📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 11:27-48

துக்கத்தில் பங்கெடுப்பார்!

இயேசு கண்ணீர் விட்டார். யோவான் 11:35

“உன் கண்ணீரைத் துடைக்கும் இயேசு உனக்காய் இருக்கிறார். உன் கவலைகள் போக்கும் இயேசு உனக்காய் ஜெபிக்கிறார். கலங்காதிரு மனமே, திகையாதிரு தினமே, கர்த்தர் உன்னை நடத்துவார்…” இது ஒரு பாடலின் வரிகள்தான் என்றாலும் இது உண்மையே. நாம் ஆராதிக்கும் தேவன் நம்மீது கரிசனை கொள்பவராக, நம்மைக் கைவிடாதவராக, நேசிப்பவராக இருக்கிறார் என்பதில் எவ்வித சந்தேகமுமேயில்லை. ஏனென்றால், தமது ஜீவனைக் கொடுத்தே அன்பினை அவர் நிரூபித்துவிட்டார்.

“ஆண்டவரே நீர் இங்கே இருந்திருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான்” என்று மார்த்தாள் செய்த அதே ஜெபத்தையே மரியாளும் செய்தாள். ஆனால் மரியாள் இயேசுவின் பாதத்தில் விழுந்து ஜெபித்து அழுதாள். அதைப் பார்த்து அங்கிருந்தவர்களும் அழுதார்கள். அதைக் கண்ட இயேசு ஆவியிலே கலங்கினார் என்று பார்க்கிறோம். மறுபேச்சின்றி, “அவனை எங்கே வைத்தீர்கள்” என்று இயேசு கேட்க, “ஆண்டவரே வந்து பாரும்” என்று சொன்னபோது, இயேசு கண்ணீர் விட்டார். இதைப் பார்த்த யூதர்கள், “இவர் அவனை எவ்வளவாய் சிநேகித்தார்” என்றார்கள்.

இயேசு, தாம் தாமதித்து வந்ததையும், லாசரு உயிரோடே எழும்புவான் என்பதையும் அறிந்திருந்தார். அப்படியிருந்தும், மரியாளின் துக்கத்தில் அவர் பங்கெடுத்தார். அவள் அழுதபோது கூடவே அவரும் கண்ணீர் விட்டார். லாசருவை உயிரோடே எழுப்பப் போகிறேன், அதை அறியாமல்தானே இவள் அழுகிறாள் என்று அவளது உணர்வுகளை அவர் அலட்சியப்படுத்தவில்லை. அவளது துக்கத்தில் அவள் பக்கத்தில் நின்றார் இயேசு. இவர்தான் நமது ஆண்டவர். எல்லாவேளைகளிலும், எல்லா சூழ்நிலைகளிலும் அவர் நம்முடன் பயணிக்கிறவராய், நம் பக்கத்தில் இருக்கிறவராய் இருக்கிறார். நாம் நடந்திட முடியாத சூழ்நிலைகளிலும் நம்மைச் தூக்கிச் சுமக்கிறவராய் இருக்கிறார். இதை நாம் விசுவாசிக்கிறோமா? ஆண்டவர் நம் அருகில் இருப்பதை உணரவேண்டுமெனில், நாம் அவர் பக்கத்தில், அவர் பாதத்தில், அவரோடு பயணிக்கவேண்டும். இயேசுவின் பாதத்தில் இருப்பதையே மரியாள் முதலிடமாய் கொண்டிருந்தாள். இயேசுவும் அவளுடைய துக்கத்தில் அவள் அருகில் நின்றார். ஆண்டவரை விட்டுத் தூரமாய் விலகியிருந்தால் நம்மால் அவருடைய பிரசன்னத்தை உணரமுடியாது. ஆகவே, ஆண்டவரை நெருங்கி அவர் பாதம் அமர்ந்திருக்கின்ற நல்ல பங்கைத் தெரிந்துகொள்வோமாக. அப்போது அவர் நம் அருகில் நின்று தேற்றுவதை நிச்சயமாகவே அனுபவிக்கலாம். நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார், நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார். 1நாளாகமம் 28:9.

💫 இன்றைய சிந்தனைக்கு:

என்னால் ஆண்டவரின் பிரசன்னத்தை உணரமுடிகிறதா? இல்லையானால் அவரோடுள்ள உறவை இன்றே சரிசெய்வேனாக.

📘 அனுதினமும் தேவனுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin