? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1ராஜா 19:1-16

சோர்வு சீரழிக்கும்

அவன் …ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து: நான் சாகவேண்டும் என்று கோரி, போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்… 1ராஜா.19:4

இன்றைய நாட்களில் மனிதரை விழுத்துவதற்குச் சத்துரு பாவிக்கும் முக்கிய ஆயுதம் சோர்வு. உள்ளத்தில் உண்டாகும் பயம், எதிரிடையான சிந்தனைகள், தனிமை, ஏமாற்றம், முடியாது என்ற சூழ்நிலை, பொய்யான கற்பனைகள் இவைகளெல்லாம் ஏதோ ஒரு வழியில் மனித இருதயங்களைச் சோர்வடையச் செய்கிறது. இந்தச் சோர்வுக்கு இடமளிக்கும்போது, அது எதிர்காலத்தில் தேவசித்தப்படி காரியங்களைச் செய்யமுடியாதபடி வாழ்வையே பூஜ்ஜியமாக்கிவிடும். வேதவாசிப்பு, ஜெபம் என்று எல்லாவற்றையும் மந்தமாக்கிவிடும். தேவனுடைய பிள்ளைகள் சோர்வுக்கு இடமளிக்காதபடிஜாக்கிரதையாய் இருப்பது மிக அவசியம்.

வானத்திலிருந்து அக்கினியை இறக்கிய எலியா தீர்க்கதரிசியையும் இந்தச் சோர்வு விட்டுவைக்கவில்லை. தனியே நின்று பெரியதொரு சாவாலிட்டு, அற்புதத்தை நடப்பித்த எலியாவுக்கு ஏன் இந்தச் சோர்வு? தன்மூலம் நடந்த அற்புதத்தைக் கண்டு, இஸ்ரவேல் மக்கள் அனைவரும் மனந்திரும்பிவிடுவார்கள் என்ற எதிர்பார்த்திருப்பாரோ! அந்தப் பெரிய அற்புதத்தைச் செய்தவர், இப்போது யேசபேல் என்ற பெண்ணின் பயமுறுத்த லுக்குப் பயப்பட்டது என்ன? தான் தோற்றுவிட்டதாக எலியா நினைத்தாரோ! யேசபேலின் பயமுறுத்தல் ஒரு பயத்தை உண்டாக்கியது. பயம் நம்பிக்கையை இழக்கச்செய்தது. தான் ஒருவனே பிழைத்திருப்பதாக எண்ணவைத்தது, அது ஒருவித தனிமையுணர்வை ஏற்படுத்தியது. யேசபேலுக்குப் பயந்து ஒருநாள் வனாந்தர தூர பிரயாணம்பண்ணிய களைப்பும் சேர்ந்துகொண்டது. ‘போதும் கர்த்தாவே” என்று புலம்புமளவுக்குச் சோர்வு எலியாவை இட்டுச்சென்றுவிட்டது. ஆனால் கர்த்தரோ, விடவில்லை. தூதனை அனுப்பி போஜனம் கொடுத்து, பெலப்படுத்தி, திடப்படுத்தினார். எலியா செய்யவேண்டிய பெரிய பணிகளை உணர்த்தி, எலியாவை உணர்வடையச் செய்தார். எலியாவும் கர்த்தரின் பணிசெய்யத் தைரியத்தோடே எழுந்துபோனார். சோர்வு மாறிப்போக கர்த்தருடைய இடைப்பாடு அவசியம்.

‘போதும்” என்று சொல்லி நாம் சோர்வுக்கு இடங்கொடுத்தோமானால், அது கர்த்தரை விட்டு நம்மைத் தூரமாக்கிவிடும். நமது வாழ்வைப் பாழாக்கிச் சீரழித்துவிடும். சோர்வுக்கான அறிகுறிகள் நம்மில் உருவாக ஆரம்பிக்கும்போதே தேவசமுகத்தில் நம்மை ஒப்புக்கொடுத்து, கர்த்தரின் பாதத்தில் சரணடைந்துவிடுவோமாக. சோர்வை அகற்றி, வார்த்தை என்னும் மன்னாவை உண்டு, பெலனடைந்து ஜெப வாழ்க்கை வாழ்ந்திட நிச்சயம் தேவாவியானவர் பெலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு அவர் நித்திய ஜீவனை அளிப்பார். ரோமர் 2:7

சிந்தனைக்கு:

இன்று என் மனநிலை என்ன? செத்துப்போனாலென்ன என்ற எண்ணம் என்னைத் துளைக்கிறதா? இப்போதே தேவபாதத்தில் முழங்காற் படியிடுவேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin