? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: மத்தேயு 15:10-20

வாய்க்குள் போகிறதா? புறப்படுகிறதா?

வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது. வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். மத்தேயு 15:11

தபசுகாலங்களில் நாம் பொதுவாக வாய்க்குள்ளே போகிறதைக் குறித்தே கவலைப் படுவதுண்டு. சிலர் கொண்டாட்டங்களுக்கு வந்தால், ‘நான் மச்சம் சாப்பிடமாட்டேன்” என்பார்கள். சிலர் ‘நான் காலையில் உபவாசம், உணவை எடுத்துப்போகிறேன்” என்பர். சில வீடுகளில் நாற்பது நாளும் மரக்கறிதான், எப்போது உயிர்த்த ஞாயிறு வரும், கிறிஸ்மஸ் வரும் என்று பிள்ளைகள் காத்துக்கிடப்பதுமுண்டு.

இங்கே, ‘வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது. ஆனால் வாயில் இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்” என்கிறார் இயேசு. அதாவது, வாய்க்குள் போகிறது வயிற்றில் போய் ஆசனவழியாய்க் கழிந்துபோகும். ஆனால், வாயிலிருந்து புறப்படுகிறதோ இருதயத்திலிருந்து புறப்பட்டு வரும். அவைகளே ஒரு மனுஷனைத் தீட்டுப்படுத்தும். இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலை பாதகங்களும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும், இதுபோல எத்தனையோ பாவங்கள் அதாவது தேவன் வெறுக்கிறதான காரியங்களும் புறப்பட்டு வரும். அதை நாம் தடுக்கிறோமா?

 ஆகையால், எமது இருதயத்தைப் பரிசுத்தமாகக் காத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமே தவிர, எமது வயிற்றையல்ல. எம்மை ஒறுத்து, எமது சரீரங்களை ஒடுக்கி உபவாசத்திலும் தியானத்திலும் இருப்பது நல்ல காரியம்தான். ஆனால் அதை மாத்திரம் செய்துகொண்டு, எமது இருதயத்துக்குள் எல்லா அழுக்கையும் தேக்கி வைத்திருந்தால் நாம் செய்யும் ஒறுத்தலிலும், உபவாசத்திலும் பயனேது? நாம் நினைத்தபடி எமது வாழ்வை வாழுவதிலும்பார்க்க, தேவனுடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டவர்களாய் அதற்குக் கீழ்ப்படிந்து நடக்கும்போது, அதுவே எமது வாழ்வுக்குப் பிரயோஜனமாய் அமையும் என்பதில் சந்தேகமேயில்லை.

எந்த ஒரு செயல், ஒரு சிந்தனை எம்மையும் தேவனையும் பிரிக்கிறதோ அதை அகற்றி விடுவோம். எமது இருதயத்துக்குள் எல்லா அழுக்குகளும் கொட்டிக்கிடந்தால் பேசும் வார்த்தையில் அது வெளிவரத்தான்செய்யும். ஆகவே, இந் நாட்களிலும் எப்போதும் எமது உள்ளத்தைப் பரிசுத்தமாய்க் காத்துக்கொள்வோம். ‘மகனே, உன் நெஞ்சை எனக்குத் தாராயோ” என்பது ஒரு பாடல் வரி. இப்பாடலை எழுதியவர் சரியாகவே எழுதியுள்ளார். உள்ளத்தை நாம் தேவனுக்குக் கொடுத்துவிட்டால், அது எம் சரீரம் முழுவதையும் கொடுத்ததற்குச் சமானம். நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான். ‘இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.” லூக்கா 6:45

? இன்றைய சிந்தனைக்கு:

எனது இருதயம் நல்ல பொக்கிஷமாக உள்ளதா? அல்லது பொல்லாத பொக்கிஷமாகத் திகழுகின்றதா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin