📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோசுவா 23:1-16
வார்த்தைக்குக் கீழ்ப்படிந்திருப்போம்!
…அப்படியே உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய உடன்படிக்கையை நீங்கள் மீறி… யோசுவா 23:15
“மகனே, வீட்டுப்பாடத்தைச் செய்துவை, ஒரு பரிசு தருவேன்” என்று சின்ன மகனிடம் கூறிவிட்டு வெளியே போகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுவோம். வேலை செய்த களைப்பையும் பொருட்படுத்தாமல், பரிசும் வாங்கிக்கொண்டு நீங்கள் வீட்டிற்கு வரும் போது, மகன் பாடமும் செய்யாமல், வீட்டையும் தாறுமாறாக்கி வைத்திருந்தால், என்ன செய்வீர்கள்? மகனை அணைத்துப் பரிசு கொடுப்பீர்களா? அல்லது, சிறிய தண்டனை யாவது கொடுக்கமாட்டீர்களா? சொன்னபடி செய்வது கடமை, அதற்கேற்றபடி அவன் கீழ்ப்படியவேண்டுமல்லவா.
குரங்குகளுக்கு ஒரு இயல்பு உண்டு. தாய்க்குரங்கு மரத்திற்கு மரம் தாவும்போது, தாயை இறுகக் கட்டிப்பிடித்திருக்கவேண்டியது குட்டியின் பொறுப்பு. தாய் ஒருபோதும் குட்டியைப் பிடித்துக்கொண்டு தாவிச்செல்லாது. குட்டி தன் பிடியைத் தளர்த்தி, தவறி விழுந்துவிடுமானால், என்ன பரிதாபம். அக் குட்டியைக் குரங்குகள் சேர்த்துக்கொள்ளமாட்டா. விலங்குகளிடம்கூட பாடம் கற்றுகொள்ளவேண்டிய பரிதாபநிலை நமக்கு.
மோசே விட்டுச்சென்ற ஊழியத்தை உண்மையோடும் உத்தமத்தோடும் நிறைவு செய்த யோசுவா, தனது முதிர்வயதிலே இஸ்ரவேலருக்குக் கூறிய ஆலோசனைகளில் இன்றைய வாசிப்புப் பகுதி மிக முக்கியமானது. “மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதைவிட்டு, வலதுபுறமாகிலும் இடதுபுறமாகிலும் விலகிப் போகாமல்…” “நீங்கள் பின்வாங்கிப்போனால்…” என யோசுவா எச்சரிக்கிறார். அத்துடன், “தேவனாகிய கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப் போகவில்லை. அவை எப்படி நிறைவேறிற்றோ அப்படியே, அவருடைய உடன்படிக் கையை மீறினால், சகல தீமைகளையும் வரப்பண்ணுவார் என்றும் யோசுவா எச்சரித்தார். ஆக, கர்த்தர் எதிர்ப்பார்ப்பது எல்லாம் தமக்குக் கீழ்ப்படிவது ஒன்றை மட்டுமே.
கர்த்தர் ஒருபோதும் வாக்கு மாறமாட்டார். ஆனால், கர்த்தரை இறுகப் பிடித்திருப்பதும், அவரது குரலுக்குக் கீழ்ப்படிவதும் நமது பொறுப்பு. “நாம் அவர் மேய்ச்சலின் ஆடுகள்” என்றால், நாமேதான் மேய்ப்பன் குரலுக்குச் செவிகொடுத்து நடக்கவேண்டும். மாறாக, நாம் விரும்புகின்ற இடமெல்லாம் அவர் வந்து நம்மை மேய்ப்பவர் அல்ல. நாம் அவரது மந்தைக்குள் கீழ்ப்படிந்திருக்கும் வரைக்கும் நமக்குக் குறைவேற்படாது. மந்தையைவிட்டு வழிவிலகும்போது, ஓநாயும் சிங்கமும் புலியும் நம்மை நிச்சயம் தாக்கி அழித்துப்போடும். கர்த்தர் நல்லவர் எப்படியாவது நம்மைக் காப்பார், அவர் கோபம் கொள்ளவேமாட்டார் என்று கூறிக்கூறி நம்மை ஏமாற்றிக்கொள்ளாமல், கர்த்தருக்குக் கீழ்ப்படிந்திருப்போம். அவர் வார்த்தையின்படி நடப்போம்.
💫 இன்றைய சிந்தனைக்கு:
ஒருபோதும் தவறிப்போகாத, கர்த்தருடைய வார்த்தைக்கு நான் எவ்வளவுதூரம் செவிகொடுத்து கீழ்ப்படிந்திருக்கிறேன். அப்படி முடியாதபட்சத்தில் அதற்கான காரணம் என்ன?
📘 அனுதினமும் தேவனுடன்.
