📖 சத்தியவசனம் – இலங்கை.

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபிரேயர் 11:1-40

முடிவுபரியந்தமும்

விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஒட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். எபி.12:1

சிலர், நெருக்கடிகள் ஏற்படும்போது ஆண்டவரிடத்தில் வருவார்கள். தேவை முடிந்ததும் சிலகாலம் விசுவாசிகளைப்போல இருந்து, பின்னர் வாழ்வில் ஏதாவது சிக்கல் நேர்ந்ததும் விசுவாசத்தை விட்டு வழிவிலகிப் போய்விடுவார்கள். அப்படியான விசுவாசம் நமக்கு நல்லதல்ல. முடிவுபரியந்தமும் நிலைத்திருக்கிற விசுவாசமே அவசியமானது.

எபி.11ம் அதிகாரம் விசுவாச வீரர்களின் பட்டியல் என்பது நாம் அறிந்ததே. இந்தப் பட்டியலில் விசுவாச வீரனாக குறிப்பிடப்பட்ட சிம்சோனும் கர்த்தருக்காக வீரதீர செயல்களைச் செய்தவனே. தேவ ஆவியின் அபிஷேகம் பெற்றவனாய், எப்படிப்பட்ட பலசாலிகளையும், எத்தனை பேர் வந்தாலும் ஒரு கழுதையின் தாடையெலும்பால் அவர்களை அடித்து நொருக்கிய அவனைப்போல வேதாகமத்தில் யாரையும் பார்க்கமுடியாது. ஆனால், அவன் மாம்ச இச்சைக்கு இடமளித்து, தெலீலாள் என்ற ஸ்திரீயோடு  ஒரு சிநேகம் கொண்டு, அவளது நயமான பேச்சில் மயங்கி, தனது பலத்தின் இரகசியத்தை அவளுக்கு சொன்னதால், அவன் பெலிஸ்தரால் சிறைப்பிடிக்கப்பட்டான்;  கண்கள் பிடுங்கப்பட்டு பரிகாசத்துக்கு ஆளானான். அதேசமயம், 36ம் வசனத்தில், வேறுசிலர் நிந்தைகளையும், அவமானங்களையும், அடிகளையும், காவல்களையும் அனுபவித்தார்கள் என்று வாசிக்கிறோம். ஆனால், அவற்றின் மத்தியிலும் அவர்கள் தளர்வடையவில்லை; முடிவுபரியந்தமும் விசுவாசத்தில் நிலைத்திருந்தார்கள். நெருக்கடியான காலப் பகுதியில் வாழுகின்ற நமக்கும் அந்த விசுவாசமேதான் தேவை. ஏனெனில், “முடிவு பரியந்தம் நிலைநிற்கிறவனே இரட்சிக்கப்படுவான்” என்கிறது வேதவாக்கியம்.

இயேசு, தமது பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதில் முடிவுபரியந்தமும் நிலையாய் நின்றார். அவருடைய பிள்ளைகள் நமக்கும் அதே சிந்தை அவசியம். 11ம் அதிகாரத்தை முடித்து 12ம் அதிகாரத்தைத் தொடங்கும்போது, “ஆகையால்” என்று  ஆரம்பித்து, “இயேசுவை நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமை யோடே ஓடக்கடவோம்” என்று எழுதுகிறார் எபிரெய ஆசிரியர். இன்று நம்மில் எத்தனைபேர் அவ்வப்போது விசுவாசத்தில் தளர்வடைகிறோம்? அல்லது, அந்த வீரம் நிறைந்த விசுவாச வாழ்வைக் குறித்த சிந்தனையே இல்லாமல், ஒரு மதத்தைப் பின்பற்றுகிறவர்கள்போல ஏனோதானோ என்று வாழுகிறோம்? விசுவாச ஓட்டம் இலகுவானதல்ல; அது போராட்டம் நிறைந்தது. ஆனால், தேவன் நம்முடன் இருந்தால், நாம் தேவனுடன் இருந்தால் முடிவுபரியந்தமும் விசுவாசத்தில் தளர்ந்துவிடாமல், பின்வாங்கிவிடாமல் அதில் நம்மால் நிலைகொண்டிருக்கமுடியும். அப்படியே நாம் விசுவாசப் பாதையில் ஓடுவோமா! முடிவுபரியந்தம் நிலைத்திருப்போமா!

💫 இன்றைய சிந்தனைக்கு:    

 விசுவாசப் பாதை கடினமானாலும் முடிவுபரியந்தமும் அதில் நிலைநிற்க வேண்டுமானால் நான் என்ன செய்யவேண்டும்?

📘 அனுதினமும் தேவனுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin