📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: அப்போஸ்தலர் 4:24-32

ஏகோபித்துக் கூடுங்கள்!

இஸ்ரவேல் புத்திரர் பட்டணங்களிலே குடியேறி, …எருசலேமிலே கூடினார்கள். எஸ்றா 3:1

இன்றைய வேத வாசிப்பு பகுதியிலே, வித்தியாசமான நோக்கத்தோடு கூடிய இரண்டு கூட்டங்களைப் பார்க்கலாம். முதலாவது, 26வது வசனத்திலே “அதிகாரிகள் ஏகமாய் கூட்டங்கூடினார்கள்” என்பதாக வாசிக்கிறோம். ஆனால் அவர்கள் பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாகக் கூடினார்கள். வேதனையான காரியம்! இன்றைக்கும் பிழையான திட்டங்களை வகுப்பதற்காக ஒரேமனமாய் கூடுகிற கூட்டங்கள் பல உண்டு. ஆகவே, நாம் சேரும் கூட்டத்தாரைக்குறித்து கவனமாய் இருப்போம். அடுத்தகூட்டம், 32வது வசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி, திரளான விசுவாச கூட்டத்தார், ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாய் இருந்தார்கள். அந்த இடத்தில் தேவ ஆவியானவர் கிரியைசெய்ய ஆரம்பித்தார். அந்த இடம் அசைய ஆரம்பித்தது. எல்லோரும் ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். தேவ வசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள். அவர்களுடைய சகலதும் சகலருக்கும் பொதுவாயிருந்தது. அங்கே ஒரு ஐக்கியம் காணப்பட்டது. இது ஆதிச்சபை வளர ஏதுவாயிற்று. இன்றும் நாம் விசுவாசிகளாக ஆண்டவருடைய சமுகத்தில் ஒன்றுகூடுகிறோம். ஆனால் அன்று காணப்பட்ட ஒரே மனம், ஒரே இருதயம், ஐக்கியம் நமக்குள் இருக்கிறதா?

எஸ்றாவின் நாட்களில், இஸ்ரவேலர் பட்டணங்களில் குடியேறி ஏழாம் மாதமான போது, எருசலேமிலே கூடினார்கள். யூதருக்கு ஏழு என்பது ஒரு நிறைவை, பரிபூரணத்தைக் குறிக்கிறது. அப்படியாக ஏழாம் மாதத்திலேதான் ஜனங்கள் கூடினார்கள். தாம் எருசலேமுக்குத் திரும்பிய நோக்கத்தை அவர்கள் மறக்கவில்லை. ஆலய வேலைக்காக மனமுவந்து அள்ளிக்கொடுத்தவர்கள், அது போதாதென்று ஆலய வேலையைஆரம்பிக்க ஏகமாய் வந்துசேர்ந்தார்கள். இப்படியாக தேவன் தமது பிள்ளைகள் ஒன்றிணைந்து வரும்போது அவர்களது நோக்கத்தை அவர் கவனிக்கிறார்.

நாமும் சில சில காரியங்களைச் செய்துவிட்டு, அல்லது விரும்பியோ விரும்பாமலோ பணத்தைக் கொடுத்துவிட்டு கடமை முடிந்தது என்று ஒதுங்கிவிடுவதுண்டு. ஆனால், தமது ராஜ்யத்தைக் கட்டியெழுப்ப தேவன் நம்மை ஒன்றிணைந்து வரும்படி அழைக்கிறார். தீமைக்கென்று கூடும் கூட்டங்களைத் தவிர்த்து, ஜெபத்திலும் ஐக்கியத்திலும் நிலைத்திருக்க நம்மைக் ஏகமாய்க் கூடும்படி அழைக்கிறார். மக்களுடைய இருதயங்களை தேவன் வாழுகின்ற ஆலயங்களாக தேவனுக்கென்று கட்டியெழுப்பும் பணியில் ஏகமனதாய் ஒன்றுகூடி வரும்படி அழைக்கிறார். நாம் இப்படிப்பட்ட மக்களுடன் ஒன்றுகூடுவோமா? அல்லது, தவறான மக்களுடன் ஒன்றுகூடப்போகிறோமா? தேவனுடையபிள்ளைகளாகிய நாம், எப்போதும் ஏகமாய் ஒன்றுகூடி, தேவ ராஜ்ய பணியில் ஒரே மனமாய் வேலை செய்யவே அழைக்கப்பட்டிருக்கிறோம்.

💫 இன்றைய சிந்தனைக்கு:

நம்மெல்லாருக்குள்ளும் கிரியை செய்கிறவர் ஒரே ஆவியான வராக இருந்தால், இன்று நம்மிடையே பிணக்குகளும் பிளவுகளும் ஏன்?

📘 அனுதினமும் தேவனுடன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *