? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி : லூக்கா 6:12-19

தெரிவுக்கு முன்னாயத்தம்

அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தார். லூக்கா 6:12

நமது வாழ்வில் முக்கியமான தெரிவுகளைச் செய்வதற்கு முன்பு நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? வாழ்க்கைத் துணை என்றதும் படித்தவரா, வேலைபார்ப்பவரா, அழகானவரா என்று சிந்திக்கிறோமே தவிர, தேவனுக்குச் சித்தமானவரா என்று நாம் தேவனிடம் கேட்ப்பதில்லை. தொழில் ஒன்று தெரிவுசெய்யும்போது சம்பளம் எவ்வளவு என்று பார்க்கின்ற நாம், இது எப்படிப்பட்ட தொழில், தேவனுக்குப் பிரியமானதா என்று நிதானிக்கவே தவறி விடுகிறோம்.

இயேசு தம்மோடு இருப்பதற்கென்று பன்னிரண்டு பேரைத் தெரிவுசெய்ய முன்பதாக, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபித்தார். அவர் தேவனுடைய குமாரனாயிருந் தும், அவரது வாழ்வில் நடக்கப்போவதை அறிந்தவராயிருந்தும், அவர் தமது தெரிவுக்கு முன்னாயத்தம் செய்தார். அந்தச் சீடர்களில் ஒருவன்தான் அவரை மறுதலித்தான், இன்னொருவன் காட்டிக்கொடுத்தான். ஆனாலும் அவர்களும் தேவவார்த்தை, தேவ சித்தம் நிறைவேறக் காரணமாயிருந்தார்களே!

ஆயத்தம் என்பது அவசியமான ஒன்று. முக்கியமான ஒரு தீர்மானத்தைச் செய்வதற்கு முன்பாக அமர்ந்திருந்து ஆயத்தம் செய்யவேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வோம். இன்று கர்த்தருக்காக பணியாற்றும் தேவபிள்ளைகள்கூட, அதற்கு முன்னதாக தேவபாதம் அமர்ந்திருந்து ஆயத்தப்படுவது அரிதாகிவிட்டது. அவருக்காகப் பணிசெய்யப் புறப்படுகிற நாம், அவருடைய வழிநடத்துதலைப் புறக்கணிக்கலாமா? நமது வாழ்வில் என்னதான் செய்ய நினைத்தாலும், அதற்கு முன்னதாக, இது தேவனுக்குப் பிரியமா, அவரது பார்வையில் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்து பார்ப்பது மிகவும் முக்கியமான ஒன்று.

அன்பானவர்களே, வேதாகமத்தில் தேவனுடைய மனுஷர் பல காரியங்களைச் செய்யும் முன்னர் ஆயத்தமாகியே செய்ததை நாம் காணக்கூடியதாக உள்ளது. நாமும் அவ்வண்ணமே செய்வோம். இந்த தபசுகாலங்களிலாவது இதனை ஆரம்பிப்போமா? தேவபாதத்தில் அமர்ந்திருந்து நம்மை ஆராய்ந்து பார்ப்போம். தேவனுக்குப் பிடிக்காத அவரது வார்த்தைக்குப் புறம்பாக நம் வாழ்க்கையில் காணப்படும் சகலவற்றையும் நம்மைவிட்டு அகற்றுவோம். அவர் விரும்புகிறதான அவரை நேசிக்கிறதான ஒரு வாழ்க்கைக்கு நம்மை ஒப்புக்கொடுத்தவர்களாய் இம்முறை உயிர்ப்பின் நாதரைக் கொண்டாடுவோம். வாழ்க்கையின் முக்கியமான காரியங்களைச் செய்யும் முன் தேவபாதத்தில் ஆயத்தமாகிடுவோம். நீங்கள் எதைச் செய்தாலும் அதை மனுஷருக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். கொலோசெயர் 3:2

? இன்றைய சிந்தனைக்கு:

எனது தெரிவுகள் தேவனுக்குப் பிரியமானதாயிருக்க விரும்புகிறேனா? அப்படியானால் என்ன ஆயத்தம் செய்கிறேன்?

? அனுதினமும் தேவனுடன்.

Comments (212)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *