? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எபி 11:33-40

ஓடுவோமாக…..

…திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்க, …இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். எபிரெயர் 12:1

ஒரு பிரயாணத்தைத் தொடங்குமுன், நமக்கு ஒரு இலக்கு வேண்டும். நாம் எங்கே போகிறோம் என்ற நிச்சயம் வேண்டும். அப்படி இல்லாவிட்டால் நாம் அலைந்துதிரிய வேண்டியிருக்கும். அத்தோடு, சரியான இலக்கு இல்லாவிட்டால், நாம் சேரவேண்டிய இடத்தைப் போய்ச் சேரமாட்டோம். இது ஒருபுறமிருக்க, மறுபக்கத்தில், ஒரு பிரயாணத்தை நாம் இலக்குடன் தொடங்கும்போது எப்படியாவது அவ்விடத்தைச் சேரவேண்டும் என்ற வாஞ்சை நமக்குள் ஏற்படும். அப்பொழுது அந்த வழியில் என்ன தடைகள் ஏற்பட்டாலும், பொறுமையோடு யாவற்றையும் சகித்துக்கொண்டு நாம் போகவேண்டிய இடத்தைப் போய்ச்சேருவோம் அல்லவா!

எந்தவொரு மனிதனும் ஒரு நூதனமான வாழ்வை வாழுவதில்லை. நமக்கு மட்டும்தான் கஷ்டம்; அல்லது நான் ஒருவன்தான் இக்கடின பாதையில் செல்லுகிறேன் என்று எவருமே சொல்லமுடியாது. நமக்கு முன் எத்தனையோ மக்கள் வாழ்ந்து, போராடி, ஜெயம்பெற்ற வாழ்வின் பாதையில்தான், நாமும் சென்று கொண்டிருக்கிறோம். அவர்களுடைய விசுவாச வாழ்வு, தேவனுடன் சேர்ந்து அவர்கள் பெற்ற வெற்றிகள் யாவும் நம்மை ஊக்குவித்துக்கொண்டே இருக்கின்றன. நாம் ஒருபோதும் தனியே போராடுவதில்லை; நாம் இன்று முகம்கொடுக்கும் பிரச்சனைகளோடு போராடுகின்ற முதல் மனிதன் நாம் அல்ல. நமக்கு முன்னே பொறுமையோடு ஓடி வெற்றி பெற்ற அநேக வேதாகம  விசுவாச வீரர்கள் நமக்கு சாட்சியாக இருக்கிறார்கள். அப்படியிருந்தும் அவர்கள் கிறிஸ்து அருளிய மீட்பைக் கண்டதில்லை. ஆனால் இன்று நாம் அந்த விசேஷித்த நன்மையைப் பெற்றிருக்கிறோம். இது நாம் பெற்ற பெரிய பாக்கியம்! அப்படியிருக்க, ஏன் நாம் இலக்குத் தெரியாமல் தடுமாறவேண்டும்? நமது ஒரே இலக்கு, இயேசு கிறிஸ்து தான். நம்மைத் தடுக்கும் பாவத்தை எதிர்த்துப் போராடி அந்த இலக்கையடைய வேண்டும். அந்தப் போராட்டத்தில் நாம் தனித்து நிற்பவர்கள் அல்ல. நமது ஆண்டவர்  நம்மோடு இருக்கிறார். நமது கண்கள் அவரை நோக்கி இருக்கவேண்டுமேதவிர, மனிதரை நோக்கி அல்ல. தேவன்மீதுள்ள நமது பார்வை விலகுவதால்தான் நமது இலக்குத் தவறிவிடுகிறது@ விழுந்துவிடுகிறோம்.

கர்த்தருக்குள் அருமையான பிள்ளையே, நமது வாழ்க்கை ஓட்டத்தின் மெய்யான  இலக்கு என்ன என்ற நிச்சயம் நமக்கு அவசியம். அந்த இலக்கை அறிந்திருந்தும் அதை அடையவிடாமல் நம்மைத் தடுக்கின்ற காரியங்கள் என்ன? தளர்ந்துபோகாமல், தேவ பெலத்தோடே எதிர்த்துப் போராடுவோம். கிறிஸ்துவை நோக்கிப் பொறுமையோடு ஓடுவோம். கர்த்தர் துணை நிற்பார்.

சிந்தனைக்கு:

எனது இலக்கு என்ன என்ற நிச்சயம் எனக்குண்டா? அது ஆண்டவர்தான் என்றால், அந்த ஓட்டத்தில் உறுதியாக ஓடுவதற்கு முடியாமல் எனக்கிருக்கும் தடைகளை எப்படி மேற்கொள்வேன்?

?♂️ எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532


? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin