? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: மத்தேயு 11:25-30

இளைப்பாறுதல் அளிப்பவர்!

வருத்தப்பட்டு பாரஞ் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். மத்தேயு 11:28

குடும்பத்தில் ஒரே மகன், வியாதிப்பட்டான். பயங்கரமான சிறுநீரக வியாதி அவனை வாட்டியது. அவன் தாயோ கவலைகொண்டாலும், கர்த்தரைத் தேட மனதில்லாதவளாக, சுயவழிகளையும், மனுஷ ஞானத்தையும், மார்க்கபக்தியையும் நம்பி அலைந்து திரிந்தாள். வியாதியோ முற்றியது. மகனின் உயிருக்கே வைத்தியர்கள் காலக்கெடு குறித்துவிட்டனர். கைவிடப்பட்ட நிலையில் வேண்டாவெறுப்பாக ஒரு சுவிசேஷ கூட்டத்திற்குச் சென்றாள் தாய். மண்டப வாயிலுக்குள் நுளையும்போதே, “வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்” என்ற சத்தம் செவிகளைத் துளைத்தது. அவள் உள்ளே சென்றாள். வார்த்தை அவள் இதயத்தை ஊடுருவிச் சென்றது. மகனுடைய சுகத்திற்காக ஜெபிக்கச் சென்றவள் தனது பாவ நிலைமையைக் குறித்து மனங்கசந்து அழுதாள். இளைப்பாறுதலைக் கண்டாள், குணமடைந்தாள், பின்னர் மகனும் படிப்படியாகக் குணமடைந்தான். மூன்றாவது வயதிலே இன்னும் மூன்று மாதங்கள் என்று காலம் குறிக்கப்பட்ட பையன் இன்று இருபது வயது நிரம்பிய வாலிபனாகத் திகழ்கிறான். என்ன ஆச்சரியம். இன்று அந்தக் குடும்பம் முழுவதுமே கர்த்தரையே சேவிக்கின்றது.

இயேசு நம் ஒவ்வொருவரையுமே அழைக்கிறார். நமது பாரத்தை ஏற்றுக்கொள்ள அவர் ஆயத்தமாகவே இருக்கிறார். நமது பாரத்தைச் சுமக்க மாத்திரமல்ல, நமக்கு இளைப் பாறுதல் தரவும் அவர் தயாராயிருக்கிறார். ஆனால், ஒரு விடயம். நமது பாரத்தை அவரிடம் இறக்கிவிட்டு, அவர் தருகின்ற நுகத்தடியை நாம் ஏற்றுக்கொண்டு அவர் கற்றுத்தருகின்ற வழியில் நாம் நடக்கவேண்டும். ஆண்டவருடைய நுகத்தடி நமது தோளின்மீது இல்லாவிட்டால். சத்துரு மீண்டும் தனது நுகத்தை நமது தோள்களில் வைத்து நம்மை அழுத்துவான் என்பது ஆண்டவருக்குத் தெரியும். ஆகவே, தம்மிடம் வருகிறவர்கள், ஆத்தும இளைபாறுதலைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதே ஆண்டவருடைய சித்தமாகும்.

இப்படியிருக்க, நமது மனப்பாரங்களை ஏன் வீணுக்குச் சுமக்கவேண்டும்? “என்னிடம் வா” என்றழைக்கும் இயேசுவின் குரலுக்குப் பதிலளிக்கத் தயங்குவது ஏன்? அவரிடம் போனால் நமது சுயவிருப்பங்களை விட்டுவிட நேரிடுமோ என்று பயப்படுகிறோமா? சுயம் நம்மை ஆளுகைசெய்யும்வரை நம்மால் நமது பாரங்களை இறக்கிவைக்கவும் முடியாது, வாழ்வில் இளைப்பாறுதலும் கிடைக்காது. விசுவாசத்துடன் இயேசுவண்டை முழங்கால்களை முடக்குவோமா! இயேசுவானவர் தருகின்ற இளைப்பாறுதலை இன்றே பெற்றுக்கொள்வோமாக.

? இன்றைய சிந்தனைக்கு:

இன்று மனதை அழுத்துகின்ற பாரம் என்ன? ஏன் நான் இப்போதே இயேசுவிடம் முழங்காற்படியிட்டு அறிக்கையிடக்கூடாது?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin