? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: மத்தேயு 26:30-35, 69-75

மன்னித்துவிட்டார்!

அப்பொழுது பேதுரு, இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துக்கொண்டு வெளியே போய், மனங்கசந்து அழுதான். மத்தேயு 26:75

எமக்கு விரோதமாகக் குற்றம் செய்பவர்களை மன்னிப்பதற்கு நாம் பின்நிற்கிறோம். அதிலும் எமக்கு யாராவது தீங்கிழைத்து அதனால் நாம் மிகவும் பாதிக்கப்பட்டால், அந்தச் சூழ்நிலையில் எமக்குத் தீங்கிழைத்தவரை நாம் மன்னிப்பதைக் குறித்து நினைக்கவே மாட்டோம். இதுதான் இன்று மனிதராகிய எமது நிலையென்று கூறினால் அது மிகையாகாது. ஆனால், கிறிஸ்துவோ எமக்குப் பாவமன்னிப்பைத் தரும் பொருட்டு, எமது பாவங்களினால் உண்டான தண்டனையைத் தாமே சுமந்து, பாவத்தின் தண்டனையிலிருந்து எமக்கு மீட்பைத் தந்ததோடுகூட, நாம் உணர்ந்து பாவ மன்னிப்பு கேட்கும் போது, எம்மை மன்னிக்க இன்றும் ஆயத்தமாகவே இருக்கிறார். எமக்கு மீட்பைத் தரும்பொருட்டு இவ்வுலகில் மானிடனாய் வந்துதித்தவர், மானிடனாய் இருக்கும்போதே மன்னிப்பின் உச்சக்கட்டம் என்ன என்பதை எமக்குப் புரியவைத்தார் அல்லவா!

யார் இடறலடைந்தாலும் தான் இடறலடையமாட்டேன் என்று பேதுரு சொன்னபோது, ‘இந்த இராத்திரியிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய்” என்று இயேசு எச்சரித்தார். இருந்தும், ‘உம்மோடே மரிக்கவேண்டிநேர்ந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன்” என்று உறுதியளித்த பேதுரு, ஆண்டவர் சொன்ன மாதிரியே மறுதலித்தான். ஆனாலும் மனங்கசந்து அழுதபோது ஆண்டவரின் மன்னிப்பைப் பெற்றுக்கொண்டான். மூன்றரை வருடகாலம் தன்னோடு ஒன்றாகவே இருந்தவன் தன் குற்றம் உணர்ந்து மனங்கசந்தபோது, அவனை மன்னிக்க இயேசு தயங்கவில்லை.

சிலுவையிலே நாம் மன்னிப்பின் உச்சத்தைக் காண்கிறோம். தன்னை நிந்தித்தவர்கள், அடித்தவர்கள், சிலுவையில் அறைந்தவர்கள், இவர்கள் தாங்கள் செய்கிறதை உணராதிருந்தபோதும், ‘பிதாவே, இவர்களுக்கு மன்னியும்@ தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்று சிலுவையில் தொங்கிய வேதனை யிலும் இயேசு மன்னித்தார். மன்னிப்பின் ஆண்டவரைத் தொழுதுகொள்ளும் நாம் மன்னிப்பதில் எங்கே நிற்கிறோம்? ஆண்டவரின் மன்னிப்பைப் பெற்றிருக்கிற நாம், நமக்கு விரோதமாய் தீங்கு செய்தவர்களை மன்னிக்க ஏன் தயங்குகிறோம்? எப்படிப்பட்ட தீமையாய் இருந்தாலும், அதனால் நாம் பாதிக்கப்பட்டிருந்தாலும், பிறரை மன்னிப்போம். ‘எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.” மத்தேயு 6:12

? இன்றைய சிந்தனைக்கு:

என்னை மன்னித்த ஆண்டவருக்கு மகிமை செலுத்த, நானும் எனக்கெதிராய் தீங்கிழைத்தவருக்கு மன்னிக்கவேண்டும், அதை நான் செய்வேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin