? சத்தியவசனம் – இலங்கை.

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 2நாளா 15:1-19

தேடினால்; தென்படுவார்!

நீங்கள் அவரைத் தேடினால் உங்களுக்கு  வெளிப்படுவார். அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார். 2நாளாகமம் 15:2

பலவித சூழ்நிலைகளிலும், “கர்த்தர் நம்மைக் கைவிட்டுவிட்டார்; எந்த பதிலுத்தரவும் அவர் தரவில்லை” என்று நாம் புலம்புவதுண்டு. ஆனால் உண்மை அதுவல்ல. நாமே தான் பொறுமையிழந்து கர்த்தரைத் தேடாமல் வேறு வழிகளை நாடுகிறோம். தேவைக்கு மாத்திரமா கர்த்தர்? எல்லா நிலையிலும் அவரையே சார்ந்து வாழவேண்டாமா?

ஆசா ராஜாவானபோது, “தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்” என்று வாசிக்கிறோம். இதன் விபரத்தை 14:2-7 வரை வாசிக்கலாம். எத்தியோப்பியர் ஆசாவுக்கு விரோதமாக வந்தபோதும், அவன் தன் சுயத்தில், தனது இராணுவ பெலத்தில் இயங்காமல், “கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலமற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம். எங்களுக்குத் துணை நில்லும்” என்று ஜெபிக்கிறான். கர்த்தரும் அவனுக்கு வெற்றி கொடுத்தார். அந்தசமயத்தில் அசரியாவில் தேவ ஆவி இறங்கியதால், அவன் ஆசாவுடன் பேசினான். “நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால் உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களோ, அவர் உங்களை விட்டுவிடுவார்”என்று கூறிய அசரியா, “உங்கள் கைகளை நெகிழவிடால் திடன்கொள்ளுங்கள்” என்றும் திடப்படுத்தினான். ஆசாவும் ஜனங்களும் முழு மனதுடன் கர்த்தரைத் தேடினார்கள்; கர்த்தர் அவர்களுக்கு வெளிப்பட்டு, சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாதபடிக்கு அவர்களை இளைப்பாறப்பண்ணினார்” (2நாளா.15:15).

முப்பத்தைந்து ஆண்டுகள் நன்றாகவே சென்றது. முப்பதாறாம் வருஷத்திலே ஆசாவுக்குநடந்தது என்ன? இஸ்ரவேலின் ராஜா எதிராக வந்தபோது, கர்த்தரைத் தேடாமல் தன் சுயபுத்தியின்படி ஆசா நடந்துகொண்டது எப்படி? அந்நியனாகிய  சீரியா ராஜாவை உதவிக்கு நாடியது என்ன? அதிலும் கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களை அனுப்பி, வேண்டுகோள் விடுத்ததும் ஏன்? அனானி என்ற ஞானதிருஷ்டிக்காரன் ஆசாவிடம் வந்து, “இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்” என்கிறான். மனந்திரும்ப வேண்டிய ஆசா அவனில் கோபமடைந்தான். ஆசா, தன் வியாதியிலும் கர்த்தரைத் தேடவில்லை. அவன் கர்த்தரை விட்டான்; கர்த்தரால் அவனுக்கு உதவமுடியவில்லை.

இன்பமோ துன்பமோ, இன்று நாம் யாரைத் தேடுகிறோம்? யாரைச் சார்ந்து நிற்கிறோம்? கர்த்தரைத் தேடினால் நிச்சயம் அவர் நமக்கு ஏதோவிதத்தில் தாம் நம்மோடிருப்பதை உணர்த்துவார். கர்த்தர் நம்மோடிருக்கவில்லை என்று உணர்ந்தால், அது கர்த்தரல்ல, நாமேதான் அவரை விட்டுவிட்டோம் என்பதை உணர்ந்து மனந்திரும்புவோமாக.

? இன்றைய சிந்தனைக்கு:      

இதுவரை என் இக்கட்டில் நான் வெளிவரமுடியாமல் தவித்ததன் காரணம் என்ன? நான் முழு மனதுடன் கர்த்தரையே சார்ந்து, அவரையே தேடுவேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin