? சத்தியவசனம் – இலங்கை.

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மத் 1:1 26:62-64 27:11-14

ராஜாதி ராஜாவாகிய கிறிஸ்து!

ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசு கிறிஸ்துவினுடைய வம்சவரலாறு… மத்தேயு 1:1

“அப்பா, உங்கள் முன்னோர்களில் யாராவது அரச பரம்பரையில் இருந்திருக்கிறார்களா?” மகன் கேட்டான். “மகனே, நான் அறிந்தவரை யாரடா அரசபரம்பரை” என்று அவர் அலுத்துக்கொண்டார். “குடும்ப மரம்” தயாரிப்பவர்கள்கூட ஓரளவுக்குத்தான் பின்னோக்கி செல்வார்கள். ஆனால், மனிதனை மீட்பதற்காக தாமே ஒரு மனிதனாக வந்த தேவன், “இயேசு” என்ற நாமத்தில் வந்து பிறந்தபோது, அவரது வம்சவரலாறு ஆதிமுதற்தொட்டு மிகவும் தெளிவாக வழங்கப்பட்டிருக்கிறது. இன்று நாம் அவரது பிள்ளைகள் என்றால், நாம் யார், நமது பெறுமதி என்ன என்பதைச் சிந்தித்துப் பார்த்தாலே வாழ்வின் பல பகுதிகளும், நமது குடும்ப மரம் என்ற படமும் மாறிவிடும்.

இயேசுவைக்குறித்து நான்கு சுவிசேஷங்கள் எழுதப்பட்டாலும், அவர்கள் நான்கு விதத்தில் விபரித்து எழுதியிருப்பதைக் காணலாம். மத்தேயு, கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் ஊரான்; ஆயத்துறையில் பணிபுரிந்த இவரின் முதற்பெயர் லேவி. இயேசு இவரை அழைத்தார் (மத்.9:9). சகலத்தையும்விட்டு இயேசுவைப் பின்பற்றியவர், தன் நண்பர்களும் இயேசுவை அறியவேண்டுமென்று, அவர்களை அழைத்து இயேசுவுக்கு ஒரு பெரிய விருந்தும் வைத்தார். மேலும், யூத சகோதரர் வரக்காத்திருந்த “மேசியா” இவரே, இவரே “ராஜாதி ராஜா” என்று காண்பிக்கும்படி, மத்தேயு, விசேஷமாக யூதர்களுக்காகவே இந்த சுவிசேஷத்தை எழுதினார். ஆகவே, அவர் இயேசுவின் வம்ச வரலாற்றை கூறுகிறார். “ஆபிரகாமின் சந்ததி” என்று பெருமைபாராட்டுகின்ற யூதர் விளங்கிக்கொள்ளும்படி, இதனை, ஆபிரகாமிடமிருந்தே ஆரம்பிக்கிறார். அடுத்ததாக, தாவீதின் குமாரன் என்று அழைக்கிறார். ஆம், ஆபிரகாமின் பிள்ளைகள் அனைவரும் ராஜ பரம்பரையினர் அல்ல; ஆனால், கர்த்தரோ தாவீதுடன் ஒரு ராஜபரம்பரையை ஆரம்பித்தார். அந்த வம்சத்தில் வந்து பிறந்த இயேசு கிறிஸ்து யாராய் இருப்பார்? ஆம், அவர் ராஜாதி ராஜா! மேசியாவாக வந்த இயேசுவே, நித்திய ராஜா என்பதை நிரூபிப்பதே மத்தேயுவின் முக்கிய நோக்கமாக இருந்தது.

இப்போது சொல்லுங்கள், நாம் கிறிஸ்துவுக்குள் பிறந்திருப்பது மெய்யானால், நாம் யார்?  நாம் ராஜ பரம்பரையினர் இல்லையா! இது பெருமைபாராட்டும் விடயம் அல்ல; நம்மை நாம் உணர்ந்துகொண்டு, தம்மைச் சிலுவைபரியந்தம் தாழ்த்திய ராஜாவின் வழியில் நாம் நடக்கவேண்டியவர்கள் என்பதையே இந்தச் சுவிசேஷம் நமக்கு உணர்த்துகிறது. மாத்திரமல்ல, உயிர்தெழுந்த கர்த்தர், முடிவுபரியந்தம் நம்முடன் இருப்பதாக வாக்களித்த நித்தியர், இவரே ராஜா. இவருடைய நாமத்துக்கு மகிமை உண்டாகத்தக்க விதத்தில் நமது வாழ்வில் சாட்சிவேண்டாமா? கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழ இன்றே நம்மை அர்ப்பணிப்போம்!

? இன்றைய சிந்தனைக்கு:  

 தகுதியற்ற நமக்குக் கிடைத்த ராஜரீக வாழ்வை நாம் என்ன செய்கிறோம்?

? அனுதினமும் தேவனுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *