? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1சாமுவேல் 3:1-21

வயது பார்க்காத வார்த்தை

கர்த்தர் சீலோவிலே தம்முடைய வார்த்தையினாலே சாமுவேலுக்குத் தம்மை வெளிப்படுத்தினார். 1சாமுவேல் 3:21

“நீ சின்னப்பிள்ளை, உனக்கு ஒன்றும் விளங்காது” என்று சொல்லிச் சொல்லி, வளர்ந்து பெரியவனாகி அறுபது வயதைத் தாண்டியும்கூட தன் குடும்பத்தில் யாரும் தன் பேச்சை கணக்கெடுப்பதில்லை என்றார் ஒருவர். அந்தப் புறக்கணிப்பு அவரது மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி, வாழ்வில் பல தோல்விகளைச் சந்திக்கக் காரணமாக்கியது.

சாமுவேலின் பிறப்பு, அவர் தேவாலய பராமரிப்பில் விடப்பட்டு வளர்ந்தது, ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்தது எல்லாம் நாமறிந்ததே. அந்நாட்களில் கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது, பிரத்தியட்சமான தரிசனம்கூட இருந்ததில்லை. அதாவது, தமது வசனத்தைக் கொடுப்பதற்குக் கர்த்தர் ஆயத்தமாயிருந்தாலும், அதைப் பெற்றுக்கொள்ளக்கூடிய எவரும் இஸ்ரவேலில் இருக்கவில்லை என்று விளங்குகிறது. அந்தவேளையில்தான் கர்த்தர் தமது வார்த்தையை அருளுவதற்கு ஒரு சிறுவனைக் கண்டார். ஏலிக்கும், தேவனுடைய பெட்டிக்கும், பணிவிடை செய்யும்படிக்கு சாமுவேல் வளர்க்கப்பட்டிருந்தான். கர்த்தருடைய ஆலயத்தில் பிரதான ஆசாரியரின் கண்காணிப்பில் வளர்க்கப்பட்டும் சாமுவேல் இன்னமும் கர்த்தரை அறியாதிருந்தான். “தமது வார்த்தையை அருள ஏற்றவன்” என்று கர்த்தர் அவனைக் கண்டார். அப்படியே, “கர்த்தர் அவனுடனேகூட இருந்தார், அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்துபோக விடவில்லை.” சின்னப்பிள்ளை என்று கருதப்பட்ட சாமுவேல்தான் இஸ்ரவேலுக்கு நியாயாதிபதியும் தீர்க்கதரிசியுமானார். வார்த்தைக்கு வயதெல்லை இல்லை, அது அருளப்படுவதற்கும் வயது தேவையில்லை.

பிறராலும், குடும்பத்தினராலும், நாம் புறக்கணிக்கப்படலாம். சிறுபிள்ளை என்றோ, வயது மூத்தோர் என்றோ தள்ளிவைக்கலாம். “இவர்களுக்கு எதுவும் தெரியாது” என்று சபையிலோ வீட்டிலோ, நம்மை பொருட்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் கர்த்தருக்கோ வயதெல்லையும் இல்லை, வரையறையும் இல்லை. அவர் தம்முடைய வார்த்தையை அருளுவதற்கு ஒரு இருதயத்தையே தேடுகிறார். அந்த இருதயம் எம்மிடம் காணப்படுமா? சாமுவேல் ஒரு பிள்ளை, ஆனால், தான் இன்னமும் அறியாதிருந்த கர்த்தரிடம் பக்தியும் பாசமும் கொண்டிருந்ததை அவர் நித்திரை செய்த இடமே சாட்சியிடும். ஆசாரியனான ஏலி கண்டுகொள்ளாத சாமுவேலைக் கர்த்தர் கண்டார். சாமுவேலும் கர்த்தருடைய வார்த்தைக்கு உண்மையாகவே வாழ்ந்தார். பிரியமானவர்களே, தேவ வார்த்தைக்கு நாம் கீழ்ப்படிவோம். தேவ வசனத்தை வாஞ்சையோடு தேடுவோம். அதை தைரிய மாக மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வோம். தேவன் தேடுவதெல்லாம், அவருக்கு உண்மையாக வாழ துடிப்பவர்களையே. அவரது வார்த்தை நம்மிடமுண்டா?

? இன்றைய சிந்தனைக்கு: கர்த்தர் என்னோடு பேசுவாரா? அவரது தேவ வார்த்தை என்னோடு பேசுகின்றதா? அதை நான் தேடுகிறேனா? பிறரிடம் தேவ வசனத்தைப் பகிர்ந்துகொள்வேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin