? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதி 25:24-34 எபி 12:14-17

உணர்த்தப்பட்ட ஏசாவின் அலட்சியம்

…அவன் கண்ணீர்விட்டு கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான். எபிரெயர் 12:17

சிலருடைய வாழ்வின் சம்பவங்கள் நமக்கு மாதிரியாக இருக்கின்றன; சிலருடைய வாழ்வு நமக்கு எச்சரிப்பாகவும், விழிப்புணர்வு ஊட்டுகிறதாகவும் இருக்கிறது. ஆனால் நாமோ, நியாயம் பேசிவிட்டு உணர்வற்றுப்போய்விடுகிறோம். இங்கே ஏசாவின் சங்கதி எச்சரிப்புடன், உடனே ஆராய்ந்து. மனந்திரும்பிவிடும்படி நம்மை உணர்த்துகிறது.

ரெபெக்காளின் கர்ப்பத்திலேயே இரண்டு பிள்ளைகளும் மோத ஆரம்பித்துவிட்டனர். கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்ப்பத்தில் இரண்டு ஜாதிகள் உண்டாயிருக்கிறது என்றும், ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள்; மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றும் கர்த்தர் கூறிவிட்டார். முன்கூட்டியே கர்த்தர் சகலத் தையும் அறிந்திருக்கிறவர். ஒரு குடும்ப உரித்தில், இரு மடங்கும், குடும்பத்தின் அடுத்த தலைவன் என்ற அதிகாரத்தையும் கொடுக்கின்ற சிரேஷ்ட புத்திரபாகம் என்பது குடும்பத்தில் மூத்தவனுக்கே உரித்தானது; அது மாறாது. ஒருநாள் களைத்து வந்த ஏசாவின் பார்வை யாக்கோபு சமைத்துக்கொண்டிருந்த சிவந்த கூழில் விழுந்தது. “இளைத்திருக்கிறேன். சாப்பிடக் கொஞ்சம் தா” என்று கேட்க, தருணம் பார்த்திருந்த யாக்கோபும் சிரேஷ்ட புத்திரபாகத்தைத் தனக்கு விற்றுப்போடக் கேட்டான். ஏசாவோ, “நான் சாகப்போகிறேன். இந்தச் சிரேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு” என்று பெறுமதிமிக்க தன் உரிமையை அலட்சியம்பண்ணி, ஒருவேளை உணவுக்காக, தன் உரிமையை விற்றுப்போட்டான் ஏசா. அவன் இழந்தது வெறும் உலக உரிமையை அல்ல, பின்வரக்கூடிய ஆவிக்குரிய ஆசியையும் இழந்துபோனான். கூழைக் கண்டதும், தன் அவசர தேவையைத் தீர்க்க எண்ணி, ஒரு நொடியில் உணர்ச்சிக்கு அடிமையானான். தான் எதை இழக்கிறான் என்று ஒருகணம்கூட சிந்திக்க, இச்சை இடமளிக்கவில்லை.

ஏசாவின் இந்த விற்பனை, விசித்திரமானது என்றாலும் இன்று நாமும் இதைத்தான் செய ;கிறோம். பார்த்தவுடன் விருப்பம் உண்டாவது தவறல்ல; ஆனால் அதனால் உணர்வுகள் தூண்டப்பட இடமளிக்கும்போதே இச்சை தலைநீட்டுகிறது; எப்படியாவது அடையவேண்டும், எனக்குச் சொந்தமாக்கவேண்டும், இன்றே வாங்கி உண்ணவேண்டும் என்று அந்த நேரத்து ஆசையை நிறைவேற்றத் துடிக்கும்போது, பின்னால் ஏற்படும் விளைவைச் சிந்திக்க மனம் அனுமதிக்காது. அதிலும் “சாகப்போகிறேன்” என்று தன் ஆசைக்கு மேலும் மெருகூட்டுகிறான் ஏசா. ஏசா ஒரு தெரிவுக்குள் தள்ளப்பட்டான். இன்று அநேகருடைய வாழ்வில் பாலியல் சோதனைகளும் இப்படியே அவர்களைக் கொன்றுபோடுகிறது. நொடிப்பொழுது ஏற்படுகின்ற இச்சையா? மரணம் மட்டும் மாறாத திருமண உடன்படிக்கையா? எபிரெயர் 6:4-6 வரை படிப்போம். குறுகிய இன்பங்கள், நிலையான மாறாத நித்திய மகிழ்ச்சியைச் சாகடித்துவிடும்.

? இன்றைய சிந்தனைக்கு:

இன்று இப்படி ஏதாவது பொறியில் அகப்பட்டிருந்தால், அல்லது அதுவா இதுவா என்ற போராட்டத்தில் இருந்தால் உடனேயே தேவபாதம் விழுந்துவிடுவோமாக.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin