? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதி 12:1-4, 17:1-6

காத்திருந்து பெலனடைவோம்!

அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றான். எபிரெயர் 6:15

பறவைகளின் ராணி என்று அழைக்கப்படும் கழுகின் குணாதிசயங்களி லிருந்து, பலவித மான பாடங்களை நம்மால் கற்றுக்கொள்ளமுடியும். கழுகு முதிர்வடையும்போது, மலை யின் உச்சிக்குப் பறந்துசென்று தனது சிறகுகளை உதிர்த்துவிட்டு, தன் சொண்டையும் தேய்த்துவிட்டு அமர்ந்திருக்குமாம். புதிய சிறகுகள் முளைத்து, வளர்ந்து, அது புதிய பெலனடையும்வரை அப்படியே அமைதியாகக் காத்திருக்குமாம். புதிய சிறகுகள் முளைத்து, புதுப் பெலனடைந்ததும் தன் பரந்த செட்டைகளை அடித்துக்கொண்டு அற்புதமாகப் பறக்க ஆரம்பித்துவிடுமாம். பொறுமையுடன் காத்திருப்பதன் பலன் இதுதான்.

கர்த்தர் ஆபிராமை நோக்கி, “உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்” என்று வாக்குக் கொடுத்தபோது, ஆபிராம் எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். அப்போது ஒரு பிள்ளையும் ஆபிராமுக்கு இருக்கவில்லை. என்றாலும், ஆபிராம் பொறுமையோடே காத்திருந்தான். கர்த்தரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் செவிகொடுத்து, அதை விசுவாசித்து, பெலனடைந்து, வாக்குத்தத்தம் நிறைவேறும்வரை காத்திருந்தான். ஆபிராம் அழைக்கப்பட்ட நாளிலிருந்து வாக்குத்தத்தத்தின் மகனாகிய ஈசாக்கு பிறக்கும்வரை ஏதேதோ காரியங்கள் நடந்துவிட்டன. வாக்குத்தத்தம் நிறைவேறி ஆபிராம் ஆபிரகாமாக மாறும்வரை இருபத்தைந்து ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. அத்தனை வருடங்களும் பொறுமையுடனும் விசுவாசத்துடனும் காத்திருந்த ஆண்டுகளாக இருந்தது. ஆபிரகாமின் எதிர்பார்த்திருக் குதலுக்கும் கர்த்தருடைய வேளைக்கும் இடைப்பட்ட காலமே அது. புதுப்பெலன் அடைந்த ஆபிரகாம் தன் நூறாவது வயதிலே ஈசாக்கைப் பெற்றெடுத்தார்.

நாம் எதிர்பார்க்கும் வேளைக்கும், கர்த்தர் காரியங்களை நிறைவேற்றி பதிலளிக்கும் வேளைக்கும் இடைப்பட்ட காலத்திலே பொறுமையுடன் காத்திருந்து விசுவாசத்தில் உறுதியாயிருந்து கீழ்ப்படிந்திருப்பது மிகவும் அவசியம். ஆனால் காத்திருக்குதல் தான் நமக்கு மிகவும் கடினமான விடயம். அதிலும் நாம் நினைப்பது நினைத்த நேரத்தில் நடக்கவேண்டுமென்பதுதான் நமது எதிர்ப்பார்ப்பு. ஆனால், வாக்கு நிறைவேற்றத்திற்கு முன்னர் நாம் பெலனடைய வேண்டியது அவசியம். அதற்குத்தான் இந்தக் காத்திருத்தல். இடையில் ஆபிரகாம் பொறுமையிழந்து, இஸ்மவேலைப் பெற்று இன்னலடைந்ததுபோல அல்லாமல், கழுகைப்போல காத்திருந்து பெலனடைந்து உன்னத ஆசிகளைப் பெற்றுக்கொள்வோமா! கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள் (ஏசாயா 40:31).

? இன்றைய சிந்தனைக்கு:

கர்த்தருடைய வேளை வரும்வரை காத்திருப்பதில் எனக்கிருக்கிற பிரச்சனை என்ன? காத்திருக்குதல் கடினமாக அனுபவமா? அல்லது, பெலனடையும் அனுபவமா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin