? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2கொரிந்தியர் 3:7-18

கிறிஸ்துவினால் உண்டான மகிமை

நாமெல்லாரும் திறந்த முகமாய் கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். 2கொரிந்தியர் 3:18

யுத்தத்தினால் மின்சாரம் தடைப்பட்டிருந்த இடத்தில் பிறந்த குழந்தையொன்று, முதன் முறையாக கொழும்புக்கு வந்தபோது, மின்சார விளக்கையே ஒருபோதும் கண்டிராததால், இரவில் வாகனங்களின் வெளிச்சத்துக்கு முகங்கொடுக்க முடியாமல் தன் தந்தையின் தோளின்மீது தலைசாய்த்துப் படுத்தது. இதைப் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. பிள்ளையின் கண்கள் வாகன வெளிச்சத்துக்குக் கூச்சமடைந்ததே இதற்கான காரணம். மோசே நாற்பது நாட்கள் மலையின்மேல் தேவபிரசன்னத்தில் இருந்துவிட்டுக் கீழே இறங்கி வந்தபோது, அவனது முகத்தின்மீது இருந்த மகிமைக்கு முன்னால் இஸ்ரவேலரால் நிற்க முடியாமற்போனது. அதனால் மோசே முகத்தின் மீது முக்காடு போடவேண்டியதாயிற்று. கர்த்தரின் மகிமை மோசேயின் முகத்தில் பிரகாசித்ததாலேயே மோசே கர்த்தரோடு இருக்கும்போது முக்காடு இல்லாதவனாக வும், அவ்விடம்விட்டுக் கீழே இறங்கி வரும்போது முக்காடிட்டவனாகவும் இருந்தான். அவ்வண்ணமாய் மோசேயின் முகம் பிரகாசித்தது.

எழுத்துக்களில் பொறிக்கப்பட்டும், கற்பலகைகளில் எழுதப்பட்டதுமான மரணத்துக் கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலேயே, கர்த்தரின் மகிமை இஸ்ரவேலர் பார்க்கக்கூடாத அளவுக்குப் பிரகாசித்ததானால், அந்த மகிமை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்பதைச் சிந்திக்கும்படி பவுல் இன்று நம்மையும் தூண்டுகிறார். அந்த மகிமைக்குள் பிரவேசிக்கும் சலாக்கியத்தை, கிறிஸ்து தமது மரணத்தினால் இன்று நமக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறார். நாமெல்லாரும் திறந்த முகமாய் கண்ணாடியில் பார்ப்பதுபோல அந்த மகிமையைக் காண்போம். என்ன பெரிய பாக்கியம் இது!

இந்தப் பாக்கியத்தைப் பெற்றிருக்கிற நமது வாழ்வு எப்படிப்பட்டதாயிருக்கிறது? இவை யாவும் கிறிஸ்துவினால் எமக்குக் கிடைக்கப்பெற்றவையே தவிர நாம் தகுதி உள்ளவர்கள் என்று நமக்குக் கிடைத்தவையல்ல. கிறிஸ்துவின் மீட்பினால் மேன்மையான சலாக்கியத்தைப் பெற்றுக்கொண்ட நாம் அதற்குப் பாத்திரவான்களாய் நடந்து கொள்வது அவசியம். இந்தக் காலங்கள் எமக்கு வருடாவருடம் வரும் வசந்தகாலம்போல கடந்துவிடாமல், எம்மை நாம் ஆராய்ந்து பார்க்கவும், கிறிஸ்துவினால் நாம் பெற்றுக்கொண்ட சலாக்கியத்தை நினைவிற்கொண்டு, அதைப் பெற்றுக்கொள்ளாமல் இருப்பவர் களில் கரிசனை கொள்பவர்களாகவும் இருந்து பணியாற்றுவோம். தேவனுடைய கிருபையினாலே இலவசமாய்ப் பெற்றுக்கொண்ட சலாக்கியத்தை இலவசமாய்க் கொடுப்பது நம்மேல் விழுந்த பொறுப்பு. ‘இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும் பொருட்டாக, எங்கள் இருதயங்களில் பிரகாசித்தார்.” 2கொரிந்தியர் 4:6.

? இன்றைய சிந்தனைக்கு:

நான் பெற்ற விடுதலையை, தேவன் அருளிய மீட்பை இதுவரை எத்தனைபேருக்கு நான் அறிவித்திருக்கிறேன்?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin