? சத்தியவசனம் – இலங்கை.

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ரோமர் 12:1-10

தேவ சித்தம் அறிதல்

தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
ரோமர் 12:2

மனிதன் பாவத்தில் விழுந்து, தேவனைவிட்டுப் பிரிந்த அந்த விநாடியிலேயே அவனுக்குள் வெறுமை தோன்றியது. இதன் பலனாக அவனுக்குள் ஒரு தேடல் ஆரம்பமாகி விட்டிருந்தது. கர்த்தருடைய சத்தத்தை மாத்திரமே கேட்டவன் இப்போது அந்நிய சத்தத்திற்குச் செவிகொடுத்து விட்டதால், அவனுக்கு தெரிவு உண்டானது. தேவசித்தம் ஒன்றையே கொண்டிருந்தவனுக்குள் இப்போது சுயசித்தம், சத்துருவின் சித்தம் என்று ஒரு கலப்படமே உண்டாகிவிட்டது. அதனால் தேவசித்தத்தை அறியமுடியாத நிலைஉருவானது. இயேசு உலகுக்கு வந்து தேவசித்தத்தை அறியவும், அதன்படி நடக்கவும் மாதிரியை வைத்துப்போனார். அப்படியிருந்தும் இன்றும் மனிதன் உலகத்துக்குச் செவிகொடுத்து, உலகத்துடன் ஒத்துவாழ்ந்து, உலகத்தையே பிரியப்படுத்துவதால் தேவசித்தத்தை இழந்து, வழிதெரியாது தவிக்கிறான். இப்படிப்பட்டவர்களில் நாமும் ஒருவரா?

சிலரைக் கவனித்திருக்கிறீர்களா? எந்நேரமும் எதையோ இழந்ததுபோன்ற அங்கலாய்ப்பு முகத்திலேயே தெரியும். எந்த ஊழியக்காரர் வந்தாலும், ஜெபித்து ஏதாவது சொல்லமாட்டாரா என்ற ஏக்கத்துடன் போய் நிற்பர். இது ஒருவரது வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்: தனது வாழ்வில் சகலமும் தோல்வியில் முடிந்ததால், தேவசித்தத்துக்கு மாறாக நடந்துவிட்டேனோ என்ற பயம் அவருக்குள் உண்டானது. அடுத்தாற்போல், அப்போது தேவ சித்தத்தை அறிவது எப்படி என்ற கேள்வி எழுந்தது. அதையறிய அங்குமிங்கும் அலைந்தார். அந்தசமயத்தில் ஆலயத்தில் தேவசெய்தி கொடுக்க அழைக்கப்பட்ட பிரசங்கியார், “உங்களில் சிலர் தேவசித்தத்தை அறிவது எப்படி என்று குழம்பி நிற்கிறீர்கள். அந்தக் குழப்பத்தைத் தீர்க்கவே நான் கர்த்தரால் அனுப்பப்பட்டு வந்திருக்கிறேன்” என்றார். என்ன அற்புதம்! தேடுகிறவனுக்கு நிச்சயம் தேவன் பதிலளிப்பார்.

இங்கே பவுல், தேவசித்தத்தை அறிவதற்கு நாம் செய்யவேண்டியவற்றை விளக்குகிறார். முதலாவது, நமது சரீரங்களைப் பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும். பாவம் இலகுவில் பற்றிப்பிடிக்கக்கூடிய நமது சரீரங்களை தேவசமுகத்தில் பலியாக்கவேண்டும். முடியுமா? பின்னர், இந்த உலகிற்குஒத்த வேஷம் தரிக்கக்கூடாது. அதாவது நமது ஆசை இச்சைகள் யாவையும் சிலுவையில் அறைந்துவிட்டு, உலகிற்கு மரித்தவர்கள்போல ஆகவேண்டும். முடியுமா? நமதுசுயசித்தம் சாகுமானால் கர்த்தர் தமது சித்தத்தை நமது இருதயத்திலே வைப்பார். நாம் ஜெபிக்கும்போது, வேதம் படிக்கும்போது, சிலசமயம் செய்திகளினூடாகவும் கர்த்தர் தமது சித்தத்தை வெளிப்படுத்துவார். ஆனால், அதற்குக் கீழ்ப்படிய நாம் ஆயத்தமா? மறுபுறத்தில் கீழ்ப்படிகிறவனே அவர் சித்தம் அறிய தன்னை ஒப்புக் கொடுப்பான். நாம் எப்படி?

? இன்றைய சிந்தனைக்கு:    

 என்னை முழுவதுமாக தேவனிடம் ஒப்புவிக்கும்போதுதான் தேவ சித்த்ததை என்னால் உணரமுடியும் என்றால், இப்போது எனக்குள் உள்ள தடைகள் என்ன?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin