📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யாக்கோபு 1:13-14

சுய இச்சை

அவனவன் தன்தன் சுயஇச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகின்றான். யாக்கோபு 1:14

கைத்தொலைபேசியைத் தட்டிப் பார்க்கிறபோது பல காட்சிகளைக் காண நேரிடுகிறது. அவற்றில் நல்லதும் இருக்கும், கெட்டதும் ஆபாசமானதும் இருக்கும். முதற்பார்வை தவறல்ல, ஏனெனில் அவை தாமாகவே தெரிகின்றன. ஆனால், தகாதது என்று தெரிந் தும் அதே காட்சியைத் மீண்டும் பார்ப்பதற்குத் தூண்டப்படுவோமானால், நாமே நம்மை சோதனைக்குள் இழுக்கிறோம். திரும்பவும் பார்த்து, ரசித்து, நமக்குள் உள்வாங்குவோ மானால் நாம் விழுந்துவிட்டோம் என்பதுதான் உண்மை. அந்தக் காட்சி நமக்குள் பதிந்து, நம்மையும் பாவத்துக்குள் தள்ளிப்போடாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

 சோதனை என்ற வார்த்தையின் பொருள் பாவம் செய்தவற்கான தூண்டுதல் என்பதாகும். பாவமானதை அதாவது தேவனுக்கு விரோதமானவைகளை யோசிக்கவோ, பேசவோ, செய்யவோ இழுக்கப்படுவதும் தூண்டப்படுவதும் சோதனையாகும். இந்தச் சோதனை பாவமில்லை என்றும், ஆனால் அது பாவமாக மாறி நம்மைக் கௌவிப்பிடிக்காதபடி நாம் தடுக்கவோ அதிலிருந்து தப்பித்துக்கொள்ளவோ முடியும் என்றும் பார்த்தோம். இந்தப் பாவசோதனைக்குக் காரணமென்ன? யார் இதனைச் செய்கின்றார்?

தேவன் மனிதனைத் தீமையினால் சோதிக்கிறவரல்ல என்பதை யாக்கோபு, 1:13ல் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், “அவனவன் தன்தன் சுயஇச்சையினால் இழுக்கப்பட்டு, சிக்குண்டு சோதிக்கப்படுகின்றான்” சோதனைக்கு யார் காரணம், மனிதன் தானே பொறுப்பை ஏற்கவேண்டியவனாக இருக்கின்றான். மாறாக, தேவன் மேலேயோ, அல்லது பிற ஆவிகள் மேலேயோ சுமத்தமுடியாது. நமக்குத் தேவைகள் உண்டு, ஆனால் அவை ஆசையாக மாற இடமளிக்கக்கூடாது. ஆசை, இச்சையாக மாற அதிக நேரமெடுக்காது. இந்த இச்சை நம்மைப் பாவத்துக்குள் விழுத்திவிடும். இப்படியான சோதனைகளில் நாமும் அகப்பட்டிருக்கக்கூடும். இதிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரே பதில், “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும், ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்” (கலா.5:24) என்பதுதான். நமக்குள் ஒரு போர்க் களமே உண்டு. நமது ஆவிக்கும் மாம்சத்துக்கும் அடிக்கடி யுத்தம் நடப்பதைத் தடுக்கமுடியாது. ஆனால், முதலாவது நாம் கிறிஸ்துவினுடையவர்களா என்பதில் நிச்சயம் வேண்டும். அடுத்தது, நமக்குச் சிலுவை உண்டு. சோதனைக்குள்ளாக்கும் இச்சைகளை அன்றாடம் ஆராய்ந்து உணர்ந்து, அவற்றைச் சிலுவையில் அறைந்து விடுவோம். அதாவது, சிலுவையில் நமக்காக அறையப்பட்ட இயேசு சகலத்தையும் மேற்கொண்டார் என்பதை உள்ளான இருதயத்துடன் விசுவாசித்து ஒப்புக்கொடுக்கும் போது, அந்த இச்சைகள் யாவும் நிச்சயம் காற்றாய்ப் பறந்துவிடும். மாறாக, இச்சைகளில் இன்பம் காண முயன்றால் அது நமக்கு நாமே கேடு விளைவிப்பதுபோலாகும்.

💫 இன்றைய சிந்தனைக்கு:  

இச்சையின் போராட்டம் இருந்தால் முதலில் அதிலிருந்து வெளிவர நான் விரும்ப வேண்டும். பின்னர், சிலுவையில் என்னை நானே அறைந்துவிடவேண்டும். அப்போது நிச்சயம் ஜெயம் உண்டு.

📘 அனுதினமும் தேவனுடன்

Comments (56)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *