? சத்தியவசனம் – இலங்கை.

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு :2இராஜா 18:1-37

யார்மீது நம்பிக்கை

அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை. 2இராஜாக்கள் 18:5

சுகயீனமாக இருந்த ஒரு வயோதிபத் தாயாரைச் சந்தித்து, உங்கள் சுகத்திற்காக ஜெபித்தீர்களா என்று வினவியபோது, அவர்கள் சொன்ன பதில் என்னை ஆச்சரியப்பட வைத்தது. “வருடம் தொடங்கும்போதே இந்த வருடம் எனக்கு எப்படிப்பட்டதாக இருக்குமோ என்று எண்ணி எல்லாவற்றையும் அவரிடமே ஒப்படைத்துவிட்டேன். இப்போது இந்த சுகயீனம் வந்திருக்கிறது என்றால் எல்லாம் அவருக்குத் தெரியுமே” என்றார்கள். நாமும் வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்கள், சோதனைகள் சந்தோஷங்கள் என்று கடந்து இந்தப் புதிய வருடத்தில் காலடி எடுத்து வைத்துள்ளோம். இந்த வருடம் எப்படிப்பட்டதாய் இருக்குமோ என்றதான அங்கலாய்ப்பு எம்மிடத்திலும் இருக்கத்தான் செய்கிறது. எமக்கு ஒரு முன்னுதாரணமாக எசேக்கியா ராஜா நிற்கின்றார்.

இருபத்தைந்து வயதிலே ராஜ்ய பாரத்தைக் கைப்பற்றிக்கொண்ட இந்த எசேக்கியா, கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானவற்றையே செய்தான் என வாசிக்கிறோம். அதுமாத்திரமல்ல, இவன் மேடைகளை அகற்றி, விக்கிரகத்தோப்புக்களை வெட்டி, வெண்கலச் சர்ப்பத்தை உடைத்து இப்படியாக தேவையற்ற அனைத்தையும் அழித்து ஒழித்துவிட்டு. ஜீவனுள்ள தேவன்மேல் மாத்திரம் நம்பிக்கையுள்ளவனாக இருந்தான். இவனது நம்பிக்கையைக் குறித்து, தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்;கை வைத்தவர்களில் இவனுக்கு முன்போ, பின்போ எந்த ராஜாவுமே இவனைப்போல் இருந்ததில்லை என்று வாசிக்கிறோம். இதுமட்டுமல்லாமல் இவன் கர்த்தருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிகிறவனாகவும் இருந்தான். அதனால் கர்த்தர் அவனுடனே கூடவே இருந்தார். இப்போது இவனது நம்பிக்;கைக்குச் சவாலாக சனகெரிப் என்பவன் வந்து தனது வார்த்தைகளால் ஜனங்களைக் குழப்புகிறான். “நீ வைத்திருக்கிற நம்பிக்கை என்ன? என்னையே விரோதிக்கும்படிக்கு அப்படி யார் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்” என்று கேள்வி எழுப்புகிறான். கர்த்தருடைய நாமத்தை அசட்டைபண்ணி, அவருக்கு விரோதமாக அவன் பேசுவதையும் காண்கிறோம். எசேக்கியா சோர்ந்துபோகவில்லை. தனது நம்பிக்கையை விட்டு விலகிப்போகவும் இல்லை. அவன் தெளிவுடன் இருந்தான்.

பிரியமானவர்களே, நமது நம்பிக்கைக்கு சவாலான காரியங்கள் நடக்கும்போது, நாம் எங்கே நிற்கிறோம்? தேவன்மீதுள்ள நாம் கொண்டுள்ள நம்பிக்கையிலே உறுதியாய் நிலைத்து நிற்கின்றோமா? இந்த வருடத்தின் முதல் நாளிலே வந்து நிற்கின்ற நமக்கு தேவையானது தேவன்மீதுள்ள நம்பிக்கை மட்டுமே. எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருந்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர். சங்கீதம் 22:4.

? இன்றைய சிந்தனைக்கு:   எனது நம்பிக்கை தளரும்போது நான் யாரை நோக்கிப் பார்க்கிறேன்.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin