? சத்தியவசனம் – இலங்கை.

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோவான் 21:1-25

நீ என்னை நேசிக்கிறாயா?

யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்ட படியினாலே பேதுரு துக்கப்பட்டு… யோவான் 21:17

ஏதாவது ஒரு சம்பவம் இருமுறை சம்பவித்த அனுபவம் நமக்குண்டா? “1977 ம் ஆண்டு ஒரு இக்கட்டான சமயத்திலே, “தேவனே என்னை ஆராய்ந்து அறிந்துகொள்ளும்” என்ற 139ம் சங்கீத வாக்கியங்களின் அடிப்படையில் நான் கேட்ட பிரசங்கத்திற்கு நான் செவி சாய்க்கவில்லை. சரியாகப் பத்து வருடங்களின் பின்னர் 1988ம் ஆண்டு, எல்லாம் இழந்துவிட்ட நிலையில் இன்னொருவர் மூலமாக அதே வார்த்தைகளைக் கொண்டு தேவசெய்தி பிரசங்கிக்கப்பட்டபோது, நான் உள்ளம் உடைந்து தேவபாதத்தில் விழுந்தேன்”என்று ஒரு சகோதரி தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்கள்.

கெனேசரேத்துக் கடற்கரையிலே நின்ற இரு படகுகளில் ஒன்றில் இயேசு ஏறிய படகு சீமோனுடையது. இது தற்செயல் நிகழ்வு அல்ல; இயேசு யாவையும் அறிந்தவர். அன்று நடந்த அற்புதம் பேதுருவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்தப் படவில் இருந்தபடியே இயேசு சீமோனை அழைத்தார். அவனும் யாவையும் விட்டு இயேசுவின் பின்னே சென்றான். இயேசுவை நேசிக்காமலா பேதுரு அவருடன் சென்றான்? மூன்றரை வருடமாக அவன் இயேசுவுடனேயே இருந்தான். அவர், அவனுக்குப் பேதுரு என்று பெயரிட்டார். அவனும் இயேசுவுக்காக தன் உயிரையும் கொடுப்பேன் என்றான். ஆனால், “சேவல் கூவுவதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய்” என்று இயேசு எச்சரிக்கை கொடுத்திருந்தும், சந்தர்ப்பம் நேரிட்டபோது பேதுரு மூன்றுதரம் இயேசுவை மறுதலித்தேவிட்டான். திரும்பி இயேசுவின் கண்களைச் சந்தித்தபோது மனம்கசந்து அழுதான் என்றுவாசிக்கிறோம். இந்தக் குற்ற உணர்வு பேதுருவைத் துளைத்துக்கொண்டே இருந்திருக்கவேண்டும். ஏனெனில் இயேசு உயிர்தெழுந்த செய்தி கேட்டும், வெறும் கல்லறையைக் கண்டும் அவன் திரும்பிப்போய்விட்டான். மாத்திரமல்ல, அவன் தன் பழைய வாழ்வுக்கே திரும்பிவிட்டான். இந்த இடத்திலேதான், முன்னர் சந்தித்த அதே கடலின் இன்னுமொரு பகுதியிலே, திபேரியாக் கடலோரத்திலே, முன்னர் நடந்துபோன்றதான ஒரு நிகழ்வினூடாக கர்த்தர் பேதுருவைச் சந்திக்கிறார். இவர்தான் நமது ஆண்டவர்! தன்னை மூன்று தடவைகள் மறுதலித்த பேதுருவின் குற்ற உணர்வு முற்றிலும் நீங்கும்படி, “நீ என்னை நேசிக்கிறாயா” என்று மூன்று தடவைகளாகக் கேட்டு, கர்த்தர் அவனது காயத்தை ஆற்றினார். அவன் தம்மை நேசிப்பதைக் கர்த்தர் அறிவார், என்றாலும் அவனது வாயறிக்கையை இயேசு கேட்க விரும்புகிறார். மாத்திரமல்ல, “சீமோனே” என்று அவனுடைய சொந்தப் பெயரை அழைத்தே கேட்கிறார். அவனை அவனாகக் காண்கிற கர்த்தர், அந்த இடத்திலே அவனைப் பேதுருவாக நிலை நிறுத்தியதைக்  காண்கிறோம். நாம் கர்த்தரை நேசிப்பதை அவர் அறிவார், என்றாலும் இன்று நாம் எங்கே நிற்கிறோம்? கர்த்தர் இன்று நம்மிடம் கேட்பது, “நீ என்னை நேசிக்கிறாயா?” என்பதே. நமது பதில் என்ன?

? இன்றைய சிந்தனைக்கு:      

கர்த்தரின் கேள்விக்கு உண்மைத்துவத்துடன் பதிலளிப்பேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin