? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: மாற்கு 15:24-37

சாப சிலுவை புனிதமானதோ!

அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதனாலே நிறைவேறிற்று. மாற்கு 15:28

வெள்ளை வெளீரென்று இருக்கும் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும், அந்தப் பால் முழுவதுமே விஷமாகிவிடும். அல்லது ஒரு வர்ணக்கரைசலில் ஒரு துளியைப் பாலுக்குள்ளே விட்டால் முழுப் பாலின் நிறமுமே மாறிவிடும். அன்று, ரோமர் ஆட்சியில் சிலுவையென்பது ஒரு சாபமாக, அல்லது ஒரு அவமானச் சின்னமாகவே கருதப்பட்டது. கொடிய தண்டனைக்குப் பாத்திரவான்களான, கள்வரையும், கொலைக்காரரையும்தான் பொதுவாகச் சிலுவையில் அறைந்து கொலைசெய்வார்கள். ஆனால், எந்தக் குற்றமும் செய்யாத இயேசு ஏன் அறையப்பட்டார்? ஆம், நாம் அறையப்பட வேண்டிய இடத்தில், நமது பாவங்களைத் தம்மில் சுமந்து, இந்த இழிவான சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டு தமது ஜீவனை விட்டார் இயேசு. அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார் என்ற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, அவரது வலது பக்கத்தில் ஒரு கள்வனும் இடதுபக்கத்தில் ஒரு கள்வனுமாக இரண்டு கள்வர்கள் மத்தியில் தூய்மையானவராகத் தொங்கினார் இயேசு; ஆம், கள்ளத்தனம் நிறைந்த நம்மை மீட்பதற்காகவே அவர் இப்படியானார். அவர் பாவ சிலுவையில் சிந்திய இரத்தம் இன்று நம்மைப் பரிசுத்தமாக்கியிருக்கிறது. பாவத்தின் தண்டனையான அந்தச் சாப சிலுவை, இயேசுவின் மரணத்தினால் புனிதமானதோ! இன்று நாம் சிலுவையை மேன்மையான ஒன்றாக, புனித சின்னமாகக் கருதுகிறோம் என்றால் அது இயேசுவாலேயே ஆனது. அவரின்றி அதற்கேது மதிப்பு!

ஏதேன் தோட்டத்திலே ஆதாமும் ஏவாளும் பாவத்தில் விழுந்து தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்கு ஒளித்துக்கொண்டிருந்தபோது, தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு, ‘நீ எங்கே இருக்கிறாய்” என்றார். அதற்கு அவன், ‘நான் தேவரீருடைய சத்தத்தைக் கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து ஒளித்துக்கொண்டேன்” என்றான். அந்த நிர்வாணத்தைப் போக்கவே தேவகுமாரன் சிலுவையிலே நிர்வாணியாய்த் தொங்கினார். அந்தக் கயவர்களோ அவரது துணிகளை எடுக்க சீட்டுப்போட்டு மகிழ்ந்தனர். ‘என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடைகளின் பேரிலே சீட்டுப்போட்டார்கள்” என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும் படி இப்படி நடந்தது.

எம்மைப் பரிசுத்தராக்க, பரிசுத்தராகிய தேவன் பாவமாக்கப்பட்டார். இப்படியிருக்க இன்னமும் நாம் பாவத்தில் ஜீவித்து அவருடைய பலியைப் பரிகசிக்கலாமா? மனந்திரும்புவோம். எம்மை ஜீவபலியாக ஒப்புவித்து, எமக்காகச் சிலுவை சுமந்தவருக்காக நமது சிலுவையைச் சுமப்போம். ‘ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.” மத்தேயு 16:24

? இன்றைய சிந்தனைக்கு:

என் வாழ்வில் என்னைப் பரிசுத்தம்பண்ணிய சிலுவை எங்கே இருக்கிறது?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin