? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: மாற்கு 16:9-20

முடித்தபின்பு உட்கார்ந்தார்!

இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார். மாற்கு 16:19

ஒரு பிரபல உணவகத்தில் என் பழைய நண்பரை ஏதேச்சையாகச் சந்தித்தேன். பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்த சந்தோஷம். உரிமையோடு கட்டித்தழுவி, உட்கார்ந்து பழைய நினைவுகளை மீட்டிப்பார்த்து மகிழ்ந்தோம். திடீரென தன் கைக்கடிகாரத்தைப் பார்த்த அவர், என்னிடம் சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். ஒரு சில விநாடிகளில் நாம் கேட்காத உயர்தர உணவுகள் மேசைக்கு வந்தன. இவ்வளவுக்குப் பணமும் இல்லை, நாம் இவற்றைக் கேட்கவுமில்லை. பிரமித்துப்போய் உணவு பரிமாறியவரை நோக்கினோம். அவரோ, ‘நீங்கள் ஹோட்டல் முதலாளியின் நண்பராமே. அவர்தான் இவற்றைப் பரிமாறும்படி சொன்னார். பணத்தைப் பற்றிக் கவலைவேண்டாம். அவர் செலுத்திவிட்டார்” என்றான். ‘இந்த ஹோட்டலின் உரிமையாளராக, பெரும் பதவியில் இருக்கிறவரோடேயா பிறருக்கு முன்பாக, இத்தனை உரிமை எடுத்துபேசினேன் என்று சற்றுக் குழம்பிவிட்டேன்” என்று ஒருவர் தன் அனுபவத்தைச் சொன்னார்.

இன்று நமது நிலைமையும் இதுதானோ! வெறுமையான கல்லறையைப் பார்த்த பின்பும், இயேசுவைக் கண்டதாக மகதலேனா மரியாள் சொன்ன பின்பும் சீஷர்களால் நம்பமுடிய வில்லை. எம்மாவு ஊருக்குச் சென்றவர்கள் தமது அனுபவத்தைச் சொல்லியும் அதை நம்ப அவர்களுக்குச் சங்கடமாகவே இருந்தது. ஆகவே, இயேசு தமது சீஷர்களுக்கு நேரிடையாகவே தரிசனமானார். தோமாவின் சந்தேகத்தையும் தீர்த்தார். இயேசு தம்மை உயிரோடிருக்கிறவராகக் காட்டியது மாத்திரமல்ல, தமது ஊழியத்தை அவர்களிடம் கையளித்தார். பிதாவின் சித்தப்படி யாவையும் சிலுவையில் பூரணமாக நிறைவேற்றிய பின்பு, எல்லாம் முடிந்தது என்று சிலுவையில் தலைசாய்த்த இயேசு, அப்படியே மறைந்துவிடவில்லை. உயிர்த்தெழுந்த இயேசு, வெறுமனே தரிசனங்களைக் கொடுத்துவிட்டு மாயமாக மறையவில்லை. தமது ஊழியத்தையும் கையளித்துவிட்டு, அவர்கள் கண்களுக்கு முன்பாகவே பரலோகிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். அவர் எடுத்துக்கொள்ளப்பட்டார் என்னும்போது, அவரது சரீரப் பிரகாரமான பிரசன்னம் மாத்திரமே சீஷரைவிட்டுசென்றது. இப்போது இயேசு பிதாவின் வலதுபாரிசத்தில் உட்காருகிறார் என்பது, அவரது வேலை பூவுலகில் முடிவுற்றதையும், அவரது பூரண அதிகாரத்தையும், அவர் ராஜாவாக முடிசூட்டப்பட்டதையும் இது நமக்கு உறுதிப்படுத்துகிறது.

இந்த வெற்றி வேந்தனை இன்னமும் மாட்டுத்தொழுவத்தில் கிடத்தி, நாம் தாலாட்டு பாடலாமா? எல்லாவற்றையும் சம்பூரணமாய் நிறைவேற்றிய அவர் இன்று பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார் என்றால், அவரது கெம்பீரத்தை சிந்திக்கமுடிகிறதா? வெளி.1:13-16ல், யோவான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவரது பாதத்தில் விழுந்தான். இன்று அவர் பாதம் நம்மால் தைரியமாக சேர முடியுமா!

? இன்றைய சிந்தனைக்கு:

சிந்தனைக்கு: என் கண்கள் இயேசுவை யாராக நோக்குகிறது? பிதாவின் சித்தப்படி தம் பணி முடித்து, பிதாவின் வலதுபாரிசத்தில் அவர்  கெம்பீரமாக உட்கார்ந்தாரே; நானும் அவர் பாதம் உட்காருவேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin