? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி : ரோமர் 8:31-39

கிறிஸ்துவே நம்பிக்கை

தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? ரோமர் 8:31

வாழ்க்கையில் தொடர்ச்சியான துன்பங்களை எதிர்நோக்கும்போது நாம் சோர்வடைந்து விடுவது இயல்பு. ஒரு பிரச்சனையிலிருந்து மீண்டெழும்போது ஒரு பெலன் எமக்குள் உருவாகிறது. ஆனால், அடுத்த பிரச்சனையை எதிர்நோக்கும்போது, ‘ஏன் இவ்விதமான வேதனைகள் எனக்கு மட்டும் நேரிடவேண்டும்” என்றதான கேள்வியும் அவநம்பிக்கையும் உருவாகிறது. இவ்விதமான சந்தர்ப்பங்களில் எமக்குள்ளிருக்கும் நம்பிக்கை எங்கே என்றதான ஒரு கேள்வியை நாமே நம்மிடம் கேட்கவேண்டும்.

இன்றைய தியானப்பகுதி ரோமாபுரியிலுள்ள தேவபிரியருக்கும் பரிசுத்தவான் களுக்கும் பவுல் எழுதிய சவாலாக அமைகிறது. அவர் எதையும் புதிதாக முன்வைக்கவில்லை.தனது அனுபவத்தின் வாயிலாக தான் கண்டுகொண்ட உண்மையையே ஆணித்தர மாக விளக்க முனைகிறார். இந்த உலகில் நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எமக்கு ஒரு சவாலாக அமையலாம்@ பிறரால், நண்பர்களால் ஏன் நாம் நேசிக்கும் உறவுகளால் கூட எமக்குப் பிரச்சனைகள் எழலாம். ஆனால் இவையெல்லாவற்றின் மத்தியிலும் தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? என்ற கேள்வியை நமக்குள் நாமே எழுப்பவேண்டும். அது நம்மை உற்சாகப்படுத்தி எல்லா சூழ்நிலைகளினி ன்றும் நம்மை வெளிக்கொண்டுவரும்.

இதை எழுதிய பவுல் பிரச்சனைகளை எதிர்கொள்ளாத ஒருவரல்ல; அவர் தனது வாழ்வின் ஏழு நிலைகளைக் குறித்து இங்கே குறிப்பிட்டு எழுதுகிறார். அதாவது, உபத்திரவம், வியாகுலம், துன்பம், பசி, நிர்வாணம், நாசமோசம், பட்டயம் இவையெல்லாவற்றின் மத்தியிலும் கிறிஸ்துவின் அன்பைவிட்டு எம்மைப் பிரிப்பவன் யார்? என்ற கேள்வியை முன்வைக்கிறார். இந்தத் தபசுகாலங்களில் நாம் நினைவுகூர வேண்டிய ஒன்று, தேவன் தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்றெல்லாவற்றையும் எமக்கு அருளாதிருப்பது எப்படி? இந்நாட்கள் கிறிஸ்துவின் மூலமாய் தேவனின் அன்பு வெளிப்பட்ட சந்தோஷத்தை நினைத்து, நாமும் தேவனுக்குள் மகிழ்ந்திருப்போமாக. எல்லா சூழ்நிலைகளிலும் அவர் எமக்கு உறுதுணையாய் இருக்கிறார். அவரது நாமமாகிய ‘இம்மானுவேல்” என்பதற்கு, ‘தேவன் எம்மோடிருக்கிறார்” என்று அர்த்தமாம். தேவ பிள்ளையே, நீங்கள் என்ன நிலையிலிருந்தாலும் அதைவிட்டு எழுந்திருங்கள். தேவ நம்பிக்கையில் வேரூன்றுங்கள். உயர்வானாலும் தாழ்வானாலும் வேறெந்த சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய தேவனின் அன்பைவிட்டு எம்மைப் பிரிக்கமாட்டா தென்று அறிந்திருக்கிறேன். ரோமர் 8:39

? இன்றைய சிந்தனைக்கு:

என் நம்பிக்கையை யார் மீது எதன்மீது வைத்திருக்கிறேன்?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin