்து, சால்வை யைப் பிடித்து யோர்தானின் தண்ணீரை அடித்தபோது, எலியா அடிக்கும்போது நின்றது போலவே, இரண்டுபக்கமும் மதிலாக நின்றது. இதை ஜனங்கள் கண்டார்கள்.

அன்று தேவனுடைய அபிஷேகம், வரம், ஆசீர்வாதம் இவைகள்தான் எலிசாவுக்கு மேலானவைகளாகக் தெரிந்தன. இவைகள் உன்னத ஆசீர்வாதங்கள். ஆனால் இன்று உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்கள்தான், தேவன் தரும் ஆசீர்வாதங்களாகக் கருதப் படும் கீழ்நிலைக்கு பல கிறிஸ்தவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். அதிலும் இன்று ஆசீர்வாத ஊழியங்கள் என்று ஆரம்பிக்கப்பட்டு, அநேகர் அதிலே மயங்கித் திரிவது வேதனை தரும் விடயமாகும். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவங்கள் உண்டு என்று இயேசு கூறியிருக்க, உபத்திரவம் இல்லாத வாழ்வை நான் எதிர்பார்க்கலாமா? உங்கள் பொக்கிஷங்களை பரலோகத்தில் சேர்த்து வையுங்கள் என்று இயேசு சொல்லியிருக்க, உலகப் பொக்கிஷங்கள்தான் ஆசீர்வாதம் என்று பிறரை ஏமாற்றலாமா? நம்மை வஞ்சிக்கும் பல உபதேசங்களும், ஊழியங்களும் அதிகரித்திருக்கின்ற இந்தக் கால கட்டத்தில் நாம் எச்சரிக்கையாயிருப்போம். தேவனுடைய வார்த்தையை மாத்திரம் பற்றிக்கொண்டு வாழுவோம். இவ்வுலக ஆசைக்குள் அகப்பட்டுவிடாதபடிக்கு விழிப்புடன் இருப்போம். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். கொலோசெயர் 3:2.

💫 இன்றைய சிந்தனைக்கு:

நான் ஆசீர்வதிக்கப்பட்டவன், ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று என்னால் கூறமுடியுமா?

📘 அனுதினமும் தேவனுடன்.

Comments (1)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *